பன்முக மனிதர் ஏ.என். சிவராமன்
மூதறிஞர் இராஜாஜி ஒருமுறை தன் நண்பர் சின்ன அண்ணாமலையிடம் "என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார். அவர் "ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கின்றேன்" என்று சொல்ல, உடனே இராஜாஜி "அது சரி, பிழைப்புக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டாராம். பத்திரிகை உலகம் இப்படி இருந்த காலத்திலே தமிழிலே ஒரு தினப்பத்திரிகை 1934ல் ஆரம்பிக்கப் பட்டது. அந்தப் பத்திரிகை 'தினமணி'. ஆரம்பித்த நாள் முதல் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராய்த் தொடர்ந்து 54 ஆண்டுக்காலம் பணியாற்றிச் சாதனை புரிந்தவர் காலஞ்சென்ற ஏ.என். சிவராமன் அவர்கள். தொடர்ந்து ஒரே பத்திரிகையில் இத்தனை ஆண்டுக் காலம் யாருமே ஆசிரியராய் இருந்ததில்லை. இவர் புரிந்திருக்கும் வேறு பல சாதனைகளும் உண்டு.

இவரது பேரனும் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியருமான கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து உரையாடியதில் முன்னோடிப் பத்திரிக்கையாளர் சிவராமன் பற்றிய பல சுவையான செய்திகள் கிடைத்தன. அவை இதோ..

என் தாத்தாவின் பிறப்பிலேயே ஒரு அதிசயம். அவர் பிறந்ததும், இறந்ததும் மார்ச் முதல்தேதி. 1904ல் பிறந்தார், 2001ல் மறைந்தார். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு என்பதால் விழாக் கொண்டாட எண்ணியுள்ளோம்.

திருநெல்வேலியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அதே ஊரில் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும்போதே விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ள காந்திஜி அவர்கள் நம் நாட்டு இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்க, சிவராமனும் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தீர்மானித்தார். வெகு நன்றாகப் படிக்கும் அவருக்குக் கல்லூரி முதல்வர் முதலில் அனுமதி தர மறுத்தார். கல்லூரியை விட்டு விலகப் போவதாக முடிவெடுத்துவிட்ட அவரின் உறுதியைக் கண்ட முதல்வர் K.C. போஸ் அவரிடம் ஒரு உறுதி மொழியைப் பெற்றுக் கொண்டு அதன் பின் அவருக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தார். அந்த உறுதி மொழி இதுதான்: "வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்துவருவேன்". சொன்னதைப் போலவே அவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 14 மணி நேரம் படிப்பார். 2001 மார்ச் மாதம் முதல் தேதி மாலை திருவாசகம் படித்துவிட்டு 7.05 மணிக்குப் புத்தகத்தைக் கீழே வைத்தவர் 7.30 மணிக்கு இறந்து போனார்.

ஏ.என்.எஸ். கூர்ந்த புலமையுடன் அரசியலைக் கவனித்து வந்தார். தினமணியின் ஆசிரியராய் அவர் எழுதி வந்த தலையங்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்த காரணத்தினாலேயே தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடிந்தது என்று பெருமையுடன் சொல்கிறார் இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நேர்முகச் செயலர் திரு. இராதாகிருஷ்ணன்.

ஏ.என். சிவராமனுக்கு தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தேர்ச்சியுண்டு. ஜப்பானிய, மலாய் மற்றும் சீன மொழியையும் கற்றுக் கொண்டார். அவருக்குத் தொண்ணூறு வயதைத் தாண்டிய பிறகும் மொழிகளைக் கற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வம் குறையவில்லை.

இஸ்லாமியர்களின் வேதமாகிய குர் ஆன் சொல்லும் இறைவன் பற்றிய கருத்துக்கள் எந்த அளவில் இந்து மதக் கருத்துக்களோடு ஒத்திருக்கின்றன என்று ஒப்பீடு செய்யும் ஆர்வம் ஏற்பட்டது. புதுக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து அராபிய மொழியைக் கற்றுக் கொண்டு குர் ஆனைப் படித்தார். அப்போது அவருக்கு வயது 93. இந்த ஒப்பீட்டுக் கருத்துக்களை ஒரு கட்டுரையாக எழுதினார்.

நண்பர்களோடு பேசி வடநாட்டு மொழிகள் சிலவும் பேசக் கற்றுக்கொண்டார். தினமணிப் பத்திரிகையை வாங்கி அதற்கு சிவராமனை ஆசிரியராக்கிய கோயங்கா என்பவருடன் வடநாட்டுத் தொழிலதிபர் பிர்லா மார்வாரி மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது இடையில் சிவராமன், அவர்கள் பேசிக்கொண்டிருந்த மார்வாரி மொழியிலேயே தான் வந்த விஷயத்தைக் கூறினார். அதாவது காஞ்சிப் பெரியவர் தீர்மானித்திருந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நிதி உதவி கேட்டு சங்கர மடத்திலிருந்து ஒருவர் வந்திருப்பதாகக் கூறினார். இவர் மார்வாரி மொழி பேசியதைக்கேட்ட கோயங்கா "உம்மை வைத்துக் கொண்டு எந்த மொழியிலும் உமக்குத் தெரியாமல் எதையும் பேசிவிட முடியாதுபோல் இருக்கிறதே" என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

ஏ.என்.எஸ். நான்கு வேதங்களையும் கற்றிருந்தார். பொதுவாகவே யாரும் ஒரு வேதம் மட்டுமே கற்றிருப்பார்கள். தினமணியில் இவர் பல புனைபெயர்களில் எழுதிவந்தார். பொருளாதாரக் கட்டுரைகளுக்கு 'கணக்கன்', விவசாயம் பற்றி எழுத 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', தவிர 'குமாஸ்தா', அதேபோல் வேதங்கள் குறித்து எழுத 'அரைகுறை வேதியன்' என்ற பெயர்களை வைத்துக் கொண்டார். தொல்காப்பியத்தையும் வேதத்தையும் ஒப்பீடு செய்து அழகான கட்டுரை ஒன்றைத் தினமணியில் வெளியிட்டார்.

ஹிந்தி ஆட்சி மொழியாக்கப்பட்டபோது தமிழ் நசித்துப் போய்விடுமோ என்று அச்சம் தோன்றிய ஒரு கால கட்டத்தில் சிவராமன் அவர்கள் தாய்மொழி தமிழுக்கு ஆதரவாகப் பேசி, ஹிந்தி ஆட்சி மொழியாகலாம்; ஆனால் நமக்கு எஜமானனாக ஒருக்காலும் முடியாது என்று தம் கருத்தை அச்சமின்றி வெளியிட்டார்.

ஏ.என்.எஸ் கட்டுரைகளின் தொகுப்புக்கள் பல்கலைக் கழகத்தில் பாட நூல்களாக வைக்கப்படும் அளவிற்குச் சிறப்பாகக் கருதப்பட்டவை. இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் அரசியல், பொருளாதாரம், விவசாயம், இலக்கியம் என்ற நான்கு துறைகளில் பல்கலைக்கழகம் இவருடைய கட்டுரைத் தொகுப்பைப் பாட நூல்களாகத் தேர்ந்தெடுத்தது. இதுவரை ஒரே ஆசிரியரின் நான்கு துறை நூல்கள் பாடமாக்கப்பட்டதில்லை.

1964லேயே அண்டங்களின் சுழற்சி பற்றியும் அணுக்களைப்பற்றியும் தினமணி யில் தொடர்ந்து 40 நாட்கள் கட்டுரை எழுதி வந்திருக்கிறார். இந்தியா குடியரசு ஆனபின் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தினமணி அலுவலகத்தில் கணினி அலுவலகம் ஆரம்பித்துத் தன் தள்ளாத வயதிலும் அதன் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டார்.

ஏ.என்.எஸ்ஸின் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' பட்டம் ஒரு முறையும் 'பத்மபூஷண்' பட்டம் இருமுறையும் அளித்தது. இவற்றை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், திருக் கோவிலூரில் 'கபிலர் விருது' கொடுத்தபோது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். காரணம் கேட்டபோது அரசு அளிக்கும் பட்டம் நம்மை விலைக்கு வாங்கிவிடும்; இறைவன் சன்னிதியில் பெறும் பட்டத் தினால் அச்சப்பட ஏதுமில்லை என்றாராம்.

மார்ச் மாதம் அவரது நூறாவது பிறந்தநாள் வருகிறது. அஞ்சல் துறையில் சிறப்புத் தபால்தலை வெளியிட முயன்று கொண்டிருக்கின்றோம். ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய இருக்கின்றோம். சிறுகதை, நாவல், கவிதை என்றெல்லாம் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்கப்படுகின்றன். ஆனால் சிறந்த கட்டுரைக்கென்று இதுவரை போட்டி வைக்கப்படவில்லை. சிவராமன் அவர்கள் சிறந்த கட்டுரையாளர் என்பதால் 'A. N. S. Foundation Trust' என்ற அமைப்பை நிறுவிக் கட்டுரைப் போட்டி வைக்க எண்ணியுள்ளோம். வாசகர்களும் பிற அன்பர்களும் செய்யும் பொருளுதவியுடன் இம்முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகின்றோம்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com