பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ நூறாவது பிறந்த நாள் விழா
லத்தீன், கிரேக்கம், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை ஒப்பிட்டு அவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ள இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று 1876-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் கண்டுபிடித்தார். பின்னர் 1856-ல் கால்டுவெல் பாதிரியார் தமிழும் மற்ற தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத் தோடு தொடர்பு இல்லாத ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்று தமது “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” நூலில் நிறுவினார். அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டுக் காலம் மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்திய-ஐரோப்பிய மொழி ஆராய்ச்சி ஓங்கி திராவிட மொழியியல் தேக்க நிலையில் இருந்தது. அந்த நிலையை மாற்றி, திராவிட மொழியியல் துறையை மேல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் நிறுவியது 1961-ல் வெளிவந்த “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (A Dravidian Etymological Dictionary) என்ற நூல். தமிழ் ஆராய்ச்சியாளர்களும், திராவிட மொழியியல் வல்லுநர்களும் ஒரு பெரும் பண்பாட்டுக் கொடை என்று போற்றும் இந்த அகராதியை ஆக்ஸ்·போர்டு பேராசிரியர் தாமஸ் பர்ரோவுடன் தொகுத்தவர் கலி·போர்னியா பர்க்கெலி பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ. ·பெப்ருவரியில் வரும் அவரது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடக் கலி·போர்னியா பல்கலைக் கழகம், பர்க்கெலி மொழியியல் துறை ஒரு சிறப்பு மொழியியல் மாநாடு கூட்டி அவரைப் போற்றுகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியப் பண்பாட்டை நன்கு கற்றறிந்த பெரும்புலவர் என்று போற்றப்பட்ட பேரா. எமெனோ கனடாவின் கோடியில் இருக்கும் நோவா ஸ்கோஷியா தீவின் ஹாலி·பாக்ஸ் நகரில் ·பெப்ருவரி 28, 1904-ல் பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்க மொழிகளை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்ற இவரை இந்தியா ஈர்த்தது. சிந்து சமவெளி நாகரீகத்தைச் சார்ந்த சான்ஹ¥ தாரோவுக்கு 1935-36ல் சென்ற அமெரிக்க அகழ்வாராய்ச்சிக் குழுவில் தமது மொழியறிவுத் திறனால் இடம் பெற்றார். மகாகவி காளிதாசரின் சாகுந்தலத்தை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு (1962) மொழி பெயர்க்கும் புலமை பெற்ற இவர் தம் கள ஆராய்ச்சியைத் தொடங்கியது என்னவோ தமிழ்நாட்டின் நீலகிரியில்தான்.

இப்போதுபோல் தொலைத்தொடர்போ போக்குவரத்தோ இல்லாத காலத்தில், 1935-38 ஆண்டுகளில் நீலகிரி மலைக்கு நேரடியாகச் சென்று வாழ்ந்து அங்கே வாழும் தோடர், கோடர், குடகர் ஆகிய திராவிடக் குடியினரின் மொழிகளை ஆய்ந்தார். மத்திய இந்தியாவில் உள்ள கோலாமி மக்களின் மொழியை ஆய்வதற்கு அவர்களிடையே சென்று நேரடியாகத் தங்கினார். அன்று தொடங்கிய ஆராய்ச்சியைத் தாம் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்கிறார். ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து கோடர் நூல்கள் (1944-46), தோடர் பாடல்கள் (1971) என்ற பல நூல்களில் வெளியிட்டுள்ளார். 1955-ல் இவர் வெளியிட்ட “கோலாமி, ஒரு திராவிட மொழி” என்ற நூல் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் கோலாமி மொழியை ஒரு தனிப்பட்ட திராவிட மொழியாக இனம் கண்டு கொண்டது மட்டுமல்லாமல், அந்த வட்டாரத்தில் இருக்கும் ஏனைய மொழிகளோடு கோலாமிக்குள்ள உறவையும் புலப்படுத்தியது. இது இன்னதென்று இனம் காணமுடியாமல் பலர் திணறிக் கொண்டிருந்த தோடர் மொழியைத் தமிழுடன் மிக நெருங்கிய திராவிட மொழி என்று காட்டினார். சமஸ்கிருதச் சொற்களைத் திராவிட மொழிகள் இரவல் வாங்கியது போலவே, சமஸ்கிருதம் மற்றும் பல வட இந்திய மொழிகளில் உள்ள திராவிட மொழி இரவற் சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

1940ல் பர்க்கெலிக்கு சமஸ்கிருதப் பேராசிரியராக வரும்போதே இந்தியவியல், மொழியியல், திராவிட மொழியியல் இவற்றில் புகழ் பெற்றிருந்த பேரா. எமெனோ, 1953-ல் பர்க்கெலி தொடங்கிய மொழியியல் துறையின் முதல் துறைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1995 வரை தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்து வந்திருக்கும் எமெனோவிடம் இன்றும் ஒரு மணி நேரம் பேசினால், தான் அறியாத ஒன்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது என்கிறார் பர்க்கெலித் தமிழ்ப்பீடப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட். சொற்பிறப்பியலில் வகுத்த நெறிமுறைகள், மற்ற பல மொழியியல் வல்லுநர்களிடம் இல்லாத சார்பற்ற அறிவியல் சார்ந்த அணுகுமுறை இவை எமெனோவின் தனிச்சிறப்பு என்கிறார் ஹார்ட்.

பேரா. எமெனோவின் மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மொழியியலாளர் எனப் போற்றப் படும் திராவிட மொழியியல் அறிஞர் பதிராஜு கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பேராசிரியர்கள் ஆர். கே. ஷர்மா, வில்லியம் பிரைட் ஆகியோர்.

1966-ல் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் துணைத்தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட பேரா. எமெனோ, முறைப்படித் தமிழ் கற்றவர் அல்லர். அகராதி தொகுக்கும் முயற்சியில் தமிழ்ச் சொற்களையும், இலக்கணத்தையும் அறிந்தவர் என்றாலும், பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஏனோ அவர் கற்கவில்லை. காளிதாசனை அறிந்த எமெனோ கம்பனைக் கற்கவில்லை. அதனால்தானோ என்னவோ, தமிழின் தனிச் சிறப்பைக் கருத்தில் கொள்ளாமல், நடுநிலையில் நின்று அவரால் ஏனைய திராவிட மொழிகளை ஆராய முடிந்திருக்கிறது.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com