வாழையோ வாழை!
சென்ற இதழில் வாழைத்தண்டில் செய்யும் சிலவற்றைப் பார்த்தோம். இந்த இதழில் வாழைக்காயில் என்னென்ன சமைக்கலாம் என்று பார்ப்போமா?

வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
மிளகு அல்லது மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை

வாழைக்காயைத் தோல் சீவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வறுவல் கட்டையை நேராக எண்ணெயின் மேலே 1/2 அடி உயரத்தில் வைத்துக் கொண்டு வாழைக்காயை வில்லைகளாகச் சீவி விடவும். இதை மிகவும் கவனமாகச் செய்யவும். இல்லை என்றால் கையில் எண்ணெய் தெறித்துவிடும்.

சுலபமான வழி என்னவென்றால் cusinart போன்ற ஸ்லைஸிங் மெஷினில் சீவிய பின்னர் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுப்பதுதான். எண்ணெய் வடிந்தபின் வேறு பாத்திரத்தில் மாற்றி மிளகு அல்லது மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com