ஜெயலலிதாவின் 'நில், கவனி, புறப்படு' கொள்கை
தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று ஆளும் அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக ஓரணியில் வியூகம் அமைத்து வருகிற நிலையில் ஆளும் கட்சி ஏனோ அமைதி காத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாதான் முதலில் கூட்டணி வியூகங்களை ஆரம்பிப்பார். ஆனால் இந்த முறை தி.மு.க. தலைவர் கருணாநிதி அவரை முந்திக்கொண்டுவிட்ட நிலையில், சென்னை வண்டலூரை அடுத்துள்ள கொளப்பாக்கத்தில் அ.இ.அ.தி.மு.கவினரோடு ஜெயலலிதா நேர்காணல் நடத்தி வருகிறார்.

இந்த நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பத்திரிகையாளர்களும் அனுமதிக்கபடுவதில்லை. மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணல் நடந்து கொண்டிருக்கும் போது ஜெயலலிதா இரண்டு மந்திரிகளை இரவோடு இரவாக நீக்கி, கட்சியில் 'எல்லாம் ஜெதான்' என்று மறுபடியும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

''கட்சிப் பொறுப்பிலிருந்தும் சரி, அமைச்சரவையிலிருந்தும் சரி நான் யாரையும் திடீரென்று நீக்குவதில்லை. பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து தவறு செய்தவர்களை மட்மே நீக்குகிறேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா தன் செயலுக்கான காரணங்களை விளக்கினாலும் அ.இ.தி.மு.க மந்திரிகளிடையே ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு போட்டியிடத் தடை செய்துள்ளது. யார் கட்சியில் தவறு செய்தாலும் உடனடி நடவடிக்கை, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தால் 33 தொகுதியில் போட்டி யிடுவது என்று பல அதிரடி அறிவிப்புகள் அ.இ.அ.தி.மு.க.வில் சர்வம் ஜெயலலிதா மயம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com