அமெரிக்கப் பொங்கல்
புது வருசம் பிறந்தாச்சு,
போகிப் பண்டிகை போயாச்சு,
பழசெல்லாம் போயி, புதிசு புகுந்து,
பொங்கல் காலை விடிஞ்சாச்சு.

குளிரு நடுங்க எழுந்தாச்சு,
குளிச்சு முழுகி முடிஞ்சாச்சு,
புதுச்சேலை உடுத்திப் பொட்டு வச்சுப்
பிளாஸ்டிக் பூவும் சூடியாச்சு.

கடை கண்ணி எங்கும் தேடியாச்சு,
கருணைக் கிழங்கு மட்டும் தள்ளியாச்சு,
அவரை, கத்திரி, வாழை, பலா, பரங்கியென
ஐவகைக் கறிகாய் சமைச்சாச்சு!

கவுன்டர் டாப்பில் கோலம் போட்டாச்சு,
காஞ்ச மஞ்சளக் கோர்த்தாச்சு,
கரும்பு கூடக் கட்டியாச்சு,
களிப் பாக்கொடு வெத்திலை சேர்த்தாச்சு.

விளக்கு ஏத்தி வச்சாச்சு,
விடியாத சூரியனைக் கும்பிட்டாச்சு,
பானை ஏத்தி, சங்கு ஊத,
பாலும் பொங்கி வழிஞ்சாச்சு.

பதனிட்ட இலையை விரிச்சாச்சு,
பலகாரம் எல்லாம் படைச்சாச்சு,
கால்நாள் கூத்து முடிஞ்சாச்சு,
கலையும் நேரம் வந்தாச்சு.

சேலை, பொட்டு, பூ, நகை, நட்டு,
ஜோரான வேஷம் போதும் எடுத்தாச்சு,
வெள்ளைச் சட்டை, பேண்டு, கோட்டோடு,
வேலைக்கு ஓடு நேரமாச்சு!

ரமணா

© TamilOnline.com