கல்கி
நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் 'மணிக்கொடி' எழுத்தாளர் களுக்கு முதன்மையான இட முண்டு. இந்த எழுத்தாளர்களுக்குச் சமகாலத்தில் சிறுகதை உலகில் வலம் வந்தவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி (1899-1954)

கல்கி எழுதத் தொடங்கிய சிறிது காலத்திற்குள்ளாகவே அவர் நாவலாசிரியராக மலர்ந்துவிட்டார். இருப்பினும் அவருடைய படைப்பு வாழ்க்கை சிறுகதை எழுதுவதில் தான் தொடங்கியது. அவரது முதல் நூல் 'சாரதையின் தந்திரம்' என்ற சிறுகதைத் தொகுதி, 1927 இல் வெளிவந்தது. இதில் 8 சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் 'நவசக்தி' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கல்கி எழுதிய கதைகள் இவை.

மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் நிரம்பியவராக வளர்ந்து வந்த கல்கியை, காந்திய சிந்தனை பண்பட்ட மனிதராக்கியது. அவரது பத்தாவது வயதில் பாரதியின் பாடல்களைப் படித்தார். அதுமுதல் இறுதிக்காலம் வரை பாரதியின் கவிவளம், மொழித் தேர்ச்சி கல்கியினுடைய ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியது என்றே கூறலாம்.

1923களில் திரு.வி.க.வின் நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராகக் கல்கி பணிபுரிந்தார். திரு.வி.க.வுடனும் வெ. சாமிநாத சர்மாவுடனும் இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பினைப் பெற்றார். இவ்வனுபவம் பத்திரிகைத் துறையில் மளமளவென்று முன்னேறுவதற்கும் வழிவகுத்தது. பத்திரிகைத் துறையில் அச்சமயம் ஏற்பட்ட வளர்ச்சி கல்கி தனக்கென ஓரிடத்தை நிறுவிக்கொள்ள வழிகோலியது.

தமிழ் உரைநடை வரலாற்றில் கல்கியின் நடைக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. உயிர்த்துடிப்புள்ள எளிய தமிழால் உலகை அளக்க முடியுமென்பதைக் காட்டியவர். தமிழையே அறிந்த மக்களுக்குப் பொருளாதாரம், அரசியல், கலை, இலக்கியம் முதலியனவற்றை எடுத்து விளக்கிப் பொதுவான அபிப்பிராயம் உருவாக்குவதற்கும், அதனை நெறிப்படுத்துவதற்கும் ஓர் நிறுவனமாகவே தொழிற்பட்டவர்.

வெகுசன வாசிப்புப் பரவலில் கல்கி ஓர் சகாப்தமே படைத்தவர். கட்டுரை இலக்கியம், படைப்பு இலக்கியம், விமரிசனம், உரைச்சித்திரம் எனப் பல்வேறு வகைமைகளில் ஆழம் கண்டார். எழுத்து வாசனை வளர்ந்துவந்த அக்காலத்தில் கல்கியின் எழுத்து அது மேலும் அகலப்படுவதற்கு உதவியது.

கல்கியின் சிறுகதைப் படைப்புகளை மூன்று கட்டங்களில் வைத்து நோக்கு கிறார்கள். ஆய்வாளர்கள். 1923-1931க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் நவ சக்தியிலும், விமோசனத்திலும் உதவி ஆசிரியராக இருந்த காலத்தில் எழுதிய கதைகள். இது முதற்கட்டம். அடுத்து 1931-1941 வரை ஆனந்தவிகடனில் இருந்த பொழுது படைத்த கதைகள், இரண்டாவது கட்டத்தைச் சேரும். 1941 முதல் அவர் மறையும் வரை தாம் சொந்தமாக நடத்திய 'கல்கி'யில் எழுதியவை மூன்றாவது கட்டம்.

கல்கியின் சிறுகதைகள் அவை வெளிவந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டன. கல்கியின் முக்கியச் சிறுகதைகள் யாவும் அவர் ஆரம்பகாலத்தில் எழுதியவையேயாம். 'சாரதையின் தந்திரம்', 'வீணை பவானி' ஆகிய தொகுதிகளில் பிரசரிக்கப்பட்டுள்ள கதைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் முற்பகுதியைச் சார்ந்தவை. தியாகபூமி என்னும் நாவல் வெளிவந்த காலமுதல் நாவலாசிரியராகவே இனங்காணப்பட்டார். பின்னர் அவரும் நாவல் எழுதுவதிலே அதிக ஆர்வமும் காட்டினார்.

கல்கி எப்பொழுதும் தானே கதையைக் கூறுபவராகத்தான் இருப்பார். எழுத்தாளன் என்ற முறையிலோ அல்லது கதா பாத்திரங்களில் ஒருவர் என்ற முறையிலோ தானே கதையைக் கூறிச் செல்வது அவரது முக்கியப் பண்பு. மேலும் கதையைக் கூறிவிட்டு இறுதியில் அல்லது இடையில் அக்கதைகளால் அல்லது கதையில் வரும் சம்பவத்தால் பெறப்படும் படிப்பினையையும் தானே எடுத்துக் கூறுவார். ஒருவகையில் நீதிபோதனை செய்யும் கடமையையும் பார்த்துக் கொண்டார்.

வாசகர்களுடன் 'உரையாடல் முறை' நடையினால் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அதாவது வாசகர் கூட்டத்தைப் பற்றிய உணர்வை முன்வைத்தே எழுதினார். கல்கியின் எழுத்து தன்னளவில் வளர்ந்து வரும் வாசகப் பரவலுக்கு ஊக்கியாக அமைந்திருந்தது.

கல்கியின் கதைகளைக் குறித்து மாறுபாடான கருத்துக் கொண்டிருப்போரும் சிறுகதை இலக்கியத்தை ஆவலோடு வாசிக்கும் பெரிய வாசகர் கூட்டத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கியவர் கல்கி என்பதிலோ, கல்கியின் கதைகள் காந்தமாக நின்று தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தன என்பதிலோ ஒரு சிறிதும் முரண்பாடு கொள்வதில்லை. வெகுசன வாசிப்புக் கலாசாரம் தமிழில் உருவாகி வளர்ந்து வந்த வரலாற்றில் கல்கியின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது.

கல்கியின் கதைகளில் நம் நெஞ்சைக் கவரும் கூறுகள் என ஆய்வாளர் எழில் முதல்வன் கூறுவது இங்கு கவனிக்கத் தக்கது. 1. கதைப் பின்னல் 2. உயிர்ப் புள்ள பாத்திரப்படைப்பு 3. ஆர்வமூட்டும் உரையாடல் 4. வியப்பான கதை முடிவுகள் 5. இன்பானுபவத்தை நல்கும் கற்பனை 6. ஆற்றலுள்ள மொழி நடை ஆகியவையே கல்கியின் கதைகள் பலராலும் விரும்பப்பட்டதற்குக் காரணம்.

கல்கியின் சிறுகதைகளை ஆராய்ந்தவர்கள் எல்லோரும் அவை உருவ அமைப்பால் சிறக்கவில்லையென்ற கருத்தினை வெவ்வேறு அளவில் வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் கல்கியினால் சிறுகதை ஜனரஞ்சக இலக்கியமாயிற்று என்பதை மறுக்க முடியாது. அத்துடன் அவரால் தமிழில் சிறுகதைப் பொருள் விரிந்தது.

''கல்கியினால் சிறுகதை தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அத்தி வாரத்தின் மீதே, சிறுகதை கட்டியெழுப்பப்பட்டு சிகரமும் அமைக்கப்பட்டது. அவ்வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் மணிக்கொடிக் குழுவினர்'' என்று கா. சிவத்தம்பி கணிப்பிடுவது தமிழ் இலக்கிய வரலாற்று நோக்கில் மிகத் தெளிவானது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com