சுரபியுடன் ஒரு கலைப் பயணம்
"பாட்டுப் பாடவா, பார்த்து பேசவா"

ஆஹா, என்ன அருமையான பாட்டு! ஆட வேண்டும் போல் தோன்றுகிறதா? சென்னை டிஸ்கோக்களில் பழைய பாடல்களின் தாளத்திற்கு ஆடுவது பிரபலமாக இருக்கும் இவ்வேளையில் அங்கு இப்பாடலை அடிக்கடி கேட்கலாம். ஆனால் விரிகுடாப் பகுதியில், மேடையில்?

அந்தி மயங்கும் அழகான ஒரு சாயங்கால வேளையில் ஸான்ஹோஸெ சி.இ.டி. கலையரங்கில் சுரபி இசைக்குழு வழங்கிய 'சமர்ப்பணம்' என்னும் அருமையான பழைய பாடல்கள் நிகழ்ச்சியில் கேட்டதே இந்தப் பாடல். ஏ.எம். ராஜாவே நேரில் பாடுவது போல் பிரமை ஏற்பட்டது. அசோக் சுப்ரமணியமும், சுரபி குழுவினரும் காஞ்சி மஹாஸ்வாமியின் மணி மண்டபத்திற்கு நிதி திரட்ட நடத்தியது இந்த நிகழ்ச்சி. ஓரிருக்கையில் அமையவிருக்கும் மணி மண்டபம் கட்டமைப்பில் மிகச் சிறந்ததாகவும், மன அமைதிக்கு உகந்ததாகவும் இருக்கும் என்கின்றனர். அதே நேர்த்தியை நிகழ்ச்சியிலும் காண முடிந்தது.

வாருங்கள், சுரபியுடன் ஒரு இசைப் பயணத்தை மேற்கொள்வோம்.

எஸ்.என். பிரபு, முரளி கிருஷ்ணா இவர்களால் விரிகுடாப் பகுதியிலுள்ள திறமை வாய்ந்த பாடகர்களுடன், மிருதங்கம், கீ போர்ட், கிடார், வீணை, கடம், தபேலா, மோர்சிங், புல்லாங்குழல் வல்லுனர் களுடனும் இரண்டு வருடங்களுக்கு முன் சுரபி துவங்கப் பட்டது. இப்பொழுது, பரந்து விரிந்து இந்தியா, நியூயார்க் போன்ற இடங்களிலிருந்தும் இசை விற்பன்னர்களை அரவணைத்துப் புகழ் பெற்று வருகிறது. நிரலைப் பொறுத்து சுரபியைச் சாராத கலைஞர்களையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்துப் பெருமைப்படுத்துவது சுரபியின் தனிச்சிறப்பு. வெவ்வேறு தொழில்களில் மும்முரமாக இருந்தாலும் இசை என்னும் பாலம் இக் குழுவினரை இணைக்கிறது.

சுரபியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு ஆச்சரியம்/புதுமை காத்திருக்கும். நிரலை மிக்க சிரத்தையுடன், ரசிகர்களின் விருப்பத்தையும், தன்மையையும், சூழ்நிலை யையும் உணர்ந்து அமைக்கின்றனர். உதாரணமாக, சமர்ப்பணம் நிகழ்ச்சியில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினியின் அற்புத மான பழைய திரைப்படப் பாடல்களைப் பாடியது அரங்கத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. முன்னாளில் பின்னணியை விடப் பாடலுக்கு முக்கியத்துவம் அதிகம். வார்த்தைகளைக் கோர்வையாகவும், சுத்தமாகவும் உச்சரிக்க வேண்டும். இதில் ஒரு மாற்று கூடக் குறையாமல் தத்ரூபமாகப் பாடிப் பலத்த கைதட்டல்களை நிகழ்ச்சி முழுக்கப் பெற்றார்கள். பிரபுவின் கணீர் குரலில் பாவமுடனும், தக்க குழைவு களுடனும் பாடப்பட்ட 'பாட்டும் நானே பாவமும் நானே' மிகுந்த பாராட்டைப் பெற்றுத் திரும்பவும் பாடப் பெற்றது. ஜானகியையும், ஜிக்கியையும் ஆர்த்தியும், ஷீலாவும் நம் கண் முன்னே கொண்டு வந்தனர். டிரம்ஸ் வாசித்த ஹரி நிகேஷ், அற்புதமாக வாத்தியத்தைக் கையாண்டது மட்டுமல்லாமல், அமர்க்களமாகத் தேன் நிலவின் 'பாட்டுப் பாடவா'வையும் பாடியது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. நிகழ்ச்சியில் சாதனை படைத்த பழம்பெரும் மிருதங்க வித்வான் எல்லா வெங்கடேஸ்வர ராவ் கெளரவிக்கப்பட்டார்.

மற்றொரு நிகழ்ச்சி - இலங்கைத் தமிழர் களுக்காக சுரபி குழுவினர் கொடுத்தனர். அவர்களது ரசிகத் தன்மைக்கு உகந்த பாடல்களைத் தேர்ந்து வழங்கினர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் பாடல்கள் வழங்கி வருகின்றனர். பி. சுசிலா, இசையமைப்பாளர் தேவா, எல்லா வெங்கடேஸ்வர ராவ் போன்றவர்களுடன் சேர்ந்திசைத்த மற்றும் இந்தியா விலுள்ள புகழ்மிக்க இசையமைப்பாளர்களுடன் குறுந்தகடுகள் வெளியிட்டுள்ள அனுபவம் இக்குழுவில் பலருக்கு உண்டு. சுரபியின் சிறப்பு, அவர்களின் தனித் திறமைகள் மட்டுமல்ல, அக்குழுவினரின் தணியாத ஆர்வமும், ஒருமித்த ஈடுபாடும், ஒழுங்கான அணுகுமுறையும் ஆகும்.

கேட்கக் கேட்கத் தரமான இசையைக் கொடுக்கும் நோக்குடன் 'சுரபி' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட இக்குழு, அந்த நோக்கத்தை ஒரு சமூகப் பிரக்ஞையுடன் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறது. இவர்கள் பத்ரிகாஷ்ரமா, காஞ்சி மஹாபீடம் போன்ற பல நல்ல சமூக, சமய, மனிதாபிமானக் காரணங்களுக்கு உதவும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி முழு வரவையும் அக்காரியங்களுக்கே கொடுத் திருக்கிறார்கள். இசை மட்டுமல்லாது, நாட்டியம், நாடகம் போன்றவற்றையும் இணைத்துப் புதுமையான ஒரு கலாசாரப் படைப்பை வழங்கும் திட்டமும் இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும், சுரபியின் விடா முயற்சியும், கலையார்வமும் கைகோர்த்திருக்கும் இவ்வேளையில் இது கைகூடி வருவது நிதர்சனம்.

சுரபியின் கலைஞர்கள்:

முரளி கிருஷ்ணா - மேலாளர் / மிருதங்கம்
எஸ்.என். பிரபு - முதன்மைப் பாடகர்
ஆர்த்தி முரளி - முதன்மைப் பாடகி
வெங்கி
சுப்ரமணியம் - தாள வாத்திய / வாத்திய இசை ஒருங்கிணைப்பாளர்
ரங்கா - ட்ரம் பேட்ஸ் (drum pads)
ராஜ் - கீ போர்ட்
ராகேஷ் - ரிதம் / முதன்மை கிடார்
அருண் பிள்ளை - ட்ரிபிள் காங்கோ
ஷைலேன் கரூர் - பாஸ் கிடார்

சுரபியின் இணையம் www.surabhee.net

உமா, வேங்கடராமன்

© TamilOnline.com