இசைக் கலைஞர் எம்.பி. சீனிவாசன்
பல்வேறு இசைக்கலைஞர்களின் ஆளுமை வெளிப்பாடு புதிய வகையிலான இசை அனுபவ வெளிக்குள் நம்மைக் கடத்திச் செல்கிறது. இதற்குள் அமிழ்ந்து போகாத நிலை, ஒருவித பிரக்ஞை பூர்வமான கனவு என்ற நிலை இசையில் சித்திக்கும் பொழுது உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் நம் நினைவுக்கு வருவார்கள். அவர்களுள் ஒருவர்தான் எம்.பி. சீனிவாசன் (1925-1988). சமூக விழிப்புணர்வுக்கும் மறுமலர்ச்சிக்கு மான பாதையை வடிவமைத்து இசைப் பெருவெளியில் ஒலிக்கோலங்கள் அமைத்துச் சென்ற தனித்துவமிக்க கலைஞன் இசைமேதை எம்.பி. சீனிவாசன். இவர் 'சேர்ந்திசை' என்ற வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்து ஒரு சாதனையை நிகழ்த்திச் சென்றுள்ளார்.

1976ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை வானொலியில் முன்னூறு பேர்களைப் பயிற்றுவித்து சமுதாயப் பண்பாடச் செய்தார் எம்.பி.எஸ். இந்த முன்னூறு குரல்களின் கூட்டிசை பிசிறின்றி, பேதமின்றி, ஒரே சமூகம் என்னும் உணர்வில் வானொலியில் எதிரொலித்தது. இது ஓர் வித்தியாசமான அனுபவத்தை வழங்கியது. ஆதிகால மனிதன் வேட்டையாடினான். நிலங்களில் பயிர் செய்தான். வெயில், மழை, பனியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இருப்பிடங்களை உருவாக் கினான். தனது வரம்புக்கு அப்பாற்பட்ட இயற்கைச் சக்திகளைத் தொழுதான். தன் இனத்தைப் பெருக்கி கொண்டான். இப்பணிகளைக் கூட்டம் கூட்டமாகவே செய்து முடித்தான். வளர்ந்தான். பரவினான். முன்னேறினான்.

அவனது தினசரி வாழ்க்கைப் பணி களிலிருந்து தோன்றியது அவனது இசை. அவனது பணிகள் யாவும் கூட்டாகவே நடைபெற்றதைப் போல ஆதிமனிதனின் இசையும் கூட்டுப் படைப்பாகவே ஒலித்தது.

இவ்வாறு எம்.பி. சீனிவாசன் ஒரு கட்டுரையில் எழுதினார். அவரது நோக்கம் புரிதல் தெளிவானது. மனித சமுதாயத்தின் கூட்டு மனோபாவத்தின் தொழிற்பாடாகவே இசையின் பெருவெளியைப் புரிந்து கொண்டார். இதனாலேயே இவ்விசை சேர்ந்திசை அல்லது கோரஸ் என்று அழைக்கப்படும். ஆனால் நம்மிடையே இயல்பாக உள்ள இசைத்தலை, மீண்டும் மக்கள் மயப்படுத்தும் இயக்கமாகவே செயல்பட்டார். ஒத்திசைவான கூட்டுக் குரல்கள் மூலம் தேசப்பற்றுக்கும் சமூக விழிப்புணர்வுக்கும் வலுவூட்டினார். இசைவழியே சமூகப் பிரக்ஞை நோக்கிய நகர்வுக்குப் பாதை அமைத்தவர்.

இசை ஆர்வமிக்க குடும்பத்தில் பிறந்த எம்.பி. சீனிவாசனின் பூர்வீகம் மானாமதுரை. ஐயங்கார் பிராமணக் குடும்பம். வசதி மிக்க குடும்பம். சுதந்திரத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் களில் ஒருவராகச் சேவை செய்த எம்.ஆர். வெங்கட்ராமனின் சகோதரர் எம்.ஆர். பாலகிருஷ்ணன். இவரது மகன் எம்.பி. சீனிவாசன் மார்ச் 9, 1925இல் பிறந்தார்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்த நாட்களில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டார். மார்க்சியம் அவரை ஆட்கொண்டு அவரை வடிவமைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவில் பங்கேற்று அதன் பணிகளில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக் கொண்டார்.

அப்பொழுது அவர் டில்லியில் வாழ்ந்து வந்தார். அத்தருணம் அவருக்கு இந்திய மக்கள் அரங்க அமைப்புடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இவ்வியக்கத்தின் கலாசாரச் செயல்பாடுகளில் உத்வேகத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டார். அனைத்திந்திய இசை மரபுகளோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டார். இசையின் மாறுபட்ட நுணுக்கங்களை ஆழ்ந்து கற்றுக் கொண்டார். பல்வேறு இசைக் கலைஞர்களுடன் நெருங்கிப் பழகினார். அப்பொழுது சஹிதா என்ப வரைக் காதல் மணங்கொண்டார். ஜாலியன்வாலாபாக் நிகழ்வின் நாயகனும் சிறந்த தேசப்பற்றாளருமான டாக்டர். சைபுதீன் கிச்சுலுவின் மகள்தான் சஹிதா.

1959இல் எம்.பி.எஸ். தனது 34 வயதில் சென்னையில் இசையைத் தன் முழுநேரத் தொழிலாகக் கைக்கொண்டார்.

தோழர்கள் நிமாய்கோஷ், தாமோதரன் போன்றோரோடு இணைந்து 'குமரி பிலிம்ஸ்' என்ற நிறுவனம் உருவாகத் துணை நின்றார். அதன் முதல் படைப்பு 'பாதை தெரியுது பார்' என்ற நிமோய் கோஷின் இயக்கத்தில் உருவான படம். எம்.பி.எஸ். இதற்கு இசையமைப்பாளர். 1961ஆம் ஆண்டில் தமிழின் முதலாவது சமுதாய யதார்த்தவாதப் படமாக இது வெளிவந்தது. எம்.பியின் திரையிசை வாழ்வும் தொடங்கியது. ஜெயகாந்தன் எழுதிய 'தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே' என்ற பாடல் எம்.பி.எஸ்ஸின் இசையில் வசீகரமாக ஒலித்தது. அதுபோல் 'சின்னச் சின்ன மூக்குத்தியாம்' என்ற பாடலும் அதிகம் பேசப்பட்டது.

தமிழில் அந்த ஆண்டின் சிறந்த படம் என்னும் முறையில் 'பாதை தெரியுது பார்' குடியரசுத் தலைவரின் விருது பெற்றது. எம்.பி.எஸ்ஸின் மேதைமையை தமிழ்த் திரையுலகம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மலையாள சினிமா பயன்படுத்திக் கொண்டது. அடூர் கோபாலகிருஷ்ணனின் 'சுயம்வரம்' (1972) படத்திற்கு எம்.பி.எஸ். இயைமைத்தார். அப்படம் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தை வென்றதோடு உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்கு கொண்டு பாராட்டுக்களைக் குவித்தது.

மலையாள சினிமா உலகின் முக்கிமான கலைஞர்களாக இருந்த அடூர், அரவிந்தன், எம்.டி. வாசுதேவன் நாயர், பரதன், கே.ஜி. ஜார்ஜ் போன்ற கலைஞர்களோடு எம்.பி.எஸ். இணைந்து பணியாற்றினார். சிறந்த இசையமைப்பாளர் விருதைக் கேரள மாநில அரசு 4 முறை எம்.பி. சீனிவாசனுக்கு வழங்கி கெளரவித்தது. அவர் இசையமைத்த பல மலையாளப் படங்களில் பாடல்களே இல்லை. பின்னணி இசைச் சேர்ப்பு மட்டுமே இருந்தது. ஆனால் இதிலும் தனித்துவம் காட்டமுடியும் என்பதை நிரூபித்தார்.

'தாகம்' என்றொரு தமிழ்ப் படத்திற்கும் இசையமைப்பாளர் இவரே. அதில் இடம் பெற்ற 'வானம் நமது தந்தை! பூமி நமது அன்னை' என்னும் பாடல் நெஞ்சத்தை உலுக்கியது என்பர். ஜான் ஆபிரஹாமின் 'அக்ரஹாரத்தில் கழுதை' எனும் திரைப்படத்திற்கு இசையமைத்ததோடு அதன் மையக் கதாபாத்திரமான பேராசிரியராக நடித்தும் இருக்கிறார்.

பல்வேறு திரைப்படத் தொழிலாளர் சங்கங்களை நிமாய் கோஷ¤டன் இணைந்து உருவாக்கினார். இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கான இசை மற்றும் பாடல் உரிமையை நிலைநிறுத்தச் சங்கமொன்றைத் தோற்றுவித்துச் செயல்பட்டார். ஆக இசையின் சுரங்களோடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல் மனித உரிமைகளுக்காகச் சிந்தித்துச் செயல்படக் கூடியவராக அவர் விளங்கியது குறிப்பிடத் தக்கது. இது இவரது தனித்தன்மை மிக்க அடையாளங்களுள் ஒன்று.

1970இல் சென்னை இளைஞர் இசைக்குழுவை தோற்றுவித்ததிலிருந்து இவருடைய இசை வாழ்வில் வேறுபட்ட பரிமாணம் வெளிப்பட்டது. சேர்ந்திசை என்ற நம் ஆதி இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தார்.

சுதந்திரம், மனித விடுதலை சமூக மாற்றம், உலக அமைதி, தேசிய ஒருமைப்பாடு, சமத்துவம் உள்ளிட்ட பொருட்பரப்பு சார்ந்து அமைந்த பாடல்களுக்குச் சேர்ந்திசை மூலம் புதிய இசைக்கோலம் நாடெங்கும் பரவி எழுச்சியூட்டக் காரணமாக இருந்தார். இசைத்தலில் பன்முகத் தன்மையுடன் கூடிய ஜனநாயகமும் கலாச்சாரமும் ஊடுபாவு கொண்ட புரட்சிகர மாற்றத்துக்குத் தடம் அமைத்தார். இதுவே அவரது மேதை மைக்கான அடையாளமாயிற்று.

"மனித இயக்கங்களைப் பிணைப்பதாகவும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதாகவும், பொதுவான லட்சியத்துக்கென்று பொதுவான விழிப்புணர்வோடு மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதாகவும் சேர்ந்திசை மகத்தான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.''

"கூட்டுச்சேர்ந்து பாடும் முறைக்கு வானொலியின் மூலமாகப் புத்துயிர் கிடைத்தது. டெல்லி, கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நான்கு நகரங்களிலும் வானொலியின் choral group என்ற குழுக்களைத் துவக்கி, அதன் மூலம் ஒருமைப்பாட்டுணர்வையும் சமுதாய விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு முடிவெடுத்தது. சென்னையில் தொடங்கப் பட்ட பாடற்குழுவுக்குப் பொறுப்பேற்கும்படி எனக்கு அழைப்பு வந்தது."

இவ்வாறு சேர்ந்திசை மரபுக்கு எத்தகைய ஆதரவுத்தளம் பெருகி வந்ததையும் எம்.பி.சீனிவாசன் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அகில இந்திய வானொலியில் அவருடைய சேர்ந்திசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம் பெற்றன. வானொலிக்குப் பிரத்தியேக சேர்ந்திசைக் குழுவை உருவாக்கிக் கொடுத்தார்.

இந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய இக்பால், தாகூர், பாரதி, வள்ளத்தோல் போன்ற மகாகவிகளின் பாடல்களை கூட்டுக் குரல்கள் மூலம் - சேர்ந்திசை மூலம் மக்களிடையே கொண்டு சேர்த்தார்.

''கூட்டுச் சேர்ந்து பாடும்போது, அத்துடன் சேர்ந்து கட்டுப்பாட்டுணர்வு தோன்றுகிறது. தனியனாக ஒரு கலைஞன் பாடும்போது நிறுத்திப் பாடலாம். மெட்டைத் திருத்திப் பாடலாம். ஆனால் குழுவினராகப் பாடும்போது கட்டுப்பாட்டுடன் ஒரே முறையில் சேர்ந்து பாட வேண்டியதன் அவசியம் பயிற்சியின் போதே ஏற்பட்டு விடுகிறது.''

''அடுத்து கூட்டு முயற்சியின் வெற்றியில் ஏற்படும் மகிழ்ச்சி. ஒரு தனிக் கலைஞன் வெற்றியடையும் போது அவனது திறமை பாராட்டப்படுகின்றது. ஆனால் ஒரு பாடற்குழுவின் நிகழ்ச்சி வெற்றியடைய வேண்டுமென்றால் ஒவ்வொரு தனிக் கலைஞனும் தனக்களிக்கப்பட்டிருக்கும் பொறுப்பை உரிய நேரத்தில் சரியான முறையில் நிறைவேற்றியாக வேண்டும். ஒவ்வொரு கலைஞனும் தனது இசைப் பணியைச் செவ்வனே ஆற்றி, அதன் மூலம் குழுவின் முயற்சிக்குப் பொதுவான வெற்றி கிடைக்கும் போது, அந்த வெற்றியில் தோன்றும் மகிழ்ச்சியை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர, விவரிக்க முடியாது'' என்பார் எம்.பி.எஸ். அவர் குறிப்பிடுவதில் உள்ள சேர்ந்திசைப் பண்புகள் மனித சமூகத்தில் கலாச்சாரப் புரட்சி ஏற்படுவதற் கான தடயங்களைக் கொண்டிருப்பதை நோக்கலாம்.

லட்சத்தீவில் சேர்ந்திசைப் பட்டறை ஒன்றை மத்திய அரசின் சார்பாக மேற்கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு 1988 மார்ச் 9ம் தேதி மரணமடைந்தார்.

ஆனால் சேர்ந்திசை மூலம் அவர் ஏற்படுத்திய 'இசைப்புரட்சி' மனித மனங்களை அதன் தளைகளில் இருந்து விடுவித்து மனிதநேயத்தை இசையால் பிணைக்கும் மாபெரும் பணியைக் கொண்டது. அவரது வாழ்வும் சிந்தனையும் செயலும் இசைப் பெருவெளியில் புதியதோர் உலகம் படைக்க முற்பட்டது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com