க்ரியாவின் 'மாயா'
'மாயா' - மனதின் இடையறாத அச்சங்களையும் அதன் விளைவாய்த் தோன்றும் மன அழுத்தங்களையும் நாடக வடிவில் சித்தரிக்கும் ஒரு கலை முயற்சி. வாழ்வில் நம்மைச் சில பயங்கள் துரத்துகின்றன. அவற்றின் குரூரப் பிடிக்கு ஆட்பட்டு, ஒருவிதப் பாதுகாப்பின்மையில் எப்போதும் தவித்துக் கொண்டிருக்கிறோம். தோல்வி மற்றும் இழப்பு - இவை இரண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. எதிர்காலத்தையே பெரிய கேள்விக் குறியாக்குபவை. இளமைத் துடிப்பும், புத்திசாலித்தனமும், தைரியமும் மிக்க மாயாவையும் சில பயங்கள் துரத்துகின்றன. எதிர்காலமே புதிராகிவிட அவள் அன்னையிடம் மீண்டு வருகிறாள். அவளது தாயின் மூலம் அறிமுகமாகும் ஒரு மனோதத்துவ நிபுணரின் உறவில் அவள் ஒரு பாதுகாப்பைக் கண்டடைகிறாள்.

ஆனால் அவளைத் தழுவும் மரணம் அவளது அன்னையின் சுயகௌரவத் திற்குப் பேரிடியாய் வந்து அமைகிறது. அவளைப் பழிவாங்கும் நிலைக்குத் தள்ளுகிறது. மாயாவை இழந்ததால் மனோதத்துவ நிபுணருக்கோ மன அழுத்தம். ஒவ்வொரு மனிதனின் மனமும் கட்டுக்கடங்காத கோர தாண்டவமாட வாழ்க்கை நடத்தும் நாடகம் 'மாயா'வில் அரங்கேறுகிறது.

'மாயா'வை மேடையேற்றப் போகும் க்ரியா கலைக்குழு அதன் இயக்குனர் தீபா ராமானுஜம் அவர்களால் துவக்கப்பட்டது. இவர் 2003இல் 'தனிமை' என்ற சிறப்பான நாடகத்தை இயக்கி, நடித்து அளித்தவர் என்பது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். "வட அமெரிக்கா வாழ் தமிழர்களின் பொழுதுபோக்கிற்காகவும், கலாச்சாரத் தொடர்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், வேர்களை ஞாபகப் படுத்தும் கண்ணியாகவும் தமிழ் மேடை நாடகப் பாரம்பரியத்தை ஒட்டிச் சிறப்பான படைப்புகளை மேடையேற்றுவதை” குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது க்ரியா. முழுநீளத் தமிழ் நாடகங்களுக்கென்று பிரத்யேகமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறது க்ரியா.

மாயாவாக வந்து நம்மைக் கட்டிப்போடப் போகிறவர் தீபா ராமானுஜம். 'பிரேமி', 'சுந்தரவனம்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும், வளைகுடாப் பகுதியில் மேடையேறிய 'தனிமை', 'மாரி போன பார்ட்டி', 'ஆணென்ன பெண்ணென்ன' முதலிய பல நாடகங்களில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர். வளைகுடாப் பகுதியில் வசிக்கும் பகுதிநேரக் கலைஞர்களான ஜெயா அஜீத், வரதராஜன், நவீன்குமார் நாதன், வேணு சுப்பிரமணியம், நிர்மல்குமார், மற்றும் பிரபாகரன் முதலானோர் இதில் நடிக்கிறார்கள். இவர் களில் சிலர் 'தனிமை' நாடகத்தால் முன்பே பரிச்சய மானவர்கள். வரதராஜன், தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்த முன்னோடிகளில் முக்கிய மானவர். எண்பதுகளில் இங்கே நிறையத் தமிழ் நாடகங்களை மேடையேற்றி நடித்தவர்.

'மாயா'வின் நாடக ஆசிரியர், தமிழ் நாட்டில் நாடகங்கள் பலவற்றை எழுதி மேடையேற்றிய பாம்பே சாணக்யா. 'நெருடும் உறவுகள்', 'அக்னி வார்ப்புகள்' போன்ற மேடை நாடகங்களும், ராஜ் டீவியில் ஒளிபரப்பான 'இரண்டாம் சாணக்யன்' தொடரும் இவரது பிரசித்தி பெற்ற படைப்புகள். அது தவிரத் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் 'பிரேமி', 'காதல் பகடை' முதலான பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுத்தும் உதவி இயக்கமும் அளித்தவர். துணுக்குத் தோரணங்களாய் மலிந்துவிட்ட பல தமிழ் நாடகங்களுக்கு நடுவே பொழுதுபோக்கைத் தாண்டி சமூகப் பிரச்சனைகள், தனி மனிதப் போராட்டங்களையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து சிந்தனைக்கு வளம் சேர்க்கும் தனித்துவம் மிக்கவை இவரது நாடகங்கள்.

ஜனவரி 2004இல் இந்தியாவில் 'நிறம் மாறும் நிஜங்கள்' என்ற பெயரில் சாணக்யாவின் கலாமந்திர் குழு 'மாயா'வை மேடையேற்றிய பொழுது பலத்த வரவேற்பைப் பெற்றது. "வித்தியாசமான கருவை எடுத்துக்கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை இடை வெளியின்றி ஈர்க்கிறது சாணக்யாவின் எழுத்தும் இயக்கமும்" என்று ஹிந்து நாளிதழ் விமர்சனத்தில் இவரைப் பாராட்டுகிறது.

அச்சங்களுக்குள் சிறைப்பட்ட மனித மனத்தின் செயல்பாடுகள் நாமே எதிர்பாராத பல விளைவுகளைத் தரவல்லது. அவை என்னவென்று சித்தரிக்க முற்படும் 'மாயா' சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பலாம்.

'மாயா' அரங்கேறப்போகும் நாள்: மார்ச் 21 2004
நேரம்: 2 P.M. மற்றும் 5 P.M.
இடம்: கப்பர்லீ தியேட்டர்,
பாலோ ஆல்டோ
வலையகம்: http://www.kreacreations.com

மனுபாரதி

© TamilOnline.com