அம்பலத்திற்கு வந்த மர்மத் தொழிலாளர்கள்
கணினிமயமாக்கத்தால், தான் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பிறருக்குச் சொல்லா மல் வேலை செய்து வந்த சில வல்லுநர்கள் இப்போது பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள்!

குறிப்பிட்டவருக்கு மட்டும் புரியும்படி, மற்ற எவருக்கும் புரியாமல் ரகசியமாகத் தகவலை அனுப்பும் சங்கேதவியலாளர் (cryptologist) களைத்தான் குறிப்பிடுகிறேன். எத்தனையோ நூற்றாண்டுகளாக இவர்கள் மன்னர்களுக்கோ, அல்லது மன்னர்களை எதிர்த்துச் சதி தீட்டும் குழுவினருக்கோ மட்டும்தான் பணி புரிந்து வந்திருக்கிறார்கள். உளவு பார்த்துப் பெற்ற தகவல்கள், போர்முனைத் திட்டங்கள் இவற்றை எழுதித் தூதுவன் மூலம் அனுப்பும்போது இடையே எதிரியிடம் சிக்கினாலும் அத்தகவல் எதிரிகளுக்குப் புரியாமல் இருக்கச் சங்கேதங்கள் பயன்படுத்தப் பட்டு வந்தன.

இன்று கணினியைப் பயன்படுத்தும் பலர் இணையம் வழியாகப் பொருள்களை வாங்கும்போதும், வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போதும் தங்களுடைய சொந்தத் தகவல்களை அனுப்புகிறார்கள். ஒரு வணிக நிறுவனம் தனது கணினியில் சேமித்து வைத்துள்ள வணிக ரகசியத் தகவல்களைச் சில திருடர்கள் உலகின் வேறு மூலையில் அமர்ந்துகொண்டு எத்தித் திருடுகின்றனர். எனவே ரகசியச் செய்தியை இணையப் பாதையோரம் அனுப்புகின்ற சாமான்யர்கள் பலருக்கும் சங்கேதங்கள் தேவைப்படுகின்றன.

இரகசிய நோய்கள் பெருகியதால், புள்ளி ராஜா விளம்பரங்கள் பகிரங்கமானது போல், இன்று சங்கேதவியலானது இராணுவப் பயிற்சி மையங்களிலிருந்து விடுதலையடைந்து, பகிரங்கமாகிப் பல்கலைக்கழகப் பாடமாக உலா வருகிறது.

எனவே நான் தைரியமாக இப்போது சில சங்கேத முறைகள் பற்றிக் கூற முடியும். முதலில் பழங்காலத்து வழிமுறைகள் ஒன்றிரண்டு.

மொட்டைத்தலை முறை

புத்தியைத் தீட்டாமல் கத்தியைத் தீட்டித் தகவலை அனுப்பிய சுவாரசியமான முறையொன்றை ரோமானிய, கிரேக்க அரசுகள் ஒரு காலத்தில் கையாண்டிருக்கின்றன. ஒரு ஒற்றனைக் கொணர்ந்து அவனுக்கு மொட்டையடித்து, சந்தனத்திற்குப் பதிலாக மையால் மொட்டைத் தலையில் எழுதி, ஒருவாரம் அவனை அடைத்து வைப்பர். கொஞ்சம் முடி வளர்ந்து எழுத்தை மறைத்தவுடன் அவனை அனுப்புவர். அங்கே போய்ச்சேர்ந்தவுடன் திரும்பவும் அவன் தலையை மழித்துச் செய்தியைப் படித்துக் கொள்ள வேண்டியது!

ஜூலியஸ் சீசர் காலத்திய முறை அடிப்படையில் மிகவும் எளிதென்றாலும், ஒரு வரையறையை நிர்ணயித்தது. இதன்படி இரகசியச் செய்தியில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பதிலாக, அகரவரிசையில் அவ்வெழுத்திலிருந்து (உதாரணமாக) நான்காவது இடத்திலிருக்கும் எழுத்தைப் போட்டு எழுதலாம்.

ஐந்து எண் சாவி

அதன்படி கீழ்க்கண்ட ரகசியம் என்னவென்று கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருக்கும்: 'நோலீலைகீகைளீ உரெசெ எரைகீகெறுதை'. ஆனால் தகவலைப் பெறுபவருக்கு எத்தனை எழுத்துத் தள்ளி (முன்னாலோ, பின்னாலோ) பார்க்கவேண்டும் என்ற விஷயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த உதாரணத்தில் 4 என்ற எண், இரகசியத்தை அவிழ்க்கும் சாவியாக இருக்கிறது. இந்த நாலாம் சாவியைப் போட்டுத் திறந்தால் 'நெல்லுக்குள் அரிசி இருக்கிறது' என்று அவிழ்த்து விடலாம்.

எந்தச் சங்கேத முறையில் நிறையச் சாவிகள் இருக்க வகையுண்டோ அதுதான் பாதுகாப்பான தாக இருக்க முடியும். குறைந்த எண்ணிக்கைச் சாவிகள்தாமென்றால் எதிரி ஒவ்வொரு சாவியாக மாற்றிமாற்றி முயன்று வெற்றி பெறலாம். எனவே சீசர் முறையைப் பின்பற்றினால் அம்மொழியில் எத்தனை எழுத்துக்களுள்ளனவோ அவ்வளவு சாவிகள் தான் இருக்கும். இது மிகவும் குறைவு.

எனவே, மேற்கண்ட முறையை மேலும் சிக்கலாக்கினார்கள். செய்தியை ஐந்து, ஐந்து எழுத்துக் கூறாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு கூறும் முழுச் சொல்லாக இல்லாமல் சொற் சிதைவாக அமைய வாய்ப்பிருக்கிறதென்று நீங்கள் கவனிக்கலாம். இப்போது ஒரு ஐந்திலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வெண்ணின் ஒவ்வோர் இலக்கத்தையும் அந்த சொற்கூறின் ஒவ்வோர் எழுத்துக்கும் நேர்கீழாகப் பொருத்துங்கள்.

சீசர்முறையில் எல்லா எழுத்துகளையும் ஒரே அளவு தள்ளி மாற்றினோமல்லவா?

இம்முறையில் ஒவ்வோர் எழுத்தையும் அகரவரிசையில் அதன் கீழுள்ள எண் அளவிற்குத் தள்ளி உள்ள எழுத்தாக மாற்றி எழுதுங்கள். எனவே நாம் பெறுவது:

'அ'விலிருந்து 9வது எழுத்து: ஒ

'மை'யிலிருந்து 4வது எழுத்து: ம்

'ய'விலிருந்து 0வது எழுத்து: ய

'வா'விலிருந்து 2வது எழுத்து: வீ

'ய்'யிலிருந்து 5வது எழுத்து: ரு (யகரவரிசைக்குப் பின் ரகர வரிசை)

எனவே இந்த 'அமையவாய்' என்ற சொற்கூறு 'ஓம்யவீரு' என்று சங்கேதமாகும்.

இப்போது இப்புதிய முறையில் 5 இலக்க எண்கள் எல்லாம் சாவிகளாகும்! தேர்ந்தெடுத்த சாவியைப் பொறுத்து ஒரே சொல்லே இம்முறைப்படி ஒரு லட்சம் வேறு சொல்லாகப் பரிணமிக்கும்.

எனவே எந்த முறையைக் கையாள்கிறோ மென்று எதிரிக்குத் தெரிந்தாலும் எந்தச் சாவியைக் கையாள்கிறோமென்று தெரியாததால் நமது ரகசியத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கிறது. இந்த 'ஓம்யவீரு' என்ற சொல்லைப் பெற்ற பெறுநர் '94025' என்ற சாவியைக் கொண்டு எழுத்துகளை அந்தந்த எண்ணளவுக்குப் பின்னோக்கி மாற்றிக் கொண்டு மூலச் செய்தியைப் பெறலாம். இரகசியச் சாவியை அறியாதவர் '28177' அல்லது '47003' என்று பல எண்களைக் குழப்பினால், விடையைக் கொஞ்சத்தில் அறிந்து கொள்ள முடியாது.

ஆனால் இந்த முறைகளிலெல்லாம் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. நம்முடைய செய்தியைப் பெறுபவருக்கு நாம் இந்த '94025' என்ற ஐந்திலக்க எண்ணைச் சாவியாகப் பயன் படுத்துகிறோமென்று எப்படித் தெரிவிப்பது? இதை முன்கூட்டியே பேசிவைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் (இரகசியமாகத்தான்).

இரட்டைப் பூட்டு முறை

முன்கூட்டித் தீர்மானித்துக் கொள்ளாமல் இருவர் இரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள சில வழிகள் வகுக்கப்பட்டன. அல்லி, பாபுவுக்கு ஒரு ரகசியச் செய்தி அனுப்ப விழைகிறாள். அல்லி செய்ய வேண்டியது: இரண்டு தனித்தனித் தாழ்ப்பாள்கள் கொண்ட ஓர் உடைக்க முடியாத இரும்புப் பெட்டியில் போட்டு வெளிப்புறம் ஒரு தாழை மூடி அதில் உடைக்க முடியாத (சிவப்புநிறப்) பூட்டை மாட்டிப் பூட்டிவிட்டு பாபுவின் முகவரியையெழுதி அனுப்பிவிடட்டும். பாபுவிடம் சிவப்புப்பூட்டின் சாவி இல்லையா? கவலை வேண்டாம்.

அவர் பெட்டியின் இன்னொரு தாழை மூடித் தன்னுடைய சொந்தப் பூட்டான பச்சை நிறப்பூட்டை மாட்டிப் பூட்டிவிட்டு அல்லிக்கு இரண்டு பூட்டுகளுடன் திருப்பியனுப்பட்டும். இப்போது அல்லி தன்னுடைய சாவியால் சிவப்பு பூட்டைத் திறந்து மீண்டுமொருமுறை பாபுவுக்குப் பெட்டியை அனுப்புவார்.

இப்போது பச்சைப்பூட்டுடன் பாபுவுக்கே பெட்டி வருகிறது. பச்சைப்பூட்டு பாபுவுடையதுதானே? அவர் தன்னுடைய சாவியால் திறந்து கடிதத்தைப் படித்துக் கொள்ளலாம்!

அதுபோல அமுக்குப் பூட்டு முறையும் வசதியானது. அமுக்குப் பூட்டை யாராலும் அமுக்கிச் சாவியின்றிப் பூட்டிவிடமுடியும். அதைச் சாவியுள்ளவர் ஒருவரால் மட்டுமே திறக்க முடியும். எனவே உங்களுக்கு உலகோர் ரகசியமாகக் கடிதமனுப்ப வேண்டுமானல் நீங்கள் ஒரு அமுக்குப் பூட்டைப் பல பிரதிகளெடுத்து சுய விலாசமிட்ட பெட்டியில், பூட்டாமல் ஊரெங்கும் கடை பரப்பி வைத்து விடுங்கள். யாருக்கு விருப்பமோ அவர்கள் தங்கள் கடிதத்தை யெழுதி அமுக்கிப் பூட்டிவிட்டு உங்களுக்கு இரகசியமாக அனுப்பலாம்.

இணையத்தில் இவ்வாறுதான் முன்பின் அறியாதவர்களேல்லாம் ஒரு இணைய தளத்துடன் ரகசியமாகத் தங்களுடைய சொந்த விவரங்களை அனுப்ப முடிகிறது. இதைப் பகிரங்க சங்கேதமுறை என்கிறார்கள் (Public Key Cryptography).

பகிரங்கச் சங்கேதமாக்குமுறை கண்டுபிடிக்கப்பட்டதுதான் இருபதாம் நூற்றாண்டின் சங்கேதவியலில் ஏற்பட்ட பெரும்புரட்சியாகும். Rivest-Shamir-Adleman என்ற மூவரால் வடிவமைக்கப்பட்ட அந்த சங்கேதமுறை ஒரு பெரிய எண்ணைப் பகாஎண்களின் பெருக்கற்பலனாகப் பிரித்தெழுதுவது கிட்டத்தட்ட இயலாத சிக்கல் (factorization is a computationally infeasible task) என்பதன் அடிப்படையில் எழுந்ததாகும். இந்தமாதிரி ஆட்கள் நிறைய உயர்கணிதத்தைப் புகுத்திச் சங்கேதவியலை மாற்றியதால் சொல்லைவைத்து விளையாடியவர்கள், புதிர் வல்லுநர்கள் இவர்களுக்கெல்லாம் இத்துறையில் வேலையில்லாமல் போய்விட்டது.

சங்கேதமுறைகள் பற்றி, சுவாரசியமான ஆங்கில நூல்: சைமன் சிங் எழுதிய Code Book.

வாஞ்சிநாதன்

© TamilOnline.com