தமிழ்ப் பண்பாடு
"நூறாண்டு காலம் வாழ்க!" என்று நல்லவர்களை வாழ்த்தி மகிழ்வது தமிழ்ப் பண்பாடு. அறிஞர்கள், புலவர்கள், தலைவர் களுக்கு நூற்றாண்டு விழா எடுத்துக் கொண்டாடுவது பண்பட்ட சமுதாயங்கள் அனைத்துக்கும் உள்ள இயல்பு. அப்படிக் கொண்டாடத் தக்க அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் மர்ரெ எமனோவின் நூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. விழாவை ஒட்டி நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து பல மொழியியல் பேராசிரியர்கள் வந்திருந்தனர். பேரா. எமனோவின் முன்னாள் மாணவர் பேரா. ஷர்மா, அவரே ஓய்வு பெற்ற பெரும் பேராசிரியர், விழாவில் கலந்து கொள்ளத் தன் மனைவியுடன் இந்தியா விலிருந்து வந்திருந்தார். இந்திய சமஸ்கிருத வித்வான்கள் பேராசிரியர் எமனோவின் சமஸ்கிருதப் புலமையைப் பாராட்டி அளித்த 'வித்யாசாகர்' விருதை ஷர்மா சமர்ப்பித்தார்.

சமஸ்கிருதப் புலவர் 'வித்யாசாகர்' எமனோவின் புகழ் அவரது 'திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி' (A Dravidian Etymological Dictionary, 1961) என்ற நூலினால் என்றும் நிலைத்து நிற்கும். நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களின் பேச்சு மொழியையும், அவர்களது பாடல் களையும் பதிவு செய்து அவற்றைப் பாதுகாத்த பேரா. எமனோவுக்கு அவர் சந்தித்தவர்களின் வழி வந்தவர்கள் தோடர் மொழியில் வாழ்த்தைப் பதிவு செய்து அனுப்பியிருந்தனர். விழாவுக்கு முந்தைய நாள் இரவு, கான்கார்டு முருகன் கோவில் பூசாரி, விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமதி கௌசல்யா ஹார்ட் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி, பேரா. எமனோவுக்கு வழங்க வேண்டிய பொன் னாடை அளித்தார். குறிஞ்சிக் கடவுள் முருகனே ஒரு பூசாரி வடிவில் வந்து குறிஞ்சி மக்களின் மொழியை ஆய்ந்த பேரா. எமனோவைப் போற்றியது போல் தான் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார் பேரா. ஜோர்ஜ் ஹார்ட். சான் ·பிரான் சிஸ்கோ தமிழ் மன்றம் மற்றும் தென்றல் சார்பில் பேரா. எமனோவுக் குப் பொன்னாடை சாற்றும் பெருமை எனக்குக் கிட்டியது.

பாராட்டுகளை ஏற்றுப் பேசிய பேரா. எமனோ, "ஓரிரண்டு வார்த்தை பேச முடியுமா என்று என்னைக் கேட்கிறார்கள்! ஓரிரண்டு வார்த்தை பேச முடியாவிட்டால் மொழியியல் பேராசிரியராக இருந்து என்ன பயன்!" என்று அரங்கை அதிர வைத்தார். தனக்கு வயதாகி விட்டதால் காது சரியாகக் கேட்பதில்லை, பார்வை சரியாகத் தெரிவ தில்லை, அதனால் தன்னைப் பற்றி யார் என்ன சொன்னார்கள் என்று தெரிய வில்லை என்ற அவர், இதற்கு ஒரே தீர்வு கிழப் பருவம் எய்யாமலிருப்பதுதான் என்றார். அப்படியே உடலின் வயது கூடித்தான் ஆக வேண்டும் என்றாலும் உள்ளத்தை இளமை யாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அமெரிக்க இந்தியர்களின் வாய்மொழி களிலும் ஆராய்ச்சி செய்திருக்கும் அவர், ஓர் அமெரிக்க இந்திய மொழியியல் ஆராய்ச்சி யாளர் வாழ்நாள் முழுதும் அரும்பாடு பட்டுத் திரட்டிய ஆராய்ச்சிக் குறிப்புகளை அவர் குடி மரபுப்படி அவரது இறுதிச் சடங்கில் எரித்த கதையைச் சொல்லி நொந்தார். நம்மோடு வாழும் சில மனித இனங்களின் எண்ணங்கள் இருந்த சுவடு இல்லாமல் மறையக்கூடியது எவ்வளவு எளிது! தோடர்கள், படகர்கள் மொழிகளை, அந்தக் குடியினர் நாகரீக மக்களின் தாக்கத்தால் மாறுவதற்கு முன்னர் பதிவு செய்த ஒருவரால் மட்டுமே, எப்போதோ நடந்த இந்த நிகழ்ச்சியை இன்றும் எண்ணித் துடிக்க முடியும்.

நிகழ்ச்சியின் நிறைவில் பிறந்த நாள் கேக் வெட்ட அவரை அழைத்த போது, அவர் கேக்கின் முன்னே கை கூப்பித் தொழுது, கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணு முணுத்தார். என் காதுக்கு அது சமஸ்கிருத மந்திரம் போல் ஒலித்தது. பின்னர் ஏற்றிய மெழுகுவர்த்தியை அணைக்காமல் அங்கிருந்து விலகி விட்டார். மற்றவர்கள்தாம் விளைக்கை அணைத்து, கேக்கை வெட்டினார்கள்!

"பர்க்கெலி, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பொழுது தம் சொந்தச் சேமிப்பிலிருந்து தானும் நன்கொடை கொடுத்தவர். பல வெற்றிகள் கண்டு 100 வயது நிறைந்து வாழும் அவரை எப்படி வாழ்த்துவது. இறைவா அவருக்கு இன்னும் ஒரு நூறைக் கொடு என்பது பேராசையா? விழா முடிந்து வீடு திரும்பும் பொழுது என் மனம் நிறைந்திருந்தது. சின்னச் சின்ன சுகங்களுக்கு நன்றி இறைவா என்று என் மனம் முணுமுணுத்தது" என்று நெகிழ்கிறார் தமிழ்ப்பீட அறக்கட்டளை அமைப்புக் குழுவின் தலைவர் நண்பர் குமார் குமரப்பன்.

கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் திரும்பிய இடம் எல்லாம் இந்தியா பற்றிய செய்திகள்தாம். இந்தியா என்றால், ஈக்கள் மொய்க்கும் பிச்சைக் காரர்கள் முகங்களையும், பாம்பாட்டிகளையும், தாஜ் மகாலையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் புதிய இந்தியாவின் அடையாளச் சின்னமாக விளங்குவது பெங்களூர். ஆங்கிலம் தெரிந்த, திறமை மிக்க, மலிவான உயர்நுட்ப வல்லுநர்களைப் பல்லாயிரக் கணக்கில் உருவாக்கும் தொழிற்சாலையாக இந்தியா மாறி விட்டது. எந்த ஏழை நாடும் தன் மூளை பலத்தால் மட்டுமே முன்னேறியது இல்லை என்ற விதியை மீறி இந்தியா வளர்ந்திருக்கிறது என்று புகழ்ந்தது ஏ.பி.சி.யின் நைட்லைன் நிகழ்ச்சி. "ஒளிமயமான இந்தியா" என்றும் இந்த அசுர வளர்ச்சிக்குத் தாங்கள் தாம் காரணம் என்றும் இன்றைய இந்திய அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது!

இந்தியா இன்றைக்கு வந்து சேர ஏறி வந்த படிகள் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் தொடங்கின என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். "எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்" என்று பாரதியின் கனவை நினைவாக்க அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவ உயர் கல்வி நிலையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆலைகளையும் கல்விச் சாலைகளையும் அமைக்கத் தொடங்கியது நேருவின் ஆட்சியில்தான். சிலிகன் வேல்லியில் இந்தியர்களுக்கும் கணினி தெரியும் என்று இருபதாண்டுகளாக நிலைநாட்டியவர்கள் நேருவின் கோயில் களிலிருந்து வந்தவர்கள். படிப்படியான முன்னேற்றம் ஒரு கவிழ்நிலை (tipping point) எட்டியவுடன் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவிழ்நிலைக்குக்குத் தாம் பொறுப்பு என்று மன்மோகன் சிங், ப. சிதம்பரம் முதல் இன்றைய இந்திய அரசு வரை எல்லோருமே பறை சாற்றிக் கொள்ளலாம்.

தேர்தல் அரசியல் இங்கேயும் இந்தியாவிலும் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஓராண்டுக்கு முன்னர் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஈராக் போர், தீவிரவாதம், பொருளாதாரம், அரசின் அத்துமீறல், சுகாதாரம், வேலைகள் புலம் பெயர்வு பற்றிய தீவிர விவாதங்கள் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களைப் புறக்கணிக்கப்பட்டிருந்த எல்லைகளிலிருந்து மையத்துக்குக் கொண்டு வந்த ஆளுநர் ஹாவர்ட் டீன் தேர்தலில் வெல்ல முடியாவிட்டாலும், இந்த எண்ணங்கள் பெரும்பான்மை மக்கள் எண்ணங்கள் என்று காட்டி விட்டார். எலும்பற்ற புழு வெய்யிலில் வாடுவது போல் வாடிக் கொண்டிருந்த ஜனநாயகக் கட்சிக்கு எ·கு முதுகெலும்பு கொடுத்த பெருமை ஹாவர்ட் டீனுக்கு உண்டு. தேர்தல் வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல், விவாதிக்கப் பட வேண்டிய கருத்துகளை முன் வைத்துக் கொண்டிருக்கும் வேட்பாளர்கள் குசிநிச், ஷார்ப்டன் பாராட்டுக்குரியவர்கள்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com