கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை
தற்காலத்தில் பாரதியின் தாக்கம் இல்லாத கவிஞர்களே இருக்க முடியாது. எல்லாவற்றையும்விட பாரதியின் கவிதைகளில் மனிதம் மேலோங்கி உள்ளது. பாரதிக்குப் பிறகு வந்த எல்லாக் கவிஞர்களிடமும் நான் பாரதியைப் பார்க்கிறேன்.

கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அனைவரிடமும் பாரதியைப் பார்க்கிறேன். யாரையும் யாருடன் ஒப்பிடத் தேவையில்லை. பாரதி தாத்தா என்றால், வைரமுத்து பேரன், பாரதியாரின் சிந்தனைப்படி வாழ்ந்து காட்ட வேண்டும். பாரதியாக வாழ்ந்து காட்ட வேண்டும். பாரதி கவிதை வழி வாழ்ந்து காட்டுவதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை.

எம். கற்பகவிநாயகம், நீதிபதி, உயர்நீதிமன்றம், பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் அடங்கிய 4 நூல்களை வெளியிட்டுப் பேசுகையில்.

*****


மக்குள் அவநம்பிக்கை, பூசல் வேண்டாம். நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம். நாம் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. சிறு சிறு பூசல்கள் உள்ளன. இது கவலை தருவதாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் இப்பிராந்தியத்தில் அமைதி என்பது எட்டாக்கனியாக அமைந்துவிடும்.

கூட்டு முயற்சி எடுபட நமக்குள் பரஸ்பரம் நம்பிக்கை தேவை. காலனி ஆதிக்க நாடுகளாக இருந்தவை தெற்கு ஆசிய நாடுகள். பல ஆண்டுகளாகவே இவற்றுக்கு இடையே ஒருங்கிணைந்த பொருளாதாரப் புரிந்துணர்வு இல்லை. அரசியல் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாததே இதற்குக் காரணம்.

வரலாற்றை வழிகாட்டியாகக் கொள்ளலாம். ஆனால் அதுவே நமக்கு கைவிலங்கு இட்டுவிடக்கூடாது. பிணக்குகளைச் அகற்றி சமாதானம் காண்பதும், பதற்றத்தை ஒழித்து அமைதியை ஏற்படுத்துவதும் அவசியம்.

பாரதப் பிரதமர் வாஜ்பாய், இஸ்லாமாபாதில் நடைபெற்ற 12வது SAARC உச்சி மாநாட்டில்.

*****


ஆரியர்கள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக வந்தவர்கள் என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதை. சிந்துசமவெளி நாகரிகம் தொட்டே இருந்து வருபவர்கள் ஆரியர்கள். ஆரியர்- திராவிடர் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. இருவரும் ஒன்றுதான். ஆங்கிலேயர்கள்தான் வரலாற்றைத் தவறாக எழுதிவிட்டனர். அத்தவறை இன்னமும் நம்மால் மாற்ற முடியவில்லை.

ஆரியர்கள் என்றால் மரியாதைக்கு உரியவர்கள். தூய்மையானவர்கள் என்று பொருள். இப்படிப்பட்டவர்கள் எந்த வகுப்பில் இருந்தாலும் அவர்களும் ஆரியர்களே.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதைத் தவிர்த்து தமிழ்ப் பெயர்களையே சூட்ட வேண்டும். பிறமொழிகளுக்கு உள்ள சிறப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரே மொழி தமிழ்தான்.

கவிஞனுக்குப் பாரதியைப் பிடிக்கும். பாரதிக்குக் கவிதையைப் பிடிக்கும். கவிதைக்குத் தமிழைப் பிடிக்கும். தமிழுக்குத் தமிழனைப் பிடிக்கும். ஆனால் தமிழனுக்கோ ஆங்கிலத்தைப் பிடிக்கும். இந்த நிலையை மாற்றி ஒவ்வொரு தமிழனையும் தமிழ் உணர்வு, அறிவு பெறச் செய்யத்தான் பள்ளி மாணவர்களிடையே இந்தத் தமிழ் முழக்கம்.

கா. காளிமுத்து, சட்டப்பேரவைத் தலைவர், 'பள்ளிகள்தோறும் தமிழ் முழக்கம்' என்ற கருத்தரங்கில்.

*****


கண்டதும் கேட்டதும்' என்ற நூலில் சாவித்திரி கண்ணன் 54 கட்டுரைகளை எழுதியுள்ளார். இதில் சினிமாவும் வருகிறது. சினிமாவின் பார்வையைப் பல கோணங்களில் அலசி எழுதியிருக்கும் அவர் 'தமிழ் சினிமா திருந்துமா?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். நான் கூறுகிறேன். 'தமிழ் சினிமா திருந்தவே திருந்தாது'. நல்ல படங்களை எடுத்துத் தமிழ் மக்களைச் சரியான திசைக்குக் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

தமிழகத்தில் அரசியல் அழியச் சினிமாதான் காரணம். இதை நான் திடமாக நம்புகிறேன். அதேபோல் தமிழர் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் சினிமாதான். சினிமாவால் மக்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிடப் பிரச்னைகள் ஏற்பட்டதுதான் அதிகம்.

முன்னாள் துணைவேந்தர், க.ப. அறவாணன் 'கண்டதும் கேட்டதும், உலகநாடுகளில் தமிழர்கள்' நூல்களை வெளியிட்டுப் பேசியது.

*****


மூத்த தலைமுறையான தியாகிகள் குறித்து அறிந்து கொள்ளாத தலைமுறை நல்ல தலைமுறையாக இருக்க முடியாது. நாட்டில் விடுதலைக்கு முன்னர் நடந்த சம்பவங்களையும், விடுதலைக்குப் பின்னர் நடந்த சம்பவங்களையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

புதுவையின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் தொகுத்து கொடுத்தால் பாடமாகக் கொண்டு வர அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

பிரபஞ்சன், எழுத்தாளர், புதுச்சேரி விடுதலைப் பொன்விழாக் குழு சார்பில் தியாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அடிப்படையில் நான் புத்தகப் பதிப்பாளர்களின் உதவியாளன். ஊழியன். என் முதல் தொழிலே பிழை திருத்துதல்தான். மிகச் சிறந்த பல நூல்களுக்கு பிழை திருத்தி உள்ளேன். இப்போது வருகிற புத்தகங்கள் சிலவற்றில் உள்ள பிழைகளைப் பார்க்கும்போது மீண்டும் பிழை திருத்தும் வேலைக்கே போய்விடலாமா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜெயகாந்தன், சென்னைப் புத்தகக் கண்காட்சித் தொடக்கவிழாவில்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com