ஓலம்
மாலை வெயிலில் நுதல் மட்டும் குங்குமமாய்ச் சிவந்திருக்க, பூமிக்கு வைத்த பொன்பிடியாய் செயின்ட் லூயிஸ் ஆர்ச் தகதகத்துக் கொண்டிருந்தது. புத்தகப்பையைத் தலையணையாக்கிக் கொண்டு புல் தரையில் படுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தான் ரவி. அதனுடைய எளிமையும் கம்பீரமும் அவனை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததே இல்லை. மனிதப் படைப்புகளிலே வெறுப்பு உண்டாக்காதவைகளில் இதுவும் ஒன்று. பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகு. எத்தனையோ முறை இங்கு வந்து இப்படி இதன்மேல் கண்பதித்துக் கிடந்திருக்கிறான். ஆனால் அலுப்பே தட்டியதில்லை. ஊசியின் காதுபோல் அவனுடைய கவனத்தையெல்லாம் வாங்கி மறுபுறத்தில் பிரபஞ்சத்தைக் காட்டும் கருவியாய் விளங்கியது அது. அதைப் பார்க்கப் பார்க்க அவனுள் கவிதை பிறக்கும். கதைகள் பிறக்கும்.

"கவிதை எழுதறேன் கதை எழுதறேன்னு தண்டத்துக்கு டயத்த வேஸ்ட் பண்ணிண்டிருக்கான்" என்று அம்மா புலம்புவாள். அம்மாவைப் பற்றி அவன் இப்போதெல்லாம் அதிகம் நினைப்பதில்லை. எதைப் பற்றியும் இப்போதெல்லாம் அதிகம் நினைத்துப் பார்ப்பதில்லை. 'வந்தா பாக்கியம் வராட்டி போக்கியம்' என்ற கணக்கில் வாழ்ந்து வருகிறான். இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த ரவியா இது என்று ஆச்சரியமாயிருக்கிறது. அம்மா இறந்த பின்பு 'தேமே' என்று வாழ்ந்து வருகிறான்.

சுஷ்மிதா ஒருத்திதான் அவனுக்கு இன்று இருக்கும் ஒரே பற்றுதல்.

"அடப்போடா, ஒருத்தி பின்னாடி மட்டும் சுத்தறதுக்கு மனசப் பழக்கி வச்சுட்டோம்னா ரிஷிகளாய்ட்டோம்னு அர்த்தம்" என்று கதையளந்திருக்கிறான். இன்று அவள் ஒருத்தியைத் தவிர வேறெதிலும் மனம் நிலைத்து நிற்பதில்லை. அவளை நினைக்கும் சமயத்தில் ஒரு சில முறை ஆதிராம் சுந்தர் எழுதிய 'மனதைக் கலைத்தது தியானம்' கவிதை ஞாபகத்துக்கு வரும். மடையன்! இந்தப் பெண் மீது மனது ஒருமுகப்படுவதால்தான் நான் கலைந்து போகாமல் இருக்கிறேன்.

அவள் மீது அபரிமிதமான நாட்டம் கொண்டிருப்பதை நினைத்துச் சில சமயம் மனது கலையும். "ச்ச... இவ்ளோ வேகமா அம்மாவுக்கு ஒரு ஸப்ஸ்டிட்யூட் கண்டு பிடிச்சுட்டோமா?" என்று தன் மீதே வெறுப்பு வரும். ஆனால் அந்த வெறுப்பும் ஒரு கணம்தான். நிலைக்காது. முந்தைய இரவு சாப்பிட்ட போது நடந்த உரையாடல் ஞாபகத்துக்கு வரும்.

இப்பொழுது அழுகை வந்தது. ராஜனும் ராதிகாவும் இந்தியா திரும்பி விடுவதாக முடிவெடுத்து விட்டனர். தனக்கென்று இருக்கும் பிணைப்பிகளில் ஒன்று அறுந்து போகிறது. அவர்களும் போனபின் சுஷ்மிதா ஒருத்திதான் என்று எண்ணுகையில் பயம் வயிற்றைக் கலக்கியது.

இவ்வளவு ஜனங்கள் வாழும் பூமியில் இப்படி ஒரு தனிமை சாத்தியமா?

மனதை மூடி அடைத்தவர்களுக்கு உலகம் கதவைத் திறக்காது.

"ஐயோ அம்மா..." என்று மனம் கதறியது.

சின்ன வயதில், ஒரு முறை அப்பா குடித்து விட்டுப் போட்ட ஆட்டத்தில் கதிகலங்கி இருந்த போது, அம்மா அணைத்துச் சொன்னாள் "இப்போ சொல்றேன் கேட்டுக்கோடா ரவி. அம்மா அப்பா யாரும் சாஸ்வதமில்ல. யாரையும் நம்பாத. பகவான் ஒருத்தன்தான் சாஸ்வதம். அவன மட்டும் நம்பு."

யாரும் சாஸ்வதமில்லை என்று புரிந்து போயிற்று. கடவுள்? இன்றுவரை பிடிபடவில்லை. புரிபடவில்லை.

இல்லாத கடவுளையும் நம்பாமல் இருக்கின்ற மனிதர்களையும் நம்பாமல், காட்டில் நட்ட தனிமரமாய் ஒரு வாழ்க்கை. தேவையா இது? இது என்ன தற்கொலைக் கூக்குரலா? ஐயோ... எவ்வளவு உடைந்து போய் விட்டேன்?! இவ்வளவு பலவீன மானதா என் உள்ளம்? எவ்வளவு முறை எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்!

"ரவி, ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?"

"என்ன... நான் தெரப்பிக்குப் போகணுமா?"

"அதுல்லடா... ஒண்ணு". ராஜன் வழிந்தான்.

"ஹா... ஹா... நல்ல ஜோக். சிரிச்சுட்டேன், போறுமா?"

"கோச்சுக்காதடா. You look pathetic. You really need some help."

"தெரியுண்டா. ஏதாவது post-trauma depression-னு பேர் வெச்சு prozac மாதிரி எதையாவது சாப்டுன்னுவான். நம்மூர்ல சொல்லுவாங்க தெரியுமா? மெதப்புல இருக்கான்னு, அந்த மாதிரி நானும் மெதப்புல இருக்க வேண்டியதுதான்."

"படிச்சவன் மாதிரியாடா பேசுற? Depression-ங்கிறது..."

"ஹே ராஜன், இங்க பாரு. இதுதான் நான். இப்படித்தான் நான் இருப்பேன். முடியும்னா ஏத்துக்குங்க. இல்லேன்னா வாயை மூடிக்கிட்டு என்னைத் தனியா வுட்டுட்டுப் போங்க" என்று ஆங்கிலத்தில் பொரிந்தான்.

ராஜனுக்கு வாயடைத்துப் போயிற்று. ப்ரொ·பஸர் ஆண்டர்ஸனிடம் இன்று நாளை என்று சமாளித்து அவரைக் கைவிட வைத்தாயிற்று.

சுஷ்மிதா... ச்ச... அவளுக்காகவாவது வாழணும். இந்தத் தற்கொலை எண்ணம் கூடாது. அடச்ச... இது தற்கொலை எண்ணமே இல்லை. வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாவிதமான கேள்விகளும் தோன்றும். அது போல்தான் இதுவும்.

அப்படியென்றால் ஏன் இதைப் பற்றி இவ்வளவு புலம்பல்? புலம்பு...புலம்பு... நன்றாகப் புலம்பு. ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. யார் புலம்பியும் எதுவும் நிற்காது. இந்தப் புலம்பலே கூட நிற்காது.

இன்னிக்கு நீ செத்தயானா பத்து நாளைக்கு அழுவா. சுஷ்மிதாவானா பதினோரு நாளைக்கு அழுவா. அதுக்கப் புறம் அதுவும் போச்சு. அழுகையும் சாஸ்வதமில்லை. இந்த அண்டமே சாஸ்வத மில்லை! நாம வாழ்ந்து என்ன செய்யப் போறோம்? எவனாவது கம்மனாட்டிக்குக் கையக் கட்டிண்டு வேல பாத்துண்டு அடிமையா வாழ்ந்துண்டு... இதுக்குச் செத்தே போகலாம்.

"செத்துட்டான்னு வச்சுக்கோயேன்... அவனுக்கு ஒண்ணுமில்ல... ஆனா இங்க இருக்கா பாரு அவாதான் படணும். புரியறதா? செத்துப் போறதுன்றது கோழத்தனம்." இவனே முரளிக்கு உபதேசம் செய்திருக்கிறான். பன்னிரண்டாம் வகுப்பில் முரளி கணிதத்தில் தேறாமல் போனபோது. அது ஒரு கலாட்டா.

ஆனால், கோழைத்தனத்தில் என்ன தப்பு? அதுவும் ஒரு மனித இயல்புதானே. கோழைத்தனத்தால் தானே இன்று உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய உழைப்பால் எவனோ கோடி கோடியாய் இலாபம் ஈட்டுவதைக் கண்டு எல்லாரும் கோழைகளாய் இல்லாமல் வெகுண்டு எழுந்தால் உலகில் பட்டினி ஏது பஞ்சம் ஏது?

தற்கொலை கோழைத்தனமில்லை. சுயநலம். தனக்காகப் பிறரை வதைக்கும் கொடூரம். அடுத்தவன் அழுதாலும் தன்னிலை உசத்தி என்னும் ஆணவம். ச்ச... அவ்வளவு சுயநலம் மிக்கவனா நான்?

எனக்கு வாழ்க்கையில் என்ன குறை? அடுத்த ஆண்டு PhD முடித்து விடுவேன். மாதர்த்தகைய மடவார் தம்முன்னரே காதற்கனியில் தலையாய் ஒரு தேவதை துணைவி... எல்லாவற்றையும் தாண்டி ராஜன் ராதிகா கண்ணன் போன்ற நண்பர்கள். வாழ்க்கையில் இதற்கு மேல் வேறென்ன தேவை?

"அம்மா... நீ இருக்கியோ இல்லியோ தெரியாது. இதுவரைக்கும் நான் ஒண்ணும் யார்கிட்டயும் வேண்டிண்டது கெடையாது. ஆனா ப்ளீஸ், என் கனவுகளக் காப்பாத்து. ப்ளீஸ் என்ன மறுபடியும் பழையபடி மாத்து."

அவனைப் போலவே அவனருகில் புல் தரையில் புத்தகப்பையைத் தலையணையாக்கிப் படுத்திருந்த சுஷ்மிதாவின் கண்களிலும் நீர் வழிந்து கொண்டிருந்தது.

அவன் அன்னையின் ஆசியைப் போல் இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து கொண்டிருந்தது.

அருளரசன்

© TamilOnline.com