ஜனவரி 2007: வாசகர் கடிதம்
தென்றலை திரும்பவும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

சுமார் ஓராண்டிற்கு பிறகு நாங்கள் திரும்பவும் மில்பிடாஸ், கலிபோர்னியா வந்துவிட்டோம். எங்களது அருமை 'தென்றலை திரும்பவும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். டிசம்பர் 2006 இதழில் வெளியான கட்டுரைகள் மிக அருமையாகவும், வாசகர்களுக்கு தேவையான கருத்துக்கள் தெளிவாகவும் சொல்லப்பட்டிருந்தன. குறிப்பாக,

1. அப்பணசாமி எழுதிய 'விடை தருகிறோம், கோபி அன்னா(ன்)'-இல் கோபி அன்னானின் திறமைகள், அவருக்கு பல்வேறு துறையிலும் உள்ள ஆழ்ந்த அறிவுத்திறன், (ஈராக் போன்ற) சர்ச்சைக்குரிய விஷயங்களை அவர் கையாளும் பக்குவம், போன்றவைகளை ஆழமாக அக்கட்டுரையில் எடுத்துரைத்திருக்கிறார். கோபி அன்னான் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் இந்த சமயத்தில் அவருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்வு அமைய வாழ்த்துவோம்.

2. சசிகிரணின் பேட்டி: சசிகிரணின் இரண்டு கச்சேரிகளை சென்னையில் கேட்டிருக்கிறேன். அவர் பல அற்புதமான திறமைகளை உள்ளடக்கிய ஒரு வளர்ந்து வரும் இசைக்கலைஞர்.

3. அன்புள்ள சினேகிதியே: இதில் வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கு உள்ளார்ந்த பதில்கள் வழங்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அரிய பணியை "தென்றல்" இடைவிடாது தொடர வேண்டும். உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும், வாசகர்களுக்கும் மகிழ்சிகரமான, வளமான, முன்னேற்றமான புத்தாண்டு 2007 அமைய வாழ்த்துகிறேன்.

ஆர். கண்ணன், கீதா கண்ணன், மில்பிடாஸ், கலிபோர்னியா.

தென்றலுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மைதிலி பார்த்தசாரதி, மஸ்ஸச்சுஸெட்ஸ்


'தென்றல் காற்று' போல் தங்களின் தென்றல் இதழும் தென்றலின் சுகமும் தமிழின் மணமும் மகிழ்வூட்டுகிறது.

தலையங்கம் முதல் கலை, இலக்கியம், வரலாறு, சமையல், சமயம், சிறுவர் கதை முதலாக அனைத்தும் அருமை.

கவியரசர் கண்ணதாசன் விழா முதல் மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் தென்றல் இதழ் வழி அறிந்து கொண்டோம்.

டிசம்பர் இதழில் இளந்தென்றலில் வந்துள்ள ஈசாப் நீதிக்கதை சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பயனுள்ளது.இவ்வளவு தரமான பத்திரிகை அமெரிக்காவாழ் தமிழ் மக்களுக்கு இலவசமாக கிடைப்பது ஆச்சர்யம்.

முதன்முதலாக தென்றலை சுவைக்கும் என் போன்ற மூத்த தமிழர்களுக்கு தமிழகப் பண்பாட்டை நினைவூட்டுகிறது.

சீனிவாசன் திருநாவுக்கரசு, திருமதி திலகம்

© TamilOnline.com