வாழைக்காய் புளிக்கூட்டு
தேவையான பொருட்கள்

வாழைக்காய் தோல்
சீவி துண்டங்களாக - 2 கிண்ணம்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கிண்ணம்
கடலைப் பருப்பு - 3 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் (புதியது) - 1/4 கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
புளி (இன்ஸ்டண்ட்) - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிப்பதற்கு கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடலைப் பருப்பு, கொத்துமல்லி விதை, சிவப்பு மிளகாய் போட்டு வறுத்து, தேங்காய்த் துருவலையும் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இது ஆறியபின் மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் விட்டு நன்றாகச் சற்று நீர்க்க அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, அதில் மஞ்சள் பொடி, புளி (இன்ஸ்டண்ட்), உப்பு ஆகியவை போட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும் வாழைக்காய்த் துண்டங்களைப் போட்டு வேகவிடவும். காய் குழைந்து விடக்கூடாது.

வெந்த வாழைக்காயில் அரைத்த தேங்காய்க் கலவையைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். பின்னர், வெந்த பருப்பை நன்றாக மசித்து இதனுடன் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்க விடவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

பின் அடுப்பிலிருந்து இறக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

பின்குறிப்பு:

விளையாத வாழைக்காயை (பிஞ்சு அல்லது கச்சல் என்று சொல்வார்கள்) உபயோகித்து இந்தக் கூட்டைச் செய்யலாம் சிறிது துவர்ப்பாக இருக்கும். ஆனால் இது வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. அப்போது புளி, காரம், எண்ணெய் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com