வளைகரத்தால் வளர்ந்துவரும் வளைதளம்
www.indusladies.com

ஒவ்வொரு பெரிய அமைப்பு அமைவதற்கும், யாருக்கோ எங்கேயோ மனதில் தோன்றிய ஒரு சிறு பொறி காரணமாக இருப்பது நமக்கெல்லம் பரிச்சயமான விஷயமே!. நட்பு வேண்டும், நாடு முழுதும் நல்ல விஷயங்கள் பரவ வேண்டும் என்று 1905ம் ண்டு அமெரிக்க வழக்கறிஞர் பால்ஹாரினுக்கு தோனறியதன் விளைவு - ரோட்டரி என்ற சர்வதேச இயக்கத்தின் பிறப்பு!
சாதனைகள் பல படைத்து சரித்திரங்கள் எழுதி வருவதில் பெண்களின் பங்கு இப்போது பெருமைப்படும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. ஊரில் கூடி அமர்ந்து பேசினால் 'இவர்களுக்கு சாப்பாடு வேளை முடிஞ்சிதுன்னா ஊர் வம்பு பேசறதே வேலையாய்ப் போச்சு'' அப்படீன்னு சொல்லிப் போகிற கூட்டத்தையெல்லாம் பார்த்து, எங்கள் திண்ணைப் பேச்சு இப்போது ஊரில் மட்டுமல்ல.. உலகம் முழுவதும்! ஆனால் நீங்கள் நினைத்திருந்த வம்புப் பேச்சல்ல.. வளமான நட்பை பலமாக்கும் பேச்சுக்கள்! இப்படிச் சொல்லிப் போகிறார் அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அந்த இந்தியப் பெண்மணி! நட்போடு நல்ல உறவும் வேண்டும் என்ற மனித நேய ஆசை, கூடிப்பேசினால் கோடி நன்மை எனும் நம்பிக்கை - இந்த எண்ணங்களை உறுதிப்படுத்தும் முயற்சி யோடும், பணவசதி பெருக்க அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ள இந்தியப் பெண்மணிகளை வலைதளத்தின் மூலமாகமாவது இணைக்க வேண்டும் என்ற உந்துதலோடும், மாலதி என்ற அந்தப் பெண்மணி தோழிகள் சிலருடன், 2005 ம் வருடம் மார்ச் 29ம் தேதி தொடங்கிய அமைப்பே, www.indusladies.com!

மாலதியின் முயற்சியிலே மலர்ந்த இந்த வலைதளம் இன்று 2000க்கும் மேற்பட்ட மங்கையர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு பூத்துக் குலுங்குகிறது. கல்லூரிக்குச் செல்லும் இளம் பெண்கள் முதல், பேரன் பேத்திகளெடுத்து, அவர்கள் மழலைப் பேச்சுகளில் மயங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பாட்டிகள் வரை தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்திருக்கும் இந்த வலைதளம், பலவிதங் களில் மெருகேறிக் கொண்டிருக்கிறது.

படிப்பு, அந்தஸ்து, தகுதி, பதவி, மொழி என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல், அமெரிக்காவின் சிலிக்கான்வேலியின் கணிப்பொறியாளரில் தொடங்கி, குடும்பத் தலைவிகள், நிறுவனத் தலைவிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் காவல்துறைத் தலைவர் வரை அனைவரையும் இணைப்பது இந்த வலைதளத்தின் சிறப்பு.

சமையல் குறிப்புகள் நூற்றுக்கும் மேல்! அழகான ஆங்கில விளக்க உரையுடன், சூடான புகைப்படங்களுடன் (கல்லில் சூடாகிக் கொண்டிருக்கும் 'அடை' அப்படியே டிஜிட்டல் புகைப்படங்களாய்!) சுற்றுலா வருவது இப்போது ஆடவருக்கும் ஒரு ஆறுதலைத் தரும்!. முக்கியமாக, சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த திருமதி சித்ரா விஸ்வநாதனின் பங்கும், பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கும் செய்திகளும் ஏராளம்.

சமையலோடு நின்றுவிடவில்லை! கதை, கவிதை மற்றும் கட்டுரைகள் என இலக்கியப் பரிமாற்றங்களும் கொடி கட்டிப் பறக்கிற திங்கே! வரலொட்டி ரெங்கசாமி என்ற பெரிய தமிழ் எழுத்தாளருக்கு தனி மேடை (forum) அமைத்து தனிச்சிறப்பு செய்திருக்கிறார்கள் இந்த வலைத்தளத்தினர். இந்தியப் பெண்களின் கலாச்சார பாதிப்போ என்னவோ வலைதளத்தின் கோட்பாடுகள், வரை முறைகள் எல்லாம் குறிப்பிடும்படி இருக்கிறது. தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பிருப்பினும், தணிக்கைக் குழு ஒன்று இந்தத் தளத்தில் வெளியாகும் கணிப்புகள் மற்றும் கட்டுரைகளை ஒழுங்கு படுத்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

கணவர் அதிக நேரம் வேலை செய்வதால் தனக்கு வீட்டில் ஏற்படும் சங்கடங்களைக் கூறி புலம்பும் ஒரு தென்னாப்பிரிக்க இளம் பெண்ணுக்கு, எதையும் அனுசரித்து எப்படி வாழ்க்கையை நடத்துவது என்று ஜெர்மனி யின் நடுத்தரவயது பெண்மணி ஒருவர் அழகாக எடுத்துக் கூறுகிறார். நல்ல மருத்துவர் யார், தரமான மளிகை சாமான்களை அயல்நாடுகளில் எங்கு வாங்குவது என்றெல் லாம் விவாதிக்கப்படும் இந்த வலைதளத்தில் இப்போது ஊருக்கு ஒன்றாய் ஒரு தனிமேடை (forum) அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.

''அப்படி என்ன இந்த வலைதளத்தில்'' என்று அலட்சியமாக நுழைந்த நான் இப்போது ''அப்படியே கட்டுண்டு (addiction) கிடக்கிறேன்'' என்று சொல்லும் எத்தனையோ மங்கையர்கள்.

சமூகத்தை இணைத்து, மக்களை ஒரு தளத்திலே கருத்துக்களைப் பரிமாறச் செய்து, வியத்தகு மாற்றங்களை உலகிலே ஏற்படுத்து வது இந்தக் காலத்து வலைதளங்கள். ''யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று 2000ம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லிச் சென்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த www.indusladies.com வலைதளத்திற்கும், மாலதியின் மகத்தான சேவைக்கும் வாழ்த்துக்கள்!

கோபால் குமரப்பன்

© TamilOnline.com