இயற்கையின் சீற்றம் போல்...!
"உங்கள் அரசு தவறி விட்டது, உங்களைக் காக்கும் கடமையை ஏற்றவர்களும் தவறி விட்டார்கள், நானும் தவறி விட்டேன். எல்லோருமே வெகுவாக முயற்சி செய்தோம். என்ன பயன்? கடைசியில் தவறி விட்டோம். நான் வேண்டிக் கொள்வதெல்லாம், எல்லா உண்மைகளும் வெளிவந்த பின்னால், இந்தப் பிழைகளைப் பொறுத்தருளி எங்களை மன்னியுங்கள் என்பதுதான்" என்று தொடங்கினார் செப்டம்பர் 11 விசாரணைக் குழுவின் முன் சாட்சி சொல்ல வந்த பயங்கரவாதத் தடுப்புத்துறை முன்னாள் தலைவர் ரிச்சர்ட் கிளார்க்.

"பயங்கரவாதத் தாக்குதல்கள் இயற்கையின் சீற்றம் போல் தடுக்க முடியாதவை; அதனால், செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முழுப்பொறுப்பு பயங்கரவாதிகள் மட்டுமே" என்று சொல்லி வந்த அரசியல் வட்டாரம் ஒரு கணம் திகைத்து நின்றது. "யாரும் தவறு செய்யவில்லை, எல்லோரு மே உங்களைக் காப்பாற்றும் பொறுப்பை முறையாகத்தான் செய்து வந்திருக்கிறோம். இது போல சில எங்களையும் மீறி நடந்து விடலாம். அதற்கு யாரையும் பழிக்க முடியாது" என்பதுதான் அரசியல் பொறுப்புள்ளவர்களின் வாதம். அதில் ஓரளவு உண்மையிருந்தாலும், பயங்கர வாதத்துக்கு இரையானவர்களின் குடும்பங்கள் முன்னே நின்று, உங்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையில் தவறி விட்டோம், மன்னியுங்கள் என்று கேட்டது வாழ்நாள் முழுதும் அரசுக்கு உழைத்த ஓர் ஊழியர்தான். எந்த அரசியல்வாதிக்கும் அந்தத் துணிச்சல் வரவில்லை.

அரசு கட்டிலில் ஏறி அமர்ந்தவர்கள் பிழை செய்தால் அவர்களுக்கு அறமே எமனாகும், தவறான செயல்களால் அரசர் செங்கோல் வளைந்தால், அரசுப் பீடம் என்ன தம் உயிரைக் கொடுத்தாவது பிழைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பவை போன்ற நம்பிக்கைகளை நாம் சிலப்பதிகாரம் போன்ற பண்டைய இலக்கியங்களில் காண்பதோடு சரி. அண்மைக்காலத்தில் மகாத்மா காந்தி யைத் தவிர வேறு எவரிடம் இது போன்ற பண்பைப் பார்த்திருக்கிறோம்?

விசாரணைக் குழுக் கூட்டங்கள், திடுக்கிடும் சாட்சிகள், சாட்சிகள் மீது சேற்றை வாரி இறைக்கும் அரசியல் தலைமை, நடுநிலையில் இருந்து தவறி கட்சி சார்பில் கேள்விகள் கேட்கும் குழு உறுப்பினர்கள், சூடான செய்திகள், செய்திகளைத் திரிக்கும் கருத்துரை யாளர்கள் இவற்றையெல்லாம் முன்பு எப்போதோ பார்த்தது போலிருக்கிறது. அதிபர் நிக்சன், வாட்டர்கேட் விசாரணைக் குழு, "All the President's Men" படம் எல்லாம் நினைவுக்கு வருகிறது. "அதிபருக்கு என்ன தெரிந்தது? எப்போது தெரிந்தது" என்ற மிகச் சாதாரணமான கேள்வி கடைசியில் அதிபரைப் பதவிவிலக வழி வகுத்தது.

பயங்கரவாதிகளின் சதிக்கு அண்மையில் இரையானவர்கள் ஸ்பெயின் நாட்டின் மாட் ரிட் நகர மக்கள். தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் முன்னர் வெடித்த குண்டுக்குத் தாம் வேட்டையாடிவரும் உள்ளூர் பயங்கரவாதிகள்தாம் பொறுப்பு என்று புளுகிய ஆளுங்கட்சி தேர்தலில் தோற்றது. இது பயங்கரவாதிகளுக்குப் பணிந்தது போலாகும் என்று சிலர் கூறினாலும், பெருவாரி யான மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஈராக்கில் மூக்கில் நுழைத்ததால்தான் இந்தக் கொடூரம் தங்களைத் தாக்கியது என்று மக்கள் நினைத்தால் அதில் தவறென்ன? அல் கைடாவின் தாக்குதலை மறைக்க வேண்டிய அவசியம் ஆளுங்கட்சிக்கு ஏன்? ஸ்பெயின் மக்கள் தொடைநடுங்கிகள் என்று குற்றம் சாட்டுவோர், வந்த வம்பை விடமாட்டோம், வீண் வம்புக்குப் போக மாட்டோம் என்ற ஸ்பானியர் கருத்தையும் கவனிக்க வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பதினைந்து ஆண்டு களுக்குப் பின் பாகிஸ்தானில் நடந்து முடிந் திருக்கிறது. விடிய விடியக் கண் விழித்துப் பார்த்து இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் அதே சமயத்தில் பாகிஸ் தானியரின் விருந்தோம்பலையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு பக்கம் கைப் பெட்டிகளில் அணுக்குண்டு வியாபாரம் செய்யும் சதிகாரநாடு என்ற வெறுப்பு இருந்தாலும், சாதாரண மக்கள் வெறுப்பும் வெறியும் இல்லாமல், அன்போடு பழகுவதைப் பார்க்கும்போது, இந்த ஒற்றுமை என்றும் இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. விளையாட்டு வீரர்கள் என்று பார்க்கும்போது "ஆலு" இன்சமாம் உல்ஹக்கின் சாதனைகளுக்குத் தலைவணங்க வேண்டும். இது சாதாரணமான பாகிஸ்தான் குழுவல்ல. ஆனால், அப்படிப்பட்ட குழுவையும் அவர்கள் நாட்டிலேயே தோற்கடித்த இந்தியக் குழு வரலாற்று நாயகர்கள்தாம். இரண்டு நாட்டு மக்களுக்கும் நம் வாழ்த்துகள்.

இந்தியா அவுட்சோர்சிங் அலைக்கு எதிரடி காட்டமாகிக் கொண்டு வருகிறது. இல்லினாய் குடியரசுக்கட்சி செனேட் வேட்பாள ராகப் போட்டியிட்ட சிரஞ்சீவ் கதூரியா, இந்த எதிரடி இந்திய அமெரிக்கர்களைக் கடுமையாகத் தாக்கும் என்று அஞ்சுகிறார். இந்திய அமெரிக்கர்களின் பிரதிநிதியாக ஓர் இந்திய அமெரிக்கனைத் தவிர வேறு யாரால் இருக்க முடியும் என்று கேட்கும் அவர், இந்திய அமெரிக்கர்கள் தம்மைப் போன்ற வேட்பாளர்களுக்குப் பொருளுதவி அளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்திய அமெரிக்க அரசியல் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பாலமாக Indian American Center for Political Awareness, Indian American Political Action Committee போன்ற சில அமைப்புகள் செயல் படுகின்றன. இந்த ஆண்டுத் தேர்தல் மிக முக்கியமானது. இந்திய அமெரிக்கர்கள் எல்லாப் பக்கத்துச் செய்திகளையும் கேட்டறிந்து வாக்களிக்க வேண்டும். நல்ல வேட்பாளர்களுக்குப் பொருளுதவி அளிக்கவும் தயங்கக்கூடாது.

அமெரிக்க உறுதிமொழியில் கடவுளுக்கு என்ன வேலை என்று வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒரு நாத்திகர். "இறைவனடியில் இருக்கும் பிரிக்க முடியாத ஒரு நாடு" என்பதில் வரும் இறைவன், ஒரே கடவுளைத் தொழும் மதத்தினருக்கு மட்டுமே பொருந்தும், நாத்திகர்களுக்கும், பல கடவுளரைத் தொழும் இந்து, புத்த மதத்தினருக்கும் எதிரானது என்கிறார்கள். மதச் சார்பற்ற அரசுப் பள்ளிகளில் கடவுளையும் மதத்தையும் திணிப்பது சரியா என்பது இவர்கள் கேள்வி. நான் படித்த தமிழ் நாட்டு அரசுப் பள்ளியில் இறைவணக்கத்தின் போது தேவாரம் பாடுவார்கள். என்னுடன் படித்த வைணவ, கிறித்தவ, முஸ்லிம் நண்பர்களும் எங்களோடு சேர்ந்து "ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று பாடுவார்கள். பழுத்த நாத்திகர்களான சில ஆசிரியர்களும் தேவாரம் பாடுவதில் குறை கண்டதில்லை. ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் தங்கள் மேல் வேற்று மத எண்ணங்கள் திணிக்கப்படுகின்றன என்று குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். உச்சநீதிமன்றம் கடவுளுக்கு எதிரான தீர்ப்பளிக்குமா?

தென்றல் வாசகர்களுக்கு எங்கள் அன்பான தமிழ்ப் புத்தாண்டு, ஈஸ்டர் வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com