தமிழ் சோறு போடுமா? - அனுபவம்
கிறிஸ்துமஸ் விடுமுறையில் நான், என் கணவர், மகன் மூவரும் லாஸ் ஏஞ்சலீஸ் சென்று அங்கிருந்து 'ராயல் கரீபியன் க்ரூயிஸ் லைன்ஸ்' மூலமாக மெக்ஸிகோ சென்றோம்.

பலமுறை இந்தியா செல்லும் விமானங் களில் சைவசாப்பாட்டிற்காகக் கரடியாகக் கத்தியும், கிடைக்காமல் இப்போதெல்லாம் இட்லி, புளியோதரை, தயிர்சாதம் எல்லாவற்றையும் பிளேனுக்கு மூட்டை கட்டுவதில் கெட்டிக்காரியாகிவிட்ட நான் (சிலமுறை புளியோதரை வாசனையால் சப்புக்கொட்டும் அமெரிக்க சகபிரயாணி களுக்கும் கொடுத்துள்ளேன்) கப்பலில் இந்தியன் சைவ சாப்பாடு கிடைக்குமா என 'நட்சத்திரேயி'யாக நச்சரித்தேன்.

மகிழ்மிதவை (cruise) என்றாலே சாப்பாடுதான் என்றும் ஒருநாளைக்கு 15,000 வகை உணவுகள் தயாரிப்பதாகவும் கப்பலில் ஏறியவுடன் எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தால், கப்பலில் இருக்கும் மூன்று நாட்களும் ஒரு கவலையுமில்லை என்றும் சொன்னார் எங்கள் சுற்றுலா முகவர்.

இம்மாதிரி எத்தனை வாக்குறுதிகளைக் கண்டவள் நான்! எங்களுடன் கப்பல் ஏறிய சாமான்களில் ஒரு பையில் இஞ்சி ஊறுகாய், புளிக்காய்ச்சல், 25 சப்பாத்திகள் இத்யாதி இருந்தது என்னவோ உண்மை.

கப்பலில் ஏறியதும் 'மாயா பஜார்' பாடல்தான் நினைவுக்கு வந்தது. எங்கும் உணவு... எதிலும் உணவு... விதவிதமான சாலடுகளும், சூப்புகளும் பிரமிக்க வைத்தன. இருப்பினும் விடாக்கண்டர்களாக, இந்திய சைவ உணவு வேண்டுமென்பதைத் தெரிவித்தோம். அன்று இரவு கண்டிப்பாக அதுவே எனக் கூறினர்.

பகல் உணவிற்கு வயிறுமுட்ட சாலட், சூப் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஓர் இந்தியர் அருகில் வந்து நின்றார். ''நீங்கள் தமிழா!'' என்றார். கப்பலில் சமையல் காரராக ஆக இருப்பவர். அவருக்கு எங்களைக் கண்டதும் தமிழ்நாட்டையே கண்டுவிட்ட ஆனந்தம்!

''இந்தியச் சாப்பாடு வேணும்னு கேளுங்க. உங்க தயவில் எங்களுக்கும் கிடைக்கும்'' என்றார். ''கவலைப்படாதீங்க. சொல்லியாச்சு'' என்றோம்.

இரவுச் சாப்பாடு. தடபுடலான வரவேற்பு. நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு உட்கார்ந்தோம். வெயிட்டர் வரும்வரை. சாம்பார், ரசம், பொரியலை வண்ணக் கனவுகளாகக் கண்டு கொண்டிருந்தோம். முதலில் வந்தது சூப். மணமான ரசத்தை எதிர்பார்த்த என் மகனை, cold pear soup ''ஏமாறச் சொன்னது நானோ?'' எனக் கேட்டது.

அடுத்து வந்தது ஒரு தட்டில் சிறு வேகவைத்த கேரட்டும், சாலடும்! எங்களுக்குப் புரிந்துவிட்டது சத்தியமாக வெங்காய சாம்பாரும், உருளை கிழங்கு வறுவலும் வரப்போவதில்லை என்று. இதற்குள் மணி இரவு 8.30. ஒன்பது மணிக்குள் அடுத்த டெக்கில் இருக்கும் buffet place மூடிவிடும்.
எங்களது வெயிட்டர் பரிதாபமாக, ''நாளைக் காலை சிற்றுண்டி நிச்சயம் நீங்கள் கேட்டதே தர்றோம். இரவு எங்களிடம் தேவையான சாமான்கள் இருக்கவில்லை. உங்களுக்குத் தேவையான மெனு கொடுங்கள். எழுதிக் கொள்கிறேன்'' என்றார்.

இன்னும் நம்பிக்கை இழக்காத என் கணவர் கருமமே கண்ணாக ஒரு பேப்பரில் வெண் பொங்கல், கொத்சு, கலந்த சாதங்கள், பூரி மசால் என எழுத ஆரம்பித்தார். ''என்ன பிள்ளை கல்யாண மெனுவா எழுதுகிறீர்கள்?'' என்று நான் கிண்டலடித்தேன். கப்பலில் அன்று ஒரு அமெரிக்கன் கல்யாணம் நடந்தென்னவோ உண்மை. அதனால்தான் இவர் கல்யாண மெனுவை ஆரம்பித்தாரோ என்னவோ. வெயிட்டரும் கர்மசிரத்தையுடன் வாங்கிக் கொண்டார்.

''அது சரி, இப்போதைக்கு அடுத்த டெக்குக்கு போகலாம்" என விரைந்தோம்.

அங்கு கண்ட காட்சி திகிலூட்டியது. எல்லாம் காலி. பணியாளர்கள் வேகமாக எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருந்தனர். ''சரி, உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா. இன்று இரவு சப்பாத்தியத்தான் கடிச்சு இழுக்கணும்" என நினைத்தபடி அறைக்குத் திரும்ப யத்தனித்தோம்.

''கொஞ்சம் நில்லுங்க'' என்றது ஒரு தமிழ்க் குரல். ''நீங்கள் பட்டினியாத் திரும்புறீங்கன்னு நினைக்கறேன். கப்பல்லே வேலை செய்யற இந்தியர்களுக்காக நாங்க ஒரு டிஷ் செய்து கொள்வோம். எனக்குன்னு அதில் எடுத்து வைத்துக்கொண்டது இருக்கிறது. நிறைய சாதமும் இருக்கிறது. சாப்பிடுங்கள்'' என்று சொல்லி, அதைக் கொண்டுவந்து கொடுத்ததோடு, சீக்கிரமாக நாலு அப்பளமும் பொரித்துக் கொண்டுவந்தார்.

எங்களுக்கு கண்ணில் நீர் தளும்பிவிட்டது. தனக்குள்ள உணவை, யாரோ தெரியாத ஒரு குடும்பத்திற்கு - இந்தியக் குடும்பம், அதுவும் தமிழ்க் குடும்பம் - என்ற ஒரே காரணத்திற்காகப் பகிர்ந்து கொண்ட உள்ளத்தின் மேன்மைதான் என்னே!

அடுத்த நாளிலிருந்து மூன்று வேளையும் எங்களுக்கு உப்புமா, பூரி மசாலா என்று ஜமாய்த்துவிட்டார்கள். என் மகன் எப்போது எந்த டெக்குக்குப் போனாலும், அங்கிருந்த யாராவது ஒரு தமிழ்ப் பணியாளர், அவனுடன் தமிழில் பேசியது மல்லாமல், எந்த உணவு சைவ உணவு என்றும் அவனுக்குப் பார்த்துக் கொடுத்தார்.

கப்பல் ஊழியரை மணந்து திண்டுக் கல்லிலிருந்து வந்து 20 நாட்களே ஆகியிருந்த புதுமணப் பெண்ணைச் சந்தித்தோம். அவரும் கப்பலில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் தன் குடும்பத்தையே பார்த்தது போல் அவருக்கு மனம் நிறைந்துவிட்டது.

இப்படியாக அந்தப் பயணம் மறக்க முடியாததாகிவிட்டது. கப்பலை விட்டு இறங்கும்போது நான் கொண்டு சென்றிருந்த ஊறுகாய்களையும், தமிழ்ப் பத்திரிகை களையும் மதுரைக்காரரிடம் கொடுத்ததும் அவர் தொண்டையெல்லாம் அடைக்க ''எங்க அம்மாவையே பாத்ததுபோல இருக்குது. இந்த நாலு நாளா எங்களைச் சென்னைக்குக் கூட்டிட்டுப் போய்ட்டீங்க'' எனத் தழுதழுக்கச் சொன்னார்.

யார் சொன்னது தமிழ் சோறு போடாதுன்னு!

மாலா பத்மநாபன்

© TamilOnline.com