மீண்டும் வறட்சி
சென்னையில் மீண்டும் வறட்சி. மாநகருக்குக் குடிநீர் தர ஆகும் பல கோடி ரூபாய்களை மத்திய அரசிடம் வேண்டித் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. 1975-ல் வந்த கடும் வறட்சிக்குப் பின்னர் வந்த கொடும் வறட்சி இதுதான் இருக்கும் என்கிறார்கள். 1975-ல்தான் தரையடித் தண்ணீரை ஆழ்குழாய்கள் மூலம் சாகுபடி செய்யத் தொடங்கினோம். மாநகருக்குள்ளேயே ஏரி, குளம், கிணறு எல்லாவற்றையும் தரை மட்டமாக்கி அடுக்கு மாடி வீடு கட்டுவது அதற்கு அப்புறம்தான் வந்திருக் கும். லேக் வியூ ரோடு என்ற சாலையில் மழை பெய்தால் மட்டுமே ஏரி காட்சி தரும். ஆனால் இப்போதோ கற்புக்கரசி கண்ணகியின் சிலையை இடித்துவிட்டுப் பெய், பெய் என்றால் மழை எப்படிப் பெய்யும் என்று சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றப் பொங்கல் கவியரங்கில் கவிஞர் ஸ்ரீதரன் மைனர் கிண்டலடிக்கிறார்.

மழையில்லாமல் மக்கள் வாடுவது போல், தமிழ் இல்லாமல் வாடுவதும் பெரும்பாடு. தொலைக்காட்சி அங்கு இங்கு என்று இல்லாமல் எங்கும் பரந்து விரிவதற்கு முற்பட்ட காலத்தில் வானொலிதான் தமிழர்களைப் பிணைக்கும் இழை. விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, சென்னை வானொலியின் ஒலிச் சித்திரம், பி.பி.சி. தமிழோசை, இலங்கை வர்த்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறந்த நாள் வாழ்த்துகள் என்பவை வாழ்க்கைத் தண்டில் ஈரமாக உயிர் கொடுத்த காலம் உண்டு. மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, கரும்பட்டு வானத்தில் வெள்ளி நட்சத்திரங்கள் ஜொலிப்பதை ரசித்துக் கொண்டு, இரவின் மடியில் வானொலியின் தாலாட்டில் மயங்கி உறங்கியதுண்டு. அவையெல்லாம், நாடு விட்டு நாடு வந்த பிறகு மங்கிய பழைய கனவுகளாய் மறந்து போயின.

தமிழர்களைப் பார்ப்பது அபூர்வமாக இருந்த இடங்களில், தமிழர்களைப் பார்க்க வேண்டும், தமிழ் பேச வேண்டும், தமிழ்ச் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று அலையாய் அலைந்து பல மணி நேரம் வண்டி ஓட்டிக் கொண்டு மாநகரைத் தேடிப் போனதெல்லாம் ஒரு காலம். பிடிக்காத படமாய் இருந்தாலும் வீடியோ எடுத்து வந்து பார்ப்பது, எத்தனையோ மாதங்களுக்கு முன் வந்த பத்திரிக்கையானாலும் வாங்கி வந்து புரட்டுவது என்று ஆலாய்ப் பறந்திருக்கிறேன். அதனால்தானோ என்னவோ, லங் காஸ்டர் அகதிச் சிறையிலிருந்து ஈழத்தமிழர்கள் தென்றலுக்கு எழுதிய கடிதத்தைப் படித்தபோது மனம் நெகிழ்ந்தேன். சிறையில் இருந்து பணம் அனுப்ப வசதியில்லாமல் தென்றலை எங்களுக்கு அனுப்புகிறீர்களா என்று வேண்டி "தென்றலின் சொந்தங்கள்" என்று கையொப்பமிட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்கள் போல் அகதிகள் சிறைகளில் வாடும் தமிழர்களுக்கு நீதி மன்றங்களில் மொழி பெயர்த்து உதவ, பயிற்சி பெற்ற மொழி பெயர்ப்பாளர்கள் தேவை என்று அவ்வப்போது வேண்டுதல்களும் வரும். அகதிச் சிறைகளுக்குத் தென்றல் மட்டும் இல்லாமல், மற்ற தமிழ்ப் பத்திரிக்கைகளையும், படங்களையும், பாடல்களையும் வாங்கி அனுப்பும் அமைப்புகளைப் பற்றித் தெரிந்தவர்கள் எங்களுக்கு எழுதுங்கள்.

புள்ளி வாணிகள் (டாட்.காம்) அலையில் சிலிகன் வேல்லியில் தமிழர்கள் பெருந் திரளாக வந்து இறங்கிய போது, ·ப்ரிமாண்ட் நகர மையமும், ஆர்டென்வுட் பகுதியும், சான்டா கிளாரா, சன்னி வேல் நகர்ப் பகுதிகளும், சில நேரங்களில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணிபோல் தோன்றியது என்னவோ உண்மைதான். வாடகைக் குடியிருப்புப் பகுதிகளில் தமிழோசை ஒலிக்கும். இருப்பது தமிழ்நாடோ என்று மயங்கும் அளவுக்கு இசையும், கூத்தும் கற்றுத்தரும் பள்ளிகள் எண்ணிக்கை கூடின. இணையத்தில் எந்த நேரத்திலும் தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகளைப் படிக்க முடிந்தது. அலுவலகத்திலும் மசாலா தோசை, ஊத்தப்பமும், சமோசாவும், இட்லி சட்னியும் பன்னாட்டு உணவுப் பட்டியலில் நிரந்தர இடத்தைக் கைப்பற்றின. இருந்த போதிலும், பத்திரிக்கைகளும், வானொலி நிகழ்ச்சிகளும் இல்லாத தமிழ் வாழ்க்கை முழுமையில்லாமல் இருந்தது.

இந்த வெற்றிடத்தில் தோன்றியது சுதாகரன் சிவசுப்பிரமணியனின் "மோஸ்ட்லி தமிழ்" நிகழ்ச்சி. ஸ்டான் ·போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வாய் தோறும் 90.1 பண்பலை வரிசையில் காலை 6 முதல் 9 வரை தமிழ் நிகழ்ச்சி கேட்பது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தொடங் கியது. தன் தாயகத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் வளர்ந்த ஈழத்தமிழரான சுதாவுக்கு எப்படியோ ஆயிரக்கணக் கான தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கவர்ந்து ஈர்க்கும் மந்திரம் தெரிந்திருந்தது. இந்த நிகழ்ச்சியைத் தன்னுடன் சேர்ந்து தொகுத்து வழங்க ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தொகுப்பாளர்களை அழைத்து வந்தார் சுதா. 1999-ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஏறக் குறைய ஐந்தாண்டு காலத்தில், சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் நடந்த தமிழ் நிகழ்ச்சிகள் ஏதோ ஒரு வழியில் தடம் பதித்தன. சான் ·பிரான்சிஸ்கோ பகுதித் தமிழர்களுக்கு ஒரு கூட்டு அனுபவமாக, எந்தத் தலைப்பையும் அலசும் ஒரு பொது மன்றமாக இந்த நிகழ்ச்சி வளர்ந்தது. சமூகப் பொறுப்புணர்வோடு, நல்ல தரமான நிகழ்ச்சிகளைக் கொண்டு மக்களை மகிழ்விக்க முடியும் என்பதற்கு ஓர் இலக்கணம் வகுத்தது இந்த நிகழ்ச்சி. இணைய யுகத்தில் பழைய ஊடகமான வானொலிக்கு இத்தனை வலிமையா என்று என் போன்றோரை மலைக்க வைத்தது இந்த நிகழ்ச்சி.

ஆனால் ஐந்தாவது ஆண்டு நிறைவு பெறும் முன்னரே இந்த நிகழ்ச்சியை நிறுத்துவதாகச் சற்று முன்னர் சுதா சிவசுப்ரமணியம் அறிவித்துள்ளார். சான் ·பிரான்சிஸ்கோ தமிழர்களின் வரலாற் றைப் பதிவு செய்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் வரலாறாகி விட்டது. அவ்வப்போது தமிழ் பேசும் "மோஸ்ட்லி தமிழ்" நிகழ்ச்சியாகத் தொடங்கியது, கிட்டத்தட்ட எல்லாமே தமிழ் என்பது போல் வளர்ந்து, இலக்கியம், கலை, நாடகம், மரபிசை, மெல்லிசை, அரசியல், சமூகம், அரட்டை, என்று தொடாத விஷயமே இல்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நேயர்கள் அழைத்துத் தங்கள் கருத்தைத் தெரிவித்தது தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ள உதவியது. மழலை நிகழ்ச்சியில் அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளின் குரல்கள் வரும் சமுதாயத்தின் மேல் நம்பிக்கை அளித்தன. மோஸ்ட்லி தமிழ் நின்றாலும், அதன் நிகழ்ச்சிகள் என்றும் நம் நினைவில் நிற்கும். கடந்த நிகழ்ச்சியின் பதிவுகள், மோஸ்ட்லி தமிழ் வலைத் தளத்தில் கிடைக்கும் என்று சுதா அறிவித்துள்ளார். மோஸ்ட்லி தமிழ் நேரத்தில் இடம் பெறவிருக்கும் நிகழ்ச்சி எதுவாயிருந்தாலும், அதுவும் மோஸ்ட்லி தமிழின் தரத்தை எட்ட முயல வேண்டும். அது சாதாரணமில்லை.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com