எமெனோவின் நன்கொடை
தமிழகத்தின் பெரும்பாலான தமிழறிஞர்கள் தமிழ்மொழியில் ஆர்வமும் ஆழ்ந்த மொழி அறிவும் உள்ளவர்கள்தாம். இருந்தாலும் இந்திய வரலாறு, பண்பாடு தொடர்பான பல முக்கியமான சொற்களை வடமொழியி லிருந்து தமிழ்மொழி இரவல் வாங்கியது என்பதை மறுப்பதற்குத் தமிழ்மொழி அறிவு மட்டும் போதாது; மற்ற திராவிட மொழி அறிவோ அல்லது அவற்றின் தொடர் புடைய சொற்றொகுப்பும் ஒலிமாற்ற அறிவும் தேவை. அது பெரும்பாலான தமிழறிஞர் களிடம் இல்லை. ஆனால் பர்ரோ-எமெனோவின் திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி அந்தக் குறையைத் தீர்ப்பதாகும்.

அதைக் கொண்டு வடமொழி-தமிழ்மொழி இரவலை மட்டுமன்றித் தமிழ்மொழிச் சொற்களின் உண்மையான தோற்றத்தையும் உணரலாம். ஏனெனில் இந்தியத் துணைக்கண்டத்தில் அசாம், பீகார், நேபாளம் போன்ற மாநிலங்களின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பேசும் திராவிட மொழிகளையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 23 ஆகும். அவற்றில் பலவற்றிற்கு இலக்கிய மரபோ வரிவடிவமோ இல்லை.

தமிழ்நாட்டார் மற்ற 22 திராவிட மொழிகளில் ஒரு சிலவற்றைப் பற்றிக்கூட அக்கறை கொண்டு கற்பதில்லை. மற்ற திராவிட மொழிகள் செம்மையும் இலக்கிய மரபும் இல்லாத மொழிகளாகப் பார்ப்பது தமிழர்கள் மனப்பாங்கு. தமிழினம், தமிழ்மொழி ஆகியவற்றின் சிறப்பை நிலை நாட்டுவதிலேயே எந்நேரமும் குறியாக இருப்பவர்கள், அந்த வாதங்களையும் தமிழ்மொழி இலக்கியங்களை வைத்து மட்டுமே வாதிப்பது வழக்கம். ஆனால் அனைவரும் ஏற்கும் வகையில் செம்மையாக நிறுவ வேண்டிய சான்றுகளை மற்ற திராவிட மொழிகளிலும் தேட வேண்டும். நமக்கு இன்று கிடைத்துள்ள தமிழ்மொழியின் இலக்கியமும் சொல்வளமும் விந்தை தரும் அளவு பெரியதே ஆனாலும் குறிப்பிட்ட சில சொற்களின் மூலத்தை நிறுவும் பொழுது வேறு திராவிட மொழிகளோடு ஒலிவடிவம், பொருள் ஒப்புமை ஆகியவற்றைக் கருதியே நிறுவ முடியும்.

அவ்வாறு நிறுவுவதற்கு இந்த ஒப்பியலகராதி இல்லையென்றால் ஒவ்வோர் ஆய்வாளரும் 23 திராவிட மொழிகளின் அகராதிகளைக் கையில் வைத்துக்கொண்டு தேடவேண்டும். ஆனால் அப்பொழுதும் அது எளிய செயல் இல்லை. ஏனெனில் ழகரம் ணகரம் றகரம் போன்ற ஒலிகள் பல திராவிட மொழிகளில் மாறும். அதைக் கேட்டவுடன் ஆய்வாளர் அதில் என்ன பெரிய பாடு? ழகரம் இருக்கும் இடத்தில் ளகரம் அல்லது லகரம் இருக்கும்; றகரத்தின் இடத்தில் ரகரம் இருக்கும்! நான் அதை நினைத்து ஒப்பிட முடியும் என்று எண்ணலாம். அதாவது புழு என்பது புளு அல்லது புலு என்று இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் அங்கே தான் பெரிய சிக்கல் இருக்கிறது!

ஏனெனில் மூலத்திராவிட மொழியிலிருந்து கிளைத்த பொழுது நேர்ந்த ஒலித்திரிபுகள் தமிழர்கள் பழகாத வழிகளில் நேர்ந்துள்ளன: எடுத்துக் காட்டாக மூலத்திராவிடத்தின் ழகர ஒலி துளு, கூயி, குருக்கு, மால்தோ, பிராகுவி போன்ற மொழிகளில் ரகரமாக மாறும்! “புழு” என்னும் சொல் துளு மொழியில் “புரி, புளி” என்றும் கூயி மொழியில் “ப்ரிஉ” என்றும் மாறும். இங்கே ழகரம் லகரம் அல்லது ளகரமாக மாறுவதை தமிழர்களாகிய நாம் எதிர்பார்க்கலாம்; ஏனெனில் நம் கொச்சைப் பேச்சில் அவ்வாறு நிகழும். ஆனால் ரகரமாக மாறுவது எதிர்பாராததே! இதைத் திராவிட மொழிகளை ஒப்பிட்டு ஆய்ந்தவர்களே எதிர்பார்த்து ஒரே சொற்குழுவில் தொகுக்க முடியும்.

மேலும் சில வேர்ச்சொற்கள் இன்று நாம் தொகுத்துள்ள தமிழிலக்கியத்தில் இல்லை; ஆனால் வடநாட்டில் பேசும் சிறு திராவிட மொழிகளில் இன்னும் புழங்குகின்றன. அதைக் கண்டவுடன் நாம் அது தொடர்பான வடமொழிச் சொற்கள் வடநாட்டில் பேசிய திராவிட மொழி களிலிருந்து இரவல் என்று நிறுவ நேரடிச் சான்று கிடைக்கிறது.

இவ்வாறு பல நுணுக்கமான பயன் உள்ள திராவிட ஒப்பியல் அகராதியைத் தொகுத்த பேரா. எமெனோ மிகப் பெரிய பாராட்டுக்குரியவர் ஆவார். அந்த அகராதியின் பயனை நாம் இன்னும் ஒரு துளிகூட நுகரவில்லை. அதைப் புழங்கிக் கிடைக்கும் கண்டுபிடிப்புகள் வியக்கத்தக் கவையாக இருக்கும்.

தமிழ்நாட்டார் நம் மாநிலத்தில் வழங்கும் சிறு திராவிட மொழிகளைக் கூட முறையாகப் பதிந்து தொகுப்பதில்லை. பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள மொழிகளைப் பதிய அவர்களை எப்படி எதிர்பார்க்கலாம்? அவ்வாறிருக்க அந்தச் சிறு மொழிகள் வழங்கும் மலை, காட்டுப் பிரதேசங்களில் நேரடியாகச் சென்று அந்தப் பழங்குடியின ரோடு தங்கி அவர்கள் பேசும் மொழியினைப் பதிந்து தொகுத்து அரும்பெரும் சான்றுகளை நமக்கு அளித்துள்ள செயல் எத்தகைய பாராட்டுக்குரியதென்று நாம் உணர வேண்டும். எனவே தமிழர்கள் மறையும் நிலையில் இருக்கும் சிறு திராவிட மொழிகளை அவசர நெருக்கடியாகக் கருதி உடனே அவற்றை முழுதும் பதியும் பணியில் ஈடுபடவேண்டும்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com