அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன்
அறிவியல் தொழில்நுட்பத்தின் வரலாறு என்பது சமச்சீரற்ற வளர்ச்சி நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. மேலைத் தேசம் கீழைத் தேசம் என்ற வரையறுப்புகளைக் கடந்து அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையும் கண்டுபிடிப்பும் உலகளாவிய மாற்றங்களை விரிவுபடுத்தின. இயற்கை, சமூகம், மனிதன் பற்றிய ஆய்வுகள் பல்கிப் பெருகின.

தமிழ்நாட்டில் பிறந்து இந்திய சிந்தனையின் வளங்களை மூலமாகக் கொண்டு நவீன அறிவியல் கண்ணோட்டத்தைத் தேடிக் கற்று 'இளம் வயதிலேயே' அறிஞர் பெருமக்களால் நேசிக்கப்பட்டவர் தன் சர். சி.வி. இராமன். இவர் நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி. 'இராமன் விளைவு' என்கிற அறிவியல் உண்மையை உலகுக் கொடுத்த மேதை.

திருச்சியில் சந்திரசேகர ஐயர் - பார்வதி தம்பதியருக்கு மகனாக 1888 நவம்பர் 7இல் சந்திரசேகர வெங்கட்ராமன் பிறந்தார். இவரே பின்னாளில் சர். சி.வி. இராமன் என உலகம் முழுவதும் அறியப்பட்டவர்.

இராமன் 14 வயதுவரை விசாகப் பட்டினத்தில் கல்வி பயின்றார். அவருடைய சுறுசுறுப்பு, மதிநுட்பம், கல்வித்திறமை ஆகியவை ஆசிரியர்களின் கவனத்தையும் அன்பையும் அவர்பால் ஈர்த்தன. ஆங்கிலத்தில் அவருக்கிருந்த புலமை சிறந்த பெளதிக இரசாயன நூல்களை எல்லாம் படித்து முடிக்கப் பேருதவியாக இருந்தது. இசைக் கலையிலும் சிறுவயது முதல் ஆர்வம் இருந்தது.

1901இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ வகுப்பில் சேர்ந்தார். அந்த வகுப்பில் இவர் சிறுவனாகவே காணப்பட்டார். ஆனால் அவரது கல்வித் தேர்ச்சி, ஆர்வம், ஈடுபாடு இவற்றால் கல்லூரி எங்கும் பேசப்படக்கூடிய கவனிப்புக்குரிய மாணவராக இருந்தார். பிஏ தேர்வில் முதல் மாணவராகத் தேறினார்.

பின் மாநிலக் கல்லூரியிலேயே எம்ஏ வகுப்பில் சேர்ந்தார். அதிலும் பெளதிகத்தையே பாடமாக ஏற்றுக் கொண்டார். பாடப் புத்தகங்களுடன் மட்டும் நிற்காமல் பல்வேறு மேல் நாட்டு விஞ்ஞானிகளின் புத்தகங்களையும் ஆழ்ந்து கற்று வந்தார்.

ஒருநாள் ஒளி சம்பந்தமான சோதனை ஒன்றை இராமன் செய்து பார்த்த பொழுது சில புதுமைகளைக் கண்டார். அதுபற்றிக் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்கட்டுரை மேல்நாட்டு அறிவியல் ஆய்வு இதழில் வெளிவந்தது. பலரது பாராட்டுக்கும் கவனத்துக்கும் உள்ளானார். அது முதல் அவருடைய கட்டுரைகள் அடிக்கடி Nature, Philosophical Magazine உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்தன. இராமன் கல்லூரியில் பயின்றபோதே அறிஞர்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் நேரிட்டன.

ஒருநாள் அவருடன் பயின்றுவந்த மாணவர் ஒலி சம்பந்தமான பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தார். அதில் தோன்றிய சில மாறுபட்ட விளைவுகளைக் கண்ட அவர் விளக்கம் பெற ஆசிரியர்களின் உதவியை நாடினார். ஆனால் ஆசிரியர்களுக்கும், உடனிருந்த மற்ற மாணவர்களுக்கம் விளக்கம் கூற இயலாதபடிக் குழப்பமேற்பட்டது. அப்போது அங்கிருந்த இராமன் சோதனையை ஊன்றிக் கவனித்து, விளைவுகளின் தன்மையைப் புரிந்து கொண்டார். அவை பற்றி அங்கிருந்தோருக்கு நன்கு புரியும் படியாக விளக்கினார். எல்லோரும் வியப்படைந்தனர். இராமன் அச்சோதனையைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி மேலைத்தேச இதழ் ஒன்றில் வெளியிட்டார். பலர் பாராட்டிக் கடிதம் அனுப்பினார்கள்.

1901ஆம் ஆண்டு தனது 14வது வயதில் எம்ஏ தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராகத் தேறினார். அதே நேரம் இந்திய அரசின் நிதித்துறை தனது உயர்ந்த பதவிகளுக்குத் தேர்வு நடத்தியது. இராமன் இத்தேர்வில் கலந்து கொண்டு இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்.

1907ஆம் ஆண்டு இராமன் உதவி அக்கெளன்டென்ட் ஜெனரலாகப் பதவியேற்றார். கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பின் 1909 இல் பர்மாவில் நாணயச் செலாவணித் தலைவராகப் (Currency Officer) பணிமாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறு பல்வேறு அரசுப் பதவிகளிலும் பணிபுரிந்தார்.

ஆனால் அவரிடம் அறிவியல் வேட்கை வளர்ந்து கொண்டே இருந்தது. தேடலும் கற்றலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. கொல்கத்தாவில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒருநாள் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு டிராம் வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' என்று எழுதப்பட்டிருந்த பெயர்ப்பலகை அவருடைய கண்ணில் பட்டது. இராமன் உடனே வண்டியிலிருந்து இறங்கி பெயர்ப்பலகை மாட்டியிருந்த கட்டிடத்தினுள் நுழைந்தார்.

தனது அறிவியல் ஆராய்ச்சியின் தாக்கத்தை வெளிப்படுத்தி அக்கழகத்தில் சேர்ந்தார். கழகத்தை உரிய முறையில் முழுவதும் பயன்படுத்தத் தக்க ஒருவரை கழகம் §டிக் கொண்டிருந்தமையால் இராமன் உடனே கழகத்தில் சேர்க்கப் பட்டார். இரவு பகலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்போது கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர். ஆசுதோஷ் முகர்ஜி இராமனைத் தம்முடன் பணியாற்ற அழைத்தார். நீண்ட குழப்பத்துக்கு பின்னர் அப்பொறுப்பினை ஏற்றார்.

1921இல் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பல்கலைக் கழகங்களின் மாநாட்டில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியாக இ¡மன் இங்கிலாந்துக்கு அனுப்பட்டார். அங்கு பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளுடனும் கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒருநாள் கப்பலின் மேல்தளத்தில் இராமன் நின்று கொண்டிருந்தார். மத்தியதரைக் கடல் ஏன் நீல நிறமாகக் காணப்படுகிறது. வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்று அவர் மனம் அப்பொழுது சிந்திக்கலாயிற்று.

நீரிலுள்ள மூலக்கூறுகள் நீரின் வழியே செல்லும் சூரிய ஒளிக் கிரணங்களைச் சிதறச் செய்வதால் தான் கடலுக்கு நீல நிறத் தோற்றம் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கருதினார். கொல்கத்தா திரும்பியதும் ஆய்வகத்தில் சோதனைகள் நடத்தித் தாம் கருதியது சரியே என்று தெரிவித்தார். அது பற்றி விரிவாகக் கட்டுரை எழுதி 'நேச்சர்' இதழில் 'மூலக் கூறுகளின் ஒளிச் சிதறல்' (The Moilecular Scattering of Light) என்ற தலைப்பில் வெளியிட்டார்.

வெண்மை ஒளி ஏழு நிறங்களைக் கொண்டது. ஒரு பட்டகத்தின் (Prism) வழியே வெள்ளை ஒளியைச் செலுத்தினால், அதன் மறுபுறம் வெள்ளொளியின் பகுதிகளான ஏழு நிறங்களும் கொண்ட ஒரு நிறமாலை கிடைக்கிறது. அதே போல் நீரின் வழியேயும் சூரிய ஒளி செல்லும் பொழுது அது ஏழு நிறங்களாகப் பிரிக்கப்படுகிறது. நீரின் மூலகங்களால் மற்ற நிறக்கதிர்கள் சிதறுண்டு போக நீலநிறக்கதிர் மட்டுமே நமது கண்களுக்குப் புலனாவதால் கடல் நீலமாகத் தோன்றுகிறது. இதுபற்றி விவரமாக இராமன் விளக்கக் கட்டுரைகளை எழுதினார்.

இக்கட்டுரைகள் யாவற்றையும் தொகுத்து கொல்கத்தாப் பல்கலைக்கழகம் 1922இல் ஒரு நூலாக வெளியிட்டது. இந்த ஆராய்ச்சிகளை இராமன் தொடர்ந்து செய்து முடிவில் 'இராமன் விளைவு' (Raman Effect) என்று அழைக்கப்படும் கொள்கை யைக் கண்டுபிடித்தார். 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு சர். சி.வி. இராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கண்டு பிடிப்பு நாள் 1928 பிப்ரவரி 28. இதனையே இந்திய தேசிய அறிவியல் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது.

இந்திய அறிவியல் அறிஞர்கள் தங்கள் கட்டுரைகளை வெளியிட வெளிநாட்டு இதழ்களையே பெரும்பாலும் சார்ந்து இருக்க வேண்டி இருந்தது. இந்த நிலையை மாற்ற 1926இல் 'இந்திய இயற்பியல் சஞ்சிகை'யை இராமன் தொடங்கினார். ஒலி பற்றி இராமன் நடத்திய ஆராய்ச்சி உலகப் புகழ் பெற்றது. இராமனின் பேரும் புகழும் எங்கும் பரவியது. அவரை கெளரவப்படுத்தப் பலரும் போட்டி போட்டனர். பல்வேறு பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் இராமனைத் தங்களுடன் இணைத்துக் கொண்டன.

இராமன் தொடர்ந்து தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்தியாவில் பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கவும் முயன்று வந்தார். பலரை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி ஊக்குவித்து வந்தார். நிறுவனம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி உலகில் இராமன் பெயர் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது. மேலைத்தேச ஆராய்ச்சியாளர்களுடன் கீழைத்தேச ஆராய்ச்சியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றக்கூடிய சூழல் இராமனால் உருவாகியது.

1948இல் ஆண்டு இந்திய அரசு இராமனை ஒரு தேசியப் பேராசிரியராக நியமனம் செய்தது. 1954ல் இந்தியாவின் உயர்விருதான 'பாரத ரத்னா' இராமனுக்கு வழங்கப்பட்டது. 1957இல் 'சர்வதேச லெனின் பரிசு' இராமனுக்கு அளிக்கப்பட்டது. கெளரவங்கள் விருதுகள் அவருக்கு வந்து கொண்டே இருந்தன. ஆனால் இராமன் தனது ஆராய்ச்சி உலகில் உழன்று கொண்டிருந்தார்.

இந்திய நாட்டின் இளம் அறிவியல் ஆய்வாளர்கள், புலமையாளர்கள் யாவரும் ஒன்றுகூடக்கூடிய இராமன் ஆராய்ச்சிக் கழகம் மைசூரில் 1948இல் உருவாக்கப்பட்டது. இதன் இயக்குனராக இராமன் பொறுப்பேற்றார்.

பெளதிகம் மட்டுமன்றிப் புவியியல், உயிரியல், உடலியல் ஆகியவற்றிலும் இராமன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இலக்கியத்திலும் இசையிலும்கூட ஆர்வ மாகவே இருந்தார். தொடர்ந்து சிந்தனையும் ஆராய்ச்சியும் கற்பித்தலும் அவரது இயல்பான பண்புகளாயின. இத்தகு அறிவியல் மேதை 1970 நவம்பர் 21ஆம் நாள் தனது 82 வது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

மனித அறிவியல் பரப்பு விரிவானது ஆழமானது. அதற்குள்ளிலிருந்து அயராத தேடலுடன் ஆராய்ச்சித் தாகத்துடன் செயல்பட்டால் அறிவியல் மேதையாக வரமுடியும் என்பதை இராமன் நிரூபித்துள்ளார்.

இந்தியாவை மேற்குலகு திரும்பிப் பார்க்கவும் வைத்துள்ளார்.

''தகுதியானவன் தகுந்த வழியில் சிந்தித்து, தகுந்த கருவிகளின் உதவியுடன் ஆராய்ந்தால் தகுதியான, சரியான முடிவுகள் கிடைக்கும்'' இதுவே இராமன் உரைத்த பொன் மொழி. இதுவே அவரது அறிவியல் ஆராய்ச்சி உலகுக்கு விட்டுச் செல்லும் செய்தியும்கூட.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com