பரிசு
குக்கர் சத்தம் கேட்டு அவசரமாக கொல்லைப்புறத்திலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த கற்பகம் வழியில் ஒரு புத்தகப்பை இருப்பதைக் கவனிக்காமல் கால் இடறினாள். நல்ல வேளையாக சுவற்றைப் பிடித்ததனால் கீழே விழாமல் தப்பித்தவளுக்குச் சுருக்கென்று கோபம் வந்தது.

"ஏய் சசி, ரவி, இங்கே வாங்க. சனியன்களா எத்தனை தடவை சொல்லியிருக்கேன், புக் பேகை இப்படிப் பாதையிலே போடாதீங்கன்னு. சொன்னா கேக்கறீங்களா? யாரோட பை இது? சொல்லுங்க யாருது?" என்று உறுமினாள்.

சின்னவள் சசி மிரண்டு போய் "என்னுது தாம்மா, சாரிம்மா, நான் இனிமே வழியிலே போடமாட்டேம்மா" என்றாள்.

"ஆமாம் இதோட எத்தனையோ தடவை உனக்குச் சொல்லியாச்சு. நீ எதையுமே காதிலே போட்டுக்கறதேயில்லை. நீ என்னிக்கு நான் சொல்லி செஞ்சிருக்கிறே. உங்கப்பா சொன்னா எல்லாத்தையும் ஒழுங்கா செய்வே. நான் சொன்னா இளக்காரம், பதிலடி கொடுத்துப் பேசுவே. இப்ப உங்கப்பாவே போய் சேர்ந்தாச்சு. நீ உன் இஷ்டத்துக்குத்தான் நிக்கப்போறே" என்று படபடவென்று பொரிந்தாள் கற்பகம்.

"சரி விடும்மா, பாவம் சசி. ஏதோ தெரியாம செஞ்சுட்டா. போனா போகுதுன்னு விடேன். முன்னாடியெல்லாம் நீ இப்படி இல்லே. ரொம்ப ஆசையா பாசமா இருப்பே. அப்பா இறந்து போன இந்த ஆறு மாசத்துல நீ ரொம்பதான் மாறிப்போயிட்டேம்மா. எப்பவும் எதையோ யோசிச்சிக்கிட்டே இருக்கிறே. எங்க மேல எரிஞ்சு விழறே. ஏன்னே தெரியலே, நீயாவும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறே" என்று தவிப்பாய்க் கூறினான் ரவி.

கற்பகம் கூனிப்போனாள். தன் தவறை உணர்ந்து சசியை வாரி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு "சாரிடா செல்லம், நான் அந்த மாதிரி எரிஞ்சு விழுந்திருக்கக் கூடாது. சமத்தா ஸ்கூலுக்குப் போயிட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தாள்.

உள்ளே வந்து கதவைத் தாளிட்ட கற்பகம் சேரில் சாய்ந்தாள். கடந்த கால யோசனையில் மூழ்கினாள். கடிகாரம் 9 மணி அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அப்போதுதான் அன்று டாக்டரிடம் போகவேண்டுமே என்று ஞாபகம் வந்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து பரபரவென்று காரியங்களை யெல்லாம் முடித்து, குளித்து உடைமாற்றித் தயாரானாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு பஸ் பிடித்து ஆஸ்பத்திரியை அடைந்தாள்.

மனதில் என்னவெல்லாமோ கவலைகள். ரிசல்ட் என்ன வந்திருக்குமோ என்ற பயம். இவைகளோடு கற்பகம் டாக்டரைப் பார்க்க வெயிட்டிங் ரூமில் காத்திருந்தாள். அவள் முறை வந்தவுடன் டாக்டரைப் பார்க்கச் சென்றாள்.

டாக்டர் அவளைப் புன்முறுவலோடு வரவேற்றார். "எப்படி இருக்கேம்மா கற்பகம்? பசங்களெல்லாம் நல்லா இருக்காங்களா?" என்று பரிவோடு விசாரித்தார்.

கற்பகம் தயக்கத்தோடு டாக்டரை ஏறிட்டு "டாக்டர் போன வாரம் எடுத்த டெஸ்ட்..." என்று இழுத்தாள்.

டாக்டர் ஒரு பெருமூச்சோடு "ஆமாம்மா, போன வாரம் நீயா வந்து எனக்கு HIV சோதனை எடுங்க டாக்டர்னு சொன்னே. நானும் எடுத்தேன். ரிசல்ட் பாசிட்டிவ்னு சொல்லுது. எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. உன்னை எனக்குப் பல வருடமா தெரியும். நீ ரொம்ப நல்ல ஒழுக்கமான குடும்பப் பெண்ணுன்னும் தெரியும். அப்படி இருக்கறச்சே எப்படி உனக்கு AIDS நோய் வந்திருக்கும்னு எனக்கு இன்னமும் புரியலே" என்றார்.

கற்பகத்திற்குத் தலை சுற்றியது. தனக்கு AIDS நோய் இருப்பது தெரிந்து பயந்து போனாள். அவளுக்கு இறக்கும் தருவாயில் தன் கணவன் அவளிடம் கூறியது ஞாபகம் வந்தது. "கற்பகம் என்னை மன்னிச்சுடு. எனக்குத் தகாத உறவுகள் இருந்ததினாலே 2 வருஷத்திற்கு முன்னாலேயே AIDS நோய் வந்துவிட்டது. அதை உன்னிடமிருந்து மறைத்து எனக்கு காச நோய் என்று பொய் சொல்லி உன்னுடன் குடும்பமும் நடத்தி விட்டேன். உண்மையைச் சொன்னால் எங்கே சாகும் தருவாயில் அநாதையாகச் சாகும்படி ஆகிவிடுமோ என்ற பயத்தினால் தான் உன்னிடம் சொல்லவில்லை. தயவு செய்து என்னை மன்னித்துவிடு. பசங்களை நன்றாகப் பார்த்துக் கொள்" என்று கூறி இறந்து போனார்.

"கற்பகம், கற்பகம்" என்று டாக்டர் கூப்பிடுவதைக் கேட்டு நினைவுக்குத் திரும்பினாள்.

"என்ன நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போறேன், நீ எங்கேயோ யோசிச்சிக் கிட்டிருக்கியே. எப்படி வந்தது இந்த நோய்னு எனக்குச் சொல்ல முடியுமா கற்பகம்?" என்றார் டாக்டர்.

அதற்கு கற்பகம் "சாகும் தருவாயில் என் கணவர் எனக்குத் தந்த பரிசு டாக்டர் இந்த நோய்" என்றாள்.

டாக்டர் அவளை கேள்விக்குறியோடு பார்த்து "அப்ப உன் புருஷன் காச நோய்ல இறந்தார்னு சொன்னது..."

"பொய்தான், அவர் என்கிட்டே சொன்ன பொய்யை நான் உங்ககிட்டே சொன்னேன்" என்றாள்.

"சரி விடு. மேற்கொண்டு என்ன செய்யறதா இருக்கே?"

"அதான் ஒண்ணுமே புரியலே டாக்டர். நானே இந்த செய்தியை கேட்டு ஆடிப் போயிருக்கேன். நான் வீட்டுக்குப்போயி நல்லா யோசிச்சிட்டு அடுத்த வாரம் வரும்போது சொல்றேன் டாக்டர்" என்றுவிட்டுக் கிளம்பினாள்.

ஒரு வாரம் கழித்து டாக்டரைச் சந்தித்தபோது அவளுடைய தெளிந்த முகத்தைப்பார்த்த டாக்டர், என்ன சொல்லப்போகிறாள் என்று ஆர்வத்தோடு பார்த்தார்.

"டாக்டர் நான் ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டேன். நான் கேக்காமலேயே எனக்குக் கிடைத்த பரிசு இந்த நோய். இதுக்காக வெக்கப்பட்டு வீட்டுலே அடஞ்சு கிடந்தாப் பயன் இல்லே. என்னைப் போலப் பல பேர் இருப்பாங்க. அதனாலே, இந்த நோயைப் பற்றின செமினார், கூட்டங்கள் எல்லாத்துக்கும் போய் என் கதையைச் சொல்லி, தப்பு செய்றவங்களுக்கு மட்டுமில்லாமே ஒரு பாவமும் செய்யாத வங்களுக்கும் இந்த நோய் வரலாம்னு எடுத்துச் சொல்லப்போறேன்" கற்பகத்தின் குரலில் தெளிவும் உறுதியும் இருந்தது.

"இந்த நோயைத் தடுக்க என்னாலான எல்லா முயற்சியும் செய்யப்போறேன். கூடவே என் பிள்ளைங்களை நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு என் நோயைப் பத்தி பக்குவமா எடுத்துச் சொல்லி அவங்களையும் இந்த நோய்க்கு எதிராப் போராட வைக்கப் போறேன். எனக்கு வந்த இந்த துர்பாக்கியத்தை என் பாக்கியமாக் கருதி இதை ஒழிக்கிறதே என் வாழ்வின் லட்சியமா வச்சிக்கப்போறேன். டிரீட் மெண்டை எப்ப ஆரம்பிக்கலாம் டாக்டர்" என்றவளைப் பெருமிதத்துடன் பார்த்தார் டாக்டர்.

நந்தினிநாதன்

© TamilOnline.com