தி.ஜ. ரங்கநாதன்
தமிழில் தோன்றிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் பல வண்ணங்களில் காட்சி தருபவர்கள். அவர்களுக்கான தகுதிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளடங்குபவை அல்ல. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இதில் பத்திரிகையாசிரியர் களாகவும், இலக்கியப் படைப்பாளி களாகவும், மொழி பெயர்ப்பாளர் களாகவும் இருந்தவர்களின் ஆளுமை தனித்து நோக்கத்தக்கவை. அந்தப் பரம்பரையில் வந்தவர்தான் தி.ஜ. ரங்கநாதன் (1901-1974).

திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு அருகே உள்ள திங்களூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனந்த போதினி, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தம் எழுத்துப் பணியைத் தொடங்கினார். 1920 முதல் எழுபதுகளில் தம் இறுதிக்காலம் வரை எழுதிக் கொண்டே இருந்தார்.

ஐந்து சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள், 20 மொழி பெயர்ப்பு நூல்கள், குழந்தை இலக்கியத் தொகுப்புகள் ஆகியவை தி.ஜ.ர.வின் படைப்புகள். இலக்கியம் அவருக்குப் பிடித்தமானாலும், பத்திரிகையாசிரியர் பணியே அவரது விரும்புறுதிப் பணியாக இருந்தது.

தி.ஜ.ர.விற்கு அவரது எழுத்துக்கள், குறிப்பாகக் கதைகள், பற்றிய தீர்மானமான கருத்து இருந்திருக்கிறது. "கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம், மற்றது, அமானுஷ்யக் கற்பனை. மேதைகள்தாம் அமானுஷ்யக் கற்பனைகளைச் சிருஷ்டிக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்களைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோக்கள் எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்த போட்டோக்களுக்கு மெருகு கொடுத்திருக்கும். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் போட்டோ படங்களில் கலைச் சுவையைக் காண முடியாது. போட்டோ படங்களிலும் ஒருவித கலைச்சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான்'' இவ்வாறு தி.ஜ.ர.வே கிண்டல் தொனியில்லாமல் சொல்லுவதால் அவர் அப்படித்தான் தன்னை உண்மையாகவே கருதினார் என் நாம் முடிவு செய்யலாம்.

தி.ஜ.ர.வின் படைப்புலகம் நடுத்தர வர்க்கம் சார்ந்தது. அதில் சீர்திருத்த மனோபாவம் நிறைந்தவர்களும் உண்டு. பழமையின் இருட்டில் பதுங்கியவர்களும் உண்டு. ஆனால் எல்லோரிடமும் தி.ஜ.ர. ஏற்றிய மெருகுண்டு. யதார்த்த வாழ்வின் பிரத்தியட்சமான பாத்திரங்களின் நேர்ச் சித்தரிப்பு. எந்தவிதப் பாசாங்கும் இன்றி வாழ்ந்த காலத்தின் சாயல்களை உணர்த்தும் பாங்கு மிக்கவை. எதிர்கால நம்பிக்கைக்காக கருத்துநிலைத் தீவிரத்துடன் கதைப் பாத்திரங்களைக் கற்பனையாகக் கூட நம்முன் படைக்க அவரது கலைமனம் அவரை அனுமதிக்கவில்லை.

தி.ஜ.ர. வாழ்ந்த அன்றைய கிராம மற்றும் நகர வாழ்வின் ஒரு நேர்மையான பதிவு அவரது எழுத்து. இதனால் அவரது படைப்புவெளி சார்ந்து அன்றைய தமிழகம் பற்றிய சிரத்தையான மாறுதல்களை கண்டு கொள்வதற்கான எழுத்தாகவும் அமைந்திருந்தது.

எழுத்தாளர் க.நா.சு. தி.ஜ.ர.பற்றி எழுதிய கட்டுரையில் இந்தக் கேள்வி முக்கியமானது. தி.ஜ.ர.வின் எண்ணக் கிடக்கையை ஓரளவு புரிந்து கொள்ளவும் இது உதவும். அதாவது ''மணிக்கொடிக்காரர்கள் என்னைச் சிறுகதையாசிரியனாகக் கூட ஏற்றுக் கொள்வதில்லை'' என்று தி.ஜ.ர. குறைப்பட்டார். அதற்கு க.நா.சு. "ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது?" என்று கேட்டார். "எனக்குத் தெரியவில்லை'' என்றார் தி.ஜ.ர. ''எனக்குத் தெரிகிற காரணத்தைச் சொல்லட்டுமா?'' என்றார் க.நா.சு.

''கு.ப.ரா, புதுமைப்பித்தன், சிதம்பர சுப்பிரமணியம் போன்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் சிறுகதை என்கிற இலக்கிய உருவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். உங்களுக்கு அதில் பூரணமாக நம்பிக்கையில்லை. சமயம் நேருகிற போது சிறுகதை¨யும் எழுதுகிறீர்கள். அவ்வளவுதான்'' என்று க.நா.சு. காரணம் கூற, ''அது உண்மையாகவே இருக்கலாம்'' என்று ஏற்றுக் கொண்டார் தி.ஜ.ர.

''எனக்கு 'உபயோகமான எழுத்து' என்பதிலும் essay என்கிற இலக்கிய உருவத்திலும் இருக்கிற நம்பிக்கை சிறுகதையில் வரவில்லை'' எனவும் தி.ஜ.ர. மேலும் குறிப்பிட்டார். ஆக இவர் தன் எழுத்துப் பற்றி எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருந்தார் என்பதற்கு இது நல்ல உதாரணம். இதுபோன்ற எண்ணிறந்த எழுத்தாளர்கள் தமிழில் எழுதியிருக்கிறார்கள். இலக்கிய வரலாற்றில் அவர்களுக்கான இடம் என்ன என்பது சிந்தனைக்குரியது.

கட்டுரை வடிவில் அவர் எழுதிய எழுத்துக்கள் அதில் வெளிப்பட்ட கருத்துக்கள், சிந்தனைகள், சமூகப் பொறுப்பு யாவும் அவருக்கான அக்கறைகளை அடையாளப்படுத்துபவை. அவர் தன் சமகாலச் வாழ்வை உண்மையுடன் தன் படைப்புக்கள் மூலம் வெளியிடுவதில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரல்ல என்பதையே அவரது எழுத்துக்கள் நிரூபிக்கின்றன.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com