ஒரு விவாகரத்து
பிரபல தொழிலதிபர் சங்கரனைப் பேட்டி காண 'பூவுலகம் டிவி'யின் சார்பில் வந்திருந்த கங்கா அவர் வீட்டு வரவேற்பறையை நோட்டம் விட்டாள். பெரிய அறை. கலைநயமான, ஆனால் ஆடம்பரமில்லாத அலங்காரம். எதிலும் ஒரு ஒழுங்கு, சுத்தம். 'டிவியில் பார்வையாக இருக்கும்' என்று திருப்திப்பட்டுக் கொண்டவள் காமிராமேனுடன் சரியான கோணங்கள் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பினாள்.

மூன்று மணியடிக்க, சரியாக சங்கரன் அறையில் நுழைந்தார். 'ஹலோ எவரிபடி' என்றவாரே நுழைந்தவர் கங்காவை ஒரு கணம் ஆச்சரியமாகப் பார்த்தார். கங்கா சலனமில்லாத பார்வையால் அவரை அளந்துகொண்டாள். கம்பீரமான தோற்றம், ஆழ்ந்த பார்வை, ஒரு நிதானம் சமயத்திற் கேற்ற ஆடை அலங்காரம்.

''நமஸ்காரம் மிஸ்டர் சங்கரன்'' என்று கைகூப்பினாள். நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக "என்ன.. இன்டர்வியூ ஆரம்பிக்கலாமா?" என்று அவர் கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது. கையில் தயாராக இருந்தன கேள்விகள். ஒருமுறை பார்த்துக் கொண்டாள். முக்கால்மணி நேரத்தில் பேட்டி கச்சிதமாக முடிந்தது. விளம்பரத்துறையில் ஆரம்பக் காலத்தில் உழைத்தது, வெகு சீக்கிரம் முன்னுக்கு வந்து நல்ல பெயர் கிடைத்தது, ஐந்து வருஷம் முன்னால் சொந்தமாக விளம்பரத் தொழிலில் நுழைந்தது, சென்ற மூன்று வருஷத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிதேசங்களிலும் புகழ்பெற்று அந்நியச் செலவாணி சம்பாதித்துக் குவிப்பது - எல்லாமே அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இரவும் பகலுமான அவர் உழைப்பின் பலன்தான் இந்தப் பெயரும் புகழும்.

கடைசியாக அவரது சொந்த வாழ்க்கைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுங்கள் என்றாள் கங்கா. அது பற்றியும் சொன்னார்.

பன்னிரண்டு வருடத்திற்கு முன்னால் மாதவியை மணந்தார். ஆறுவருட தாம்பத்தியத்திற்குப் பின் கான்சர் அவளைக் கொண்டு போக, இப்போது பத்துவயது மகன் மட்டுமே துணை. கம்பெனி ஆரம்பிக்கத் தூண்டுகோலாக இருந்தது மாதவிதான். ஆனால் துரதிர்ஷ்டம் எல்லா ஏற்பாடும் முடிந்து கம்பெனி ஆரம்பிக்கையில் அவள் உடன் இல்லை. ஆழந்த வருத்தத்துடன் அவர் பேசியபோது, கங்கா அவரைக் கூர்மையாகக் கவனித்தாள்.

கங்கா பேட்டி முடிந்த கையுடன், அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டாள். ஹோட்டலுக்குத் திரும்புமுன் பெங்களூரிலேயே இருக்கும் அக்காவைப் பார்த்துவர நினைத்தவள், டிவி வேனைத் திரும்ப அனுப்பிவிட்டு, டாக்ஸி எடுத்துக் கொண்டு ஜெயநகர் கிளம்பினாள்.

சுதாவிற்குத் தங்கையை பார்த்ததும் ஒரே சந்தோஷம். குழந்தைகளும் சித்தியைக்கண்டு ஆனந்திக்க, அவள் கிளம்பும்போது மணி இரவு எட்டு. வாசலுக்கு அவளை வழியனுப்ப வந்த சுதா, ''என்ன கங்கா, கல்யாண சமாசாரமே எடுக்க மாட்டேன் என்று ஏதாவது விரதமா? அப்பா, அம்மாவுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு தெரியுமா?'' என்று கேட்டாள். வழக்கம்போல் ஒரு புன்சிரிப்பையே பதிலாக்கிக் கிளம்பினாள் கங்கா.

டாக்ஸியில் ஏறி ஹோட்டலுக்கு விடச் சொன்னாள். திடீரென அன்றையத் தேதி நினைவு வந்தது. ஆகஸ்ட் 20.

18 வருடங்களுக்கு முன் இதே ஆகஸ்ட் 20 அன்று கங்கா இதே சங்கரனுக்கு மனைவியானாள். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் நடந்தது. வெகு சந்தோஷமாகத் தேனிலவுக்குக் கோடைக்கானல் சென்று திரும்பினார்கள். அடுத்து வந்த பத்து நாட்களும் பாஸ்போர்ட், விசா என்று அலைச்சலாகக் கழிய, இருவரும் ஒருவாறாக விமானமேறி வாஷிங்டன் வந்து சேர்ந்தார்கள். முதல் முறையாக வெளிதேசம் வந்த கங்காவுக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது. சங்கரனின் நண்பர்கள் குழாம் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு டிஷ் செய்து கொண்டு வந்திருந்தார்கள். வடக்கு, தெற்கு என்றில்லாமல் இந்தியச் சமையல் வகை அனைத்துமே மேஜை மீது வந்தமர்ந்திருந்தது. மிகவும் சகஜமாக, சிநேகத்துடன் பழகிய பெண்களைப் பார்க்க மிகவும் பிடித்திருந்தது. அனேகமாக எல்லாப் பெண்களுமே வேலையில் இருந்தார்கள். வார இறுதியில் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள்.

எல்லாரும் சுற்றி வந்து கொண்டிருக்க, சங்கரன் மட்டும் பார் அருகிலேயே உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. சிநேகிதர்களில் சிலர் அது பற்றி அவளைப் பரிகாசம் செய்ய அவன் அலட்டிக் கொள்ளாமல் மேலும் மேலும் குடித்துக் கொண்டிருந்தான். பார்ட்டி ஒருவராக முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது சங்கரன் வாய் குழறுவது கண்டு, அவன் நண்பன் காரை ஓட்ட முன் வந்தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தபின் கங்கா ஏதும் பேசவில்லை. கோபத்தையும், பயத்தையும் அடக்கிக் கொண்டு நேரே படுக்கையில் போய் விழுந்தாள். சங்கரன் சோபாவில் படுத்துக் கொண்டான்.

கங்கா சில மாதங்களில் அமெரிக்க வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மேற்கொண்டு படிக்க விண்ணப்பிக்க ஆரம்பித்தாள். சனி, ஞாயிறுகளில் நண்பர்கள் வீடுகளுக்கு விஜயம். நாள் முழுவதும் ஷாப்பிங் என்று கழிந்தது. இந்திய சாமான்கள் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொண்டாள். அமெரிக்க வாழ்க்கை சுகமாகவே இருந்தது. பாத்திரம் துலக்க, வீடு சுத்திகரிக்க எந்திரங்களின் உதவியில் வேலைக் காரர்கள் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை பிடித்தது.

சங்கரனுக்கு வேலையில் மிக நல்ல பெயர் என்று தெரிந்தது. நல்ல உழைப்பாளி. கெட்டிக்காரன். மிகவும் முன்னுக்கு வரக் கூடியவன் என்று பலரும் சொன்னார்கள். எல்லா நல்ல குணங்களும் பொருந்திய அவனிடம் குடிப்பழக்கம் மட்டும் ஒரு பெரிய முரண்பாடு. தினம் சாப்பாட்டுக்கு முன் குடிக்க ஆரம்பிப்பான். பலநாள் சற்று அதிகமாகவே குடித்தான்.

கங்காவால் குடிப்பழக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டில் கடைக் குட்டியாக, செல்லமாக வளர்ந்தவள். அவள் அப்பாவோ அண்ணன்மாரோ எவருக்கும் குடிக்கும் வழக்கம் இல்லாததால் அவளுக்கு அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபங்கள் விழுந்தன. அவள் சண்டை போட்டால் அவனுக்கு கோபம் வந்தது. வேண்டுமென்றே அதிகம் குடித்தான். அவளுக்கு இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை.

ஒருநாள் இருவருக்குமே கோபம் அதிகமாகவே சண்டை வலுத்தது. ஊருக்குக் கிளம்பிப் போவதாக கங்கா மிரட்ட, அவனும் வீம்பாக 'எங்கே வேணுமானாலும், எப்போ வேணுமானாலும் போ. திரும்பி அழைப்பேன் என்று எதிர்பார்க்காதே' என்று இரைந்தான். அடுத்த நாளே பிடிவாதமாக பயணச்சீட்டுப் பதிவு செய்தாள் கங்கா. பத்தே நாளில் இந்தியாவுக்குத் திரும்பிப் போனாள். திருமணமாகி ஒருவருடத்திற்குள் திரும்பி வந்த பெண்ணைக் கவலையுடன் பார்த்தார்கள் ராகவனும், ஜானகியும். நிறைய புத்தி சொன்னார்கள். சங்கரனுக்குப் போன் செய்தார் ராகவன்.

அவன் ஒரே முரட்டுதனமாக ''சர், இதுதான் நான். என்னை ஏற்றுக்கொள்ள முடிந்தால் உங்கள் பெண் திரும்பி வரட்டும்'' என்று சொல்ல நம்பிக்கை இழந்தார்கள்.

இந்தச் சமயத்தில் கங்காவுக்கு ஒரு டிவி கம்பெனியில் வேலை கிடைத்தது. மேலும் ஒரு வருடம் கழிய, சங்கரனிடம் இருந்து விவாகரத்து அறிக்கை வந்தது. உடன் கையொப்பமிட்டு அனுப்பிவிட்டாள். வேலையில் முன்னுக்குப் போகப்போக பொறுப்புகள் ஏறின. மனதில் முதிர்ச்சி வந்தது. மெல்ல தான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இன்று திருமண வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

சில வருடங்களுக்குப் பின் சங்கரன் மணம் புரிந்து கொண்ட செய்தி வந்தது. ஏமாற்றம் மனதை அழுத்தியது. நம்பிக்கை இத்தனை நாள் ஒட்டிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். அவள் பெற்றோரும், அண்ணாக் களும் அவளுக்கு மறுபடி கல்யாணம் செய்விக்க ஆசைப்பட்டனர். சின்ன வயதில் அவளுடைய தனிமையான வாழ்க்கையைப் பார்க்க அவர்களால் முடியவில்லை.

அவளுக்குச் சில வரன்களை அப்பா அறிமுகம் செய்தார். அவளால் யாரையும் ஏற்கமுடியவில்லை.

இந்த சமயத்தில்தான் சங்கரன் இந்தியா திரும்பிவிட்டதாகவும், புதுக்கம்பெனி ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வந்தது. தொழிலில் பிரபலமான அவருடன் இன்று டிவியில் பேட்டி ஒளிபரப்பாகப் போகிறது.

மனதைச் சிரமப்பட்டுப் பழைய நினைவுகளிலிருந்து திரும்பினாள் கங்கா. அதிகாலையில் விமானம். ஹோட்டலின் வரவேற்புப் பணியாளரிடம் துயிலெழுப்பவும், டாக்ஸி தருவிக்கவும் சொல்லிவிட்டுப் படுத்தாள். நான்கு மணிக்கே எழுந்து கிளம்பிச் சென்னை வந்து சேர்ந்தாள்.

ஒருமாதம் ஓடியது. வேலையில் கவனம் செலுத்த முயற்சித்தாள். மனது மக்கர் செய்தது. அவள் மேலதிகாரி அவளைச் சற்றுக் கவலையுடன் பார்த்தார். "ஏதும் பிரச்சினையில்லையே, கங்கா?" என்று கேட்டவரை ஏதோ மழுப்பலான பதிலில் சமாளித்தாள். பெற்றோரைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. டிவி பேட்டியைப் பார்த்த அவர்களுக்கு, அவள் சோர்வின் காரணம் ஓரளவு புரிய, அப்பா அவளை அர்த்தத்துடன் பார்த்தார். அவள் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

அன்று இரவு எட்டுமணிக்குத் தொலை பேசி மணி அடிக்க, அப்பா எடுத்துக் கேட்டார். ''அவர் இப்பவே வரலாமே'' என்றவர் போனை வைத்தார். "சங்கரன் தான். கொஞ்ச நேரத்தில் வரானாம்...'' என்றவர் மேற்கொண்டு ஏதும் விவரிக்கவில்லை.

அரைமணியில் சங்கரன் வந்து சேர்ந்தான். வண்டியைத் தானே ஒட்டி வந்திருந்தான். சற்றுநேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான். ராகவன் தான் நேரடியாக ஆரம்பித்தார். ''என்ன சங்கரா, நீ கட்டாயம் அரசியல் பேச வரவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வந்த விஷயம் என்ன, சொல்லலாமே'' என்று துவக்கிக் கொடுக்க, சங்கரன் சற்றே சிரித்துக் கொண்டான். பிறகு நேரடியாக கங்காவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

''கங்கா ரொம்ப நாளா என் மனதில் ஒரு உறுத்தல். பதினெட்டு வருஷங்களுக்கு முன் நான் நடந்து கொண்டது எந்தவிதத்திலும் நியாயமில்லை. அதற்காக வெட்கப்படுகிறேன்... சாரி'' என்றான். கங்காவும் இறங்கிய குரலில் ''நானும் பொறுமையாக இருந்திருக்கலாமே. என் தப்பும்தான்'' என்றாள்.

அதை ஒத்துக்கொள்ளும் பாவனையில் தலையாட்டிய சங்கரன் ''நான் குடிப்பதை நிறுத்தி ஒன்பது வருஷம் முடிகிறது. கங்கா, என்னை மாற்றியது மாதவிதான்...'' என்றவன் தொடர்ந்தான்.

''மாதவி ஒரு அநாதைப்பெண். ஆசிரமத்தில் வளர்ந்தவள். ஒரு நண்பனின் வீட்டில் அவளைப் பார்த்தபோது என் மனதில் இரக்கம் தவிர வேறு ஏதும் தோன்றவில்லை. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். அதன்பிறகு பலமுறை அவளைச் சந்தித் தேன். அவளிடம் தன்னிரக்கம் சற்றும் இருக்கவில்லை. எதிலும் ஒரு நிதானம். அவளிடம் மெல்ல மெல்ல பிரியம் தோன்றியது. நீ என்னை விட்டுப் போன ஏமாற்றத்தில் இருந்த எனக்கு ஒரு துணை தேவையாக இருந்தது. ரொம்ப எளிமையாக பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்."

"போகப்போகத்தான் எனக்குப் புரிந்தது. எனக்குக் கிடைத்து எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று. நான் குடிக்கும் போது மாதவி ஒருநாளும் ஏதும் கேட்டதில்லை. ஆனால் பின்னால் நிறையப் பேசுவாள். பாசிடிவாகப் பேசுவாள். வெளிதேசத்தில் சம்பாதித்ததை நமது தேசத்திலேயே தொழில் ஆரம்பித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதைப் பற்றி, முன்னேறி வரும் பாரதத்தைப் பற்றி, நமது கலாசாரத்தைப் பற்றி நிறைய பேசுவாள். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு மகன் முகுந்த் பிறக்க, வீட்டில் மகிழ்ச்சி நிறைந்தது. எனக்குக் குடிப்பதில் சுவராஸ் யம் சற்றுக்குறையத் தொடங்கியது. முழுதுமாக விட்டுவிடத் தீர்மானித்தேன். விடுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆறுமாதங்கள் பல்லைக்கடித்துக் கொண்டு மன வைராக்கியத்துடன் பேராடினேன். மாதவியின் இதமான துணை இல்லாமல், என்னால் முடிந்திருக்காது என்றுதான் சொல்வேன்."

"ஒருநாள் மாதவி ஜுரம் என்று படுத்தாள். நாலே வயது முகுந்தனை விட்டு, கேன்சரில் மரித்தாள் மாதவி. டாக்டர்கள் கண்டுபிடித்து ஆறுமாதம்கூட அவள் ஜீவித்திருக்கவில்லை. அதன்பிறகு இந்தியாவில் தொழில் சூடுபிடிக்க இங்கே வந்து சேர்ந்தேன். முகுந்தும், தொழிலும்தான் என் வாழ்க்கை."

"சென்ற மாதம் உன்னைக் கண்டபோது, எனக்குப் பெரிய ஆச்சர்யம். நீயும் நிறைய மாறியிருக்கிறாய் கங்கா. உன் சகஊழியர்கள் உன்னிடம் காட்டும் மரியாதையையும் உன் வார்த்தைக்குக் கட்டுப்படுவதும் பார்த்தேன். நீ அவர்களைச் சாந்தமாக பொறுமையாகக் கையாளுவதைக் கண்டேன். ஒரு மாதமாக உன் நிகழ்ச்சிகளைத் தவறாது பார்த்து வருகிறேன்."

"நாம் இருவருமே இளம் ரத்தத்தின் வேகத்தில் அவசரமும் ஆத்திரமும் பட்டு வாழ்வைப் பாழடித்துக் கொண்டோம் என்று தோன்றியது. உன்னிடம் மன்னிப்புக் கோரத் தோன்றியது."

அவன் பேசுவதை நிறுத்தினான். அவளைச் சந்தித்த அவன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அவள் கண்களிலும் ஒரு பதில் இருந்ததோ?

உமா

© TamilOnline.com