திருவெ·கா - ஓரிருக்கை
காஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன் அவ்வூரைவிட்டு வெளியே தங்கிவிட்டு மறுநாள் மீண்டும் திரு வெ·காவிற்கே திரும்பி வந்த செய்தி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? வாருங்கள், மிகவும் சுவையான இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

திருமழிசையில் பார்கவ முனிவருக்கு மகனாகப் பிறந்தவர் சிவவாக்கியர். இவ்வூரில் பலகாலம் தங்கித் தவம் செய்து கொண்டிருந்தார். பல்வேறு மதங்களின் உண்மைகளையும் ஆராய்ந்து அதில் தெளிவு பெறாமல் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் மயிலாபுரியில் தோன்றியவரும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமான பேயாழ்வாருடன் சமய வாதம் நிகழ்த்த நேர்ந்தது. இந்த வாதத்தில் பேயாழ்வார் வென்றார். சிவவாக்கியர் பேயாழ்வாரையே தமது குருவாக ஏற்றுக்கொண்டு வைணவரானார். திருமழிசைபிரான் என்று அழைக்கப்பட்டவர் அன்று முதல் திருமழிசை ஆழ்வார் ஆனார். இவரது பக்தி சிவபெருமானால் பாராட்டப்பெற்று 'பக்திசாரர்' என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது.

காஞ்சீபுரத்தை அடுத்துள்ள திருவெ·காவிலுள்ள புஜங்கசயனப் பெருமாளைச் சென்று வழிபடுமாறு ஆழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றிக் கட்டளையிட, அவரும் அவ்வாறே திருவெ·கா சென்று பெருமாளைத் தரிசித்து அவ்வூரிலேயே தங்கி விட்டார்.

திருவெ·கா மகிமை

இந்த ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவையான புராணக்கதை உண்டு. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் பிரமன் யாகம் ஒன்று நடத்த முற்பட்டதால் சினமடைந்த நாமகள் வேகவதி ஆறாகப் பிரவாகம் எடுத்து வந்து யாகத்தைக் கலைக்க முற்பட்டாள். இதுகண்டு செய்வதறியாத பிரமன் திருமாலை உதவிக்கழைக்க, திருமாலும் ஆற்றின் குறுக்கே அணை கட்டினாற்போல் படுத்துவிட்டார். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டு நாமகள் வெ·கிப் பின்னடைந்தாள்.

அன்றுமுதல் இவ்விடம் திருவெ·கா என்று அழைக்கப்படலாயிற்று.

திருமழிசை ஆழ்வார் பெருமைகளைக் கேள்வியுற்ற கணிகண்ணன் என்பவர் அவரது சீடரானார். திருமழிசை ஆழ்வார் தமது குடிலை அலகிட்டு மெழுகும் மூதாட்டியின் தளர்ந்த மெலிந்த உடல் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு இறைவனிடம் பிரார்த்தித்து அம்மூதாட்டியை திடகாத்திரமான ஒரு இளம் பெண்ணாகச் செய்தார். இது பற்றிக் கேள்வியுற்ற காஞ்சி மன்னன் பல்லவராயன் தன்னுடைய முதுமைக்கு வெட்கி இளமை பொங்கும் தன் மனைவிக்குப் பொருத்தமாகத் தன்னையும் யௌவன புருஷனாக்கி விடுமாறு ஆழ்வாரிடம் விண்ணப்பித்தான்.

அவர் அதை மறுத்துவிடவே, அவரது சீடன் கணிகண்ணனிடம் தன் வேண்டுகோளைக் கூற, குரு மறுத்த ஒரு காரியத்தைத் தானும் செய்ய முடியாது என்று மறுத்து விடுகின்றான். இதனால் வெகுண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த உத்தரவிட்டான். செய்தி அறிந்த ஆழ்வார் மாணாக்கனை விரட்டிய ஊரில் தானும் இருக்கப்போவதில்லை என்று கூறி, இறைவனிடம் சென்று "நானும் என் மாணாக்கனும் இல்லாத ஊரில் நீயும் இருக்கலாகாது எனவே நீயும் உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள்" என்று ஆணையிட்டார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டாம் - துணிவுடைய
செந்நாப் புலவன் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

என்றவுடன் பெருமாளும் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு ஆழ்வாரைப் பின் தொடர்ந்து செல்ல, மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் காணப்படவில்லை. பெருமாளின் ஆணைப்படி காஞ்சிப்பதி இருள் சூழ்ந்துவிட, செய்தி அறிந்த மன்னன் நடுங்கிப் போய்விடுகின்றான்.

ஆழ்வாரைத் தேடிச்சென்று தன் தவறை மன்னித்து நாடு திரும்புமாறு இறைஞ்சுகின்றான். ஆழ்வாரும் அவன் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இறைவனுக்குத் தான் இட்ட ஆணையை மாற்றி முன்போலவே கோயிலில் எழுந்தருளு மாறு ஆணை பிறப்பிக்கின்றார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்

என்றவுடன் பக்திசாரரின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் மீண்டும் திருவெ·காவில் அறிதுயில் கொள்கின்றான். இவ்வாறு தன் அடியவர் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்ட காரணத்தாலேயே 'யதோக்தகாரி' அதாவது 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று அழைக்கப்படலானார். வேகவதி ஆற்றங்கரையிலிருந்து ஆழ்வாருடன் வெளியேறிய அந்த ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த இடம்தான் இன்று 'ஓரிருக்கை' என்றாகி பின்னர் அதுவும் மாறி ஓரிக்கை என்று வழங்கப்படுகிறது.

மூலவர் தோற்றத்தின் தனித்தன்மை

பொதுவாக எல்லா வைணவத் திருத்தலங்களிலும் அரவணைத்துயிலும் பெருமாள் இடப்புறம் தலையும் வலப்புறம் பாதமுமாக வலதுகையில் தலை சாய்த்து தெற்கு நோக்கி துயில் கொண்டிருக்கும் காட்சியைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், வலதுபுறம் தலையும் இடதுபுறம் பாதமுமாக இடது கையில் தலை சாய்த்து புஜங்கசயனனாக மேற்கு நோக்கி சயனித்திருக்கும் புதுமையைத் திருவெ·காவில் மட்டுமே காணமுடியும். இங்கு மூலவர் சந்நிதியிலேயே தாயாரும் கோமளவல்லி என்னும் திருநாமத்துடன் வீற்றிருக்கக் காணலாம்.

ஆழ்வாருடன் பெருமாள் ஓரிரவு சென்று தங்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக, தைமாத மகநட்சத்திர நாளை ஓரிருக்கை என்னுமிடத்தில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். திருவெ·கா வின் வடக்கில் உள்ள பொற்றாமரைப் பொய்கையில் ஐப்பசி மாதத் திருவோண நாளில் அவதரித்த பொய்கை ஆழ்வார் நினைவாக அவதார உற்சவம் நடைபெறுகிறது. மற்றும் வைகுண்ட ஏகாதசியும் பங்குனிமாத பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பன்னிரு ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகிய ஐவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமை பெற்றது இத்திருத்தலம். எல்லாவற்றிற்கும் மேலாக, தனிச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு செய்தி 108 வைணவத் திருத்தலங்களிலேயே ஆய்த எழுத்தைத் தன் பெயரிலே கொண்ட ஒரே ஒரு தலம் திருவெ·கா. கால் மாறி ஆடிய சிவபெருமான் போல, இடவலம் மாறி சயனிக்கும் பெருமாளைத் திருவெ·காவில் தரிசிக்கலாம்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com