எஸ்.என்.பிரபு: பக்திப் பாடல் குறுந்தகடுகள்
ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறையை எடுத்துக் கூறிய நம் முன்னோர்கள், கலியுகத்திற்கு 'நாம சங்கீர்த்தனம்' - அதாவது, இறைவனது புகழையும், மகிமையையும் பாடுவதே சிறந்தது என்று கூறியுள்ளனர். இவ் வகையில் 'அருள்தரும் தெய்வங்கள்' மற்றும், 'சர்வம் சாய்ராம்' என்ற இரண்டு பக்தி இசைக் குறுந்தகடுகளைப் பாடி வெளியிட்டுள்ளார் விரிகுடாப் பகுதிப் பாடகர் எஸ்.என். பிரபு (சிவராமன் பிரபு). இவர் 'சுரபி' இசைக்குழுவின் முதன்மைப் பாடகர்.

'அருள்தரும் தெய்வங்கள்' பாடல்களுக்கு இசையமைத் துள்ள ஏ.சி. தினகரன் எம்.எஸ். விஸ்வநாதனோடு நெருங்கிப் பணியாற்றியவர். பாடல்களை இ. மணி இயற்றியுள்ளார். கணபதி, சிவன், கோவிந்தன், கண்ணன், முருகன், லக்ஷ்மி, சரஸ்வதி, மாரியம்மன், ஹனுமான் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு கர்நாடக ராகத்தில் பாமாலை தொடுத்துள்ளார்கள். பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக, மனதைத் தொடுவதாக உள்ளன. பாடலுக்கு ஏற்றபடித் தனது குரலை மாற்றிப் பாடியுள்ள பிரபுவின் குரல்வளம் நம்மை வியக்க வைக்கிறது. இந்தத் தகட்டில் இறுதியில் வேகமான கதியில் அமைக்கப்பட்டுள்ள 'முருகா முருகா' என்ற ஆங்கிலப் பாடல் புதுமையான முயற்சி. இது நிச்சயம் இளைய தலைமுறையினரைக் கவரும். 'அருள்தரும் தெய்வங்கள்' பாடல்கள் மனதிற்கு இதம்தரும்.

'சர்வம் சாய்ராம்' இசைக் குறுந்தகட்டில், ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பல மொழி பஜனைப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்குப் புதிய இசைவடிவம் கொடுத்துள்ளனர் பாடகர் பிரபு, இசையமைப்பாளர் ஏ.சி. தினகரன் குழுவினர். இதில் உள்ள பாடல்கள், ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர்களை மட்டும் இல்லாமல், மற்றவர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தரமான இசை குறுந்தகடுகளை 16 மணி நேரத்தில் பாடி, ஒலிப்பதிவு செய்தார்கள் என்பதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தக் குறுந்தகடுகளின் விலை ஒவ்வொன்றும் $10. இவற்றின் விற்பனையில் வரும் நிதியில் ஒரு பகுதியை முதன்மையாகக் காஞ்சி மடம், புட்டபர்த்தி ஆகியவற்றின் நற்பணிகளுக்கும், இதர குழுக்களின் சமூகப் பணிகளுக்கும் நன்கொடையாகத் தர இருப்பதாகச் சொல்கிறார் சான் ஹோசேயில் வாழும் பாடகர் பிரபு.

'அருள்தரும் தெய்வங்கள்', மற்றும், 'சர்வம் சாய்ராம்' குறுந்தகடுகளை வாங்க:
தொலைபேசி: 408-578-8281 (சிவராமன் பிரபு);
மின்னஞ்சல்: sivaraman_prabhu@hotmail.com
http://www.surabhee.net/Album.htm, http://www.chennaionline.com/society/musictoears.asp

தகவல்: சூப்பர் சுதாகர்

© TamilOnline.com