பால் பாண்டியன் - கரிசலில் முளைத்த கணினித் தொழில் முனைவர்
இவர் பெயரை முதலில் கேட்ட போதே நினைத்தேன் - இது தென் பாண்டிச் சீமையில் விளைந்த கரிசல் காட்டுக் கருவேலமாகத்தான் இருக்க வேண்டுமென்று.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருநாள் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொதுப்பணிக் குழுக் கூட்டமொன்றில் இவரை நேரில் கண்டு உரையாடுகையில் அவருடைய தமிழார்வமும், நெல்லை மண்ணுக்கேயுரிய நக்கல் கலந்த நகைச்சுவையும் என்னைக் கவரத் தவறவில்லை.

பின்னர் தொழில் துறையில் அவரது சாதனைகளை அறிந்தேன்... எங்கோ வானம் பார்த்த பூமியில் விழுந்த இந்த விதை இத்தனை வீரியமான விருட்சமாகி நேர்மையும் தளரா உழைப்பும் உள்ளவரை வானத்திலும் கிளை பரப்ப இயலும் எனக் காட்டிய பால் பாண்டியனின் திறன் கண்டு இன்னமும் வியந்து நிற்கிறேன்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் ஒரு ஆசிரியக் குடும்பத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து பாளையங் கோட்டை, மற்றும் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகம் என்று பயின்று பின்னர் இங்கு வந்து சிரக்யூஸில் பட்டம் பெற்று...

நம்மில் பலருக்கு இது 'அடடே... நாம் நடந்து வந்த ஒற்றையடிப் பாதை போல் தெரிகிறதே' என்றுகூட எண்ணத் தோன்றலாம்.

தொடர்ந்து ஐவி லீக் பள்ளியான யூ பென் - வோர்ட்டனில் வணிகத் துறையில் பட்டம் பெற்றது ராக்வெல் போன்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றியது...

இவையெல்லாம் சாதனையென்றாலும் கூட....

ஆக்ஸஸ் டெக்னாலஜிஸை (Axes Technologies) தொண்ணூறுகளில் தொடங்கி இன்று எழுநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் ஒரு சிறந்த பன்னாட்டு நிறுவனமாய் வளர்த்திருக்கிறாரே... அது தமிழர் அனைவரும் எண்ணிப் பூரிக்க வேண்டிய சாதனை.

டல்லஸ், சென்னை, பெங்களூர், சிங்கப்பூர், பெய்ஜிங் என்று ஓய்வேதுமின்றி ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியனை ஒரு மணி நேரத்துக்கு உட்கார வைத்து இந்த நேர் காணலை முடிப்பதற்குள் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது: "தயவுசெய்து இந்த நேர்காணல் எந்தக் காரணத்தாலும் சுய விளம்பரமாகிவிடக் கூடாது. இது நாலு பேருக்கு ஊக்கம் தருமானால், அதனால் பெரிதும் மகிழ்வடைவேன்". அதனால் நான் அறிந்திட்ட பாண்டியன் பணிகளை 'அடக்கியே வாசிக்கிறேன்'.

கே : உங்கள் ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

ப : ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ்பற்றிச் சொல்லுவதற்கு முன், கணினித் துறையின் மானாவாரியான வளர்ச்சியையும் பொதுவாக அதன் தாக்கத்தையும் குறிப்பாக தொலைபேசித் துறையில் கணினியின் வீச்சினையும் பற்றி ஓரிரு வார்த்தை சொல்லியே ஆக வேண்டும். உங்களுக்குத் தெரியாதது அல்ல - கணினி 'அங்கிங் கெனாதபடி' இன்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. என்றாலும் தொலைபேசித் துறையில் கால் பதித்து, கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன்.

கணினி இன்று கண்ணை மூடிக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. 'வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கவனமாகச் சொல்லுகிறேன். ஏனெனில், அதன் வளர்ச்சி, தவழும் பருவம் தாண்டி இன்று விடலைப் பருவம் கூட நெருங்கவில்லை என்றதோர் நிலை. ஆனால் அதற்குள்ளாகவே இந்த வளர்ச்சியின் பயன்கள் பிரமிக்க வைக்கின்றன. இன்று தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்துக்குப் போய்ப் பாருங்கள். கையில் செல் ·போன் இல்லாத ஒரு மாணவனையோ மாணவி யையோ பார்க்க முடிவதில்லை.

கே : இதைப் பயன் என்று சொல்வதா, இல்லை மேலை நாட்டு நாகரீகத்தின் பாதிப்பு என்பதா?

ப : மேலைநாட்டு நாகரீகத்தின் பாதிப்பு என்பதை விட விஞ்ஞானத்தின் விளைவு என்பது இன்னும் பொருத்தமாகும். உதாரணமாய் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். மேலப்பாளையம் மைதீன் பாட்சா நாகர்கோயிலுக்குப் பஸ்ஸில் போகும்போதே, சென்னை குரோம்பேட்டையில் தோல் பதனிடும் திருமலையாண்டியையும், மும்பையில் சூட்கேஸ் வியாபாரி ரமேஷ் ஷாவையும் 'கான்·பெரன்ஸ் காலில்' கொண்டு வந்து ஐந்து லட்சம் வியாபாரத்தை அரை மணியில் முடித்துக் கொள்கிறார். இதே பாட்சா பத்து வருடத்துக்கு முன் பத்தாயிரம் ரூபாய் வியாபாரம் செய்யக் குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும். என்றாவது இது இயலும் என்று எண்ணியிருப்போமா? மற்ற எல்லா நாடுகளையும் விட்டு விட்டாலும் கூட இன்று இந்தியாவிலும் சைனாவிலும் தொலைபேசி ஓர் ஆடம்பரப் பொருளாக இருந்த நிலைமாறி உண்ணுவது உடுப்பது போல அத்தியாவசியமாகி விட்டது.

கே : டாட் காம் குமிழி போல் இது வளரும் முன்னே வெடித்து விட வாய்ப்பில்லையா?

ப : இல்லை, என்னுடைய கருத்தில் தொலைபேசியின் வளர்ச்சி இன்னும் கூடிக் கொண்டே இரூக்குமென்பதுதான். இதற்குக் காரணம், குறிப்பாக மக்கள் தொகை பெரிதுமுள்ள நாடுகளில் நடுத்தர மக்களின் பிரம்மாண்ட வளர்ச்சியும் அதன் தேவைகளும் யாராலும் தடுக்க முடியாத அளவு மடைதிறந்த வெள்ளம்போல் விரிந்து கொண்டிருகின்றன. இது ஒரு புறமிருக்க, இந்த வளர்ச்சிக்குத் தேவையான கல்வி நுட்பமும், தொழில் திறனும் இந்த நாடுகளில், குறிப்பாக பாரதத்தில், வளமாகவே இருக்கிறது.

இந்த வழங்கலுக்கும்-தேவைக்கும் (Supply and Demand) நடக்கும் போட்டிக்கு ஈடு கொடுப்பதில் ஆக்ஸஸ் டெக்னாலஜிஸின் பங்கு கணிசமானது.

கே : நுகர்வோருக்கு (consumer) என்னென்ன பொருட்கள்/பணிகள் வழங்குகிறீர்கள்?

ப : டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆக்ஸஸ் டெக்னாலஜி தொலைபேசித் தொழில் நுட்பத்துக்குரிய மென்பொருட்களை (software) உருவாக்குவது, தொலை பேசிகளைத் தயாரித்து அளிக்கும் முன்னணி நிறுவனங்கள் (manufacturers) மற்றும் தொலைபேசித் தொடர்பை வழங்கும் நிறுவனங்கள் (carriers) போன்றவற்றிற்குத் தேவையான வன்பொருட்களை (hardware) வனைவதற்குரிய சூத்திரங்கள் - என்று இதுபோலும் துறைகளில் உலக அளவில் முன்னணியில் நிற்கிறது.

ஆக்ஸஸ் டெக்னாலஜிஸில் பணிபுரியும் எழுநூறுக்கும் மேற்பட்டோரில் கிட்டத்தட்ட அறுநூறு பேர் மென்பொருள், வன்பொருள் வல்லுநர்கள். இவர்களில் பெருமளவில் பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலும் சிங்கப்பூரிலுமாக ஆக்ஸஸ் டெக்னாலஜிஸின் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகின்றனர்.

கே : ஆக்ஸஸ் டெக்னாலஜிஸின் சாதனை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

ப : தொண்ணூற்று எட்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு 'டல்லஸின் 100 நிறுவனங்களில்' ஒன்று என்ற தகுதி, தொலைபேசிகளைத் தயாரித்து அளிக்கும் முன்னணி நிறுவனங்கள், மற்றும் தொலைபேசித் தொடர்பை வழங்கும் நிறுவனங்களுக்கு எந்த வித விரயமும் ஆகிவிடாதிருக்கக் கருத்தொருமித்த பணி, ஐ-எஸ்-ஓ 9001 தகுதிப் பட்டயம் பெற்ற ஒரு நிறுவனம் என்பது, இவையாவினும் மேலாய்த் தரக் கட்டுப்பாட்டுக் கொள்கை யாக 'பிழையற்ற பொருள்களை மட்டுமே வழங்குவது' என்றதோர் தாரக மந்திரம் - இவைகள் ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ் பெருமைப்படத்தக்க சாதனைகள் என்று சொல்லலாம்.

மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் சமகாலத்துச் சாதனைகள் பலவற்றைப் படைத்துள்ள ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ் பவர் மாட்யூல்ஸ், மீடியா கேட்வே இது போலும் எத்தனையோ எதிர்காலத் துறைகளிலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது.

கே : ஆக்ஸஸ் டெக்னாலஜிஸோடு உங்கள் பணி முடிந்து விடவில்லையென்று அறிவேன், அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள், பாண்டியன்!

ப : இங்கு க்ளீவ்லேண்டில் உள்ள வெஞ்சர் லைட்டிங் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து மெட்டல் ஹேலைட் விளக்கு களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைச் சென்னையில் தொடங்கியுள் ளோம். ஆசியாவிலேயே இது போன்ற பொருள்களைத் தயாரிப்பதில் பெரியதொரு தொழிற்சாலை இதுவாகும். மேலும், தென் மாநிலங்களை ஒன்றாய் இணைத்து, பதப்படுத்தப் பட்ட உணவு வகைகளை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விவசாயத் தொழிற்சாலை ஒன்றை தமிழக அரசின் உதவியுடன் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். தொழில் முறையில் அமெரிக்க-இந்திய வர்த்தகக் குழுவில் இருக்கிறேன், TiE, மற்றும் Dallas Indo-American Chamber of Commerce போலும் அமைப்புகள் உருவாவதற்கும் உதவியிருக்கிறேன்.

பாண்டியனின் சாதனைகள் குறித்த வியப்பு இன்னும் பன்மடங்காய் விரிந்தது எப்போதென்றால், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாண்டியன் ஆற்றி வரும் தன்னலமற்ற பணிகளைப் பற்றித் தெரிந்து கொண்டபோதுதான்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை யின் தலைவராகப் பணியாற்றியுள்ள பாண்டியன், தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழ்நாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி இன்று அறக்கட்டளையை ஓர் உன்னத இடத்துக்கு உயர்த்தியுள்ளார். பாண்டியன் உதவியில் எத்தனையோ பள்ளிகளுக்கு 'கெம் கிட்' என்கிற நடமாடும் வேதியல் சோதனை அறைகள் (Mobile Chemkit) வழங்கப்பட்டுள்ளன.

கணிதம், வேதியியல் போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் கிராமப் பள்ளி மாணவர்கள் கணினியின் மூலமாகக் கற்றுக் கொள்ளுவதற்கான சிடி ராம் ஒன்றை, அறக்கட்டளையின் பணிகளுக்குப் பல ஆண்டுகளாகவே ஆணிவேராய் இருந்து அரும் பணியாற்றி வரும் முனைவர் அனந்த கிருஷ்ணனின் துணையுடன் உருவாக்கி வருகிறார். அறக்கட்டளையின் ஆயுள் உறுப்பினரான டாக்டர் விஸ்வநாதனின் உத்தியில் உதித்த இந்தத் திட்டத்தில் இயற்பியல் துறையின் முதல் அங்கம் முழுமை பெற்றுள்ளது என்று அறிகின்ற போது ஒரு கிராமத்து மாணவனைப் போலவே பூரிப்படைகிறோம்.

அறக்கட்டளையின் எதிர்காலத்தைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவருடைய பதில் பெரும் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. பாண்டியன் சொல்லுவது "கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனம் சோதனைகளுக்கு மத்தியிலும் நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்குக் காரணம் அதன் அப்பழுக்கற்ற நோக்கமே! என்றாலும் இன்னும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை அறுநூறைத் தாண்டவில்லை. நாம் அறக்கட்டளையின் பணிகளைத் தமிழர் களிடம், குறிப்பாக இளைய தலைமுறைக்கு, எடுத்துச் சொல்லத் தவறி விட்டோமோ?" நியாயமான கவலை. எப்படி அறக் கட்டளையை வலுப்படுத்தலாம் என்பதற் கான குறிப்பும் தருகிறார்.

பாண்டியனின் துணைவியார் திருமதி. கீதா ஒரு மருத்துவர் என்பதை யாராவது சொல்லித்தான் தெரிந்து கொள்கிறோம். அத்தனை எளிமை, பணிவு. இன்னொரு இன்ப அதிர்ச்சி பாண்டியன் தம்பதியினரின் மூத்த மகன் அருணின் சாதனை. இங்கே இந்தியப் பெற்றோரின் வாரிசாக இருந்தால் ஒரு மருத்துவராகவோ பொறியியலாளராகவோ இருக்கவேண்டும் என்ற 'மக்கள் வழி மான்மியத்தை' மாற்றி அருண் இசைத் துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். பொருளாதாரத் துறையில் வாங்கிய பட்டத்தைக் காற்றோடு பறக்க விட்டு விட்டு, 'ரிதம் & ப்ளூ' (R&B) இசையில் உலகப் புகழ் பெற்ற லோரன் ஹில் குழுவினருக்குத் தலைமை கிட்டார் வாசிப்பவராகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். பாண்டியன் தம்பதியினரின் மகள் அனிதா அடுத்த ஆண்டு கல்லூரியில் கால்வைக்கிறார்.

திரைத் துறையையும் மனிதர் விட்டு வைக்கவில்லை. சென்னையில் பல்லூடகம் (multimedia) மற்றும் ஒலிப்பதிவு அரங்கொன்றில் முதலீடு செய்திருக்கிறார். பாண்டியன் ஒரு முறை இப்படித்தான் முதல்வன் திரைப்படம் வெளிவந்திருந்த நேரம்... என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு "கோம்ஸ், இதைக் கேளுய்யா. வைரமுத்து எழுதியிருக்கிறாரு பாரு..." உப்புக் கருவாடு, ஊற வச்ச சோறு என்ற வரிகளைச் சொல்லி "அசத்திட்டாரய்யா!" என்று வியந்து போகிறார்.

கிறிஸ்துவரான இவர், வள்ளலாரின் அருட்ஜோதி மன்றத்திலும் அங்கத்தினர் என்ற வியப்பிலிருந்து விடுபடுவதற்குள் தொல்காப்பிய நூலொன்று வெளிவருவதற்குப் பாண்டியன் பெரும் பொருளுதவி செய்வதாக யாரோ என்னிடம் சொல்லிக் கேட்கையில்... என் வியப்பு விரிந்து கொண்டே போகிறது!

கோம்ஸ் கணபதி

© TamilOnline.com