ஏப்ரல் 2004: வாசகர் கடிதம்
மார்ச் மாத இதழில் கண்ட காரடையான் நோன்பு, மரத்தடிக்கடவுள், ஏ.என். சிவராமன் பற்றிய குறிப்பு, எதையோ தேடும் மனம், நேனோடெக் நாடகம் இவைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. மாதாமாதம் பத்திரிகையின் தரம் உயர்ந்து போய்க் கொண்டிருக்கிறதைக் காண மட்டற்ற மகிழ்ச்சி.

அட்லாண்டா ராஜன்

*****


தென்றலின் விசுவாசமான வாசகியான நான், ஒவ்வொரு இதழையும் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை சேகரித்தும் வருகிறேன்.

ஒவ்வொரு இதழிலும் வரும் படைப்புகளை விரும்பி வாசிக்கும் நான் என்றும் அவைகளை உருவேற்றி எங்களுக்குத் தரும் உங்களின் கடும் விடாமுயற்சியை என்னால் பாராட்டாமல் இருக்கவே இயலாது. உதாரணத்திற்கு எவ்வளவோ பழம்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பைப்பற்றியும், நடையழகைப்பற்றியும், அவர்களின் படைப்புகளைச் சேர்த்துக் கட்டுரையாக எங்களுக்கு அறிமுகப்படுத்தும் தெ. மதுசூதனன், அன்பாக, அறிவோடு, அழகாக மனதைத் தட்டியெழுப்பும் அசோகன் அவர்களின் பக்கம் மற்றும் மு. மணி வண்ணன் அவர்களின் திறம் பற்றியும் குறிப்பிடாமல் போனால் நன்றி மறந்த வளாகிவிடுவேனே! குறிப்பிடாத பெயர்களைத் தென்றலின் தூண்களாய், பக்கபலமாய் நிற்கும் அத்தனை பேரையும் நான் வாழ்த்துகிறேன்.

சில அல்ல, பல நேரங்களில் மதிப்பாகக் குறிப்பிடும் விகடன், கல்கி போன்ற இதழ்களைவிடத் தென்றல் மேலும் மேலும் மனதில் பெருமையை வளர்க்கிறது. இதைக் குறிப்பிடாமல் வெற்று மடல் அனுப்ப என்னால் இயலவில்லை.

கீதா சுந்தர்

*****


தென்றல் பெப்ருவரி இதழில் மணி வண்ணன் எழுதிய சியாமளா ஹாரிஸ் நேர்காணல் பார்த்தேன். அபூர்வமான புத்திக்கூர்மை திகழும் பெண்மணி. எத்தனை சிந்தனைத் தெளிவும், நடுங்க வைக்கும் தைரியமும்! எப்போதாவது சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்.

பேரா. எமனோ பற்றிய குறிப்பும் நெஞ்சைத் தொட்டது.

அருண் மகிழ்நன்,
சிங்கப்பூர்

*****


நான் கலிபோர்னியா ·போஸ்டர் சிட்டியில் உள்ள என் மகனுடன் வசித்து வருகிறேன். தென்றல் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரப் பத்திரிகைகளை விடத் தரம் சிறப்பாக உள்ளது. தென்றலின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

சம்பந்தமூர்த்தி

*****


அரசியலில் பெருந்தலைவர் காமராசரைப் போல், ஆன்மீகத்தில் காஞ்சி மகாப் பெரியவர்களைப் போல், பத்திரிக்கைத் துறையில் 'பரிபூரணத்துவம்' பெற்ற 'தினமணி சிவராமன்' அவர்களைப் பற்றிய செய்தித் தொகுப்பு மிக அருமை!

அன்றாட உலகச் செய்திகள் மற்றும் தரமான அறிவியல், அரசியல், ஆன்மீகம், கல்வி மற்றும் சமுதாயக் கட்டுரைகளை, எளிய, சிறந்த சுவையான தமிழ்நடையில் வழங்கி வாசகர்களின் பொது அறிவை வளர்த்ததோடு, அவர்தம் வாழ்க்கை முறையில் எண்ணம், சொல், மற்றும் செயல்பாடுகளில் ஒழுக்கத்தையும் நாட்டுப் பற்றையும் வேரூன்றச் செய்த பெருமை தினமணிக்கும் அதன் 54 ஆண்டுகால ஆசிரியர் சிவராமன் அவர்களுக்கும் உண்டு.

அரசு விருதுகளைப் பெருந்தன்மையுடன் மறுத்த சிவராமன் அவர்கள் பன்முக மனிதர் மட்டுமல்ல பன்முக மேதையும்கூட.

அமெரிக்க மண்ணில் தினமணி சிவராமன் அவர்களைப் பெருமையுடன் நினைவுகூர வைத்த அலர்மேலு ரிஷி மற்றும் தென்றல் ஆசிரியர், வெளியீட்டாளர் குழுவினருக்கு எமது மனம் நிறைந்த பாராட்டுதல்கள்.

சென்னிமலை சி. சண்முகம்,
நியூ யார்க்

*****


தென்றல் வாசகர்களுக்கும், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தியா சென்று வந்ததால் பணம் தாமதமாக அனுப்புவதற்கு மன்னிக்கவும். தென்றல் வீசும் நறுமணம் இந்தியாவில் உள்ளவர்களுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. எல்லாப் புத்தகங்களும் பத்திரமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன். உங்கள் சேவைக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.

மைதிலி பார்த்தசாரதி

*****


தென்றலைப் படிக்க எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் நகைச்சுவைக் கதம்பம், 'வேளிருக்கை ஆளரி', டி.என். சேஷகோபாலன் நேர்காணல், 'எங்கே போகிறோம்' கவிதை ஆகிய அனைத்தையும் ரசித்தோம். எதைச் சொல்ல, எதை விட!

இவ்வாறு சிறந்த விஷயங்களைத் தொடர்ந்து தரவேண்டும்.

கீதா கண்ணன் மற்றும் கண்ணன்.

*****


தென்றல் மார்ச்சு இதழ் படித்தேன். அதன் எளிய நடை என்னைக் கவர்ந்தது.

அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் சாளரமாக இருப்பதுடன், தாய்மண்ணின் வேர்களை நினைவூட்டும் பணியையும் தென்றல் செய்கிறது. ஒரு பக்கம் கூட விடாமல் வாசித்தேன்.

உமா எழுதிய 'ஒரு விவாகரத்து' சரியான தருணத்தில் வந்திருக்கிறதோடு, கண்களைத் திறப்பதாகவும் உள்ளது. தமிழ்க் கலாச்சாரம் விவாகரத்தை ஏற்பதில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கத் தமிழரும் இவ்வாறு செய்வது வரவேற்கத் தக்கதில்லை. நமது இளைஞர்கள் விவாகரத்துக்கு முயலும் முன் நூறுமுறை யோசிக்க வேண்டும்.

தென்றலின் இலக்கியச் சுவையை நான் பாராட்டுகிறேன். இங்கிருக்கும் தமிழருக்கு இது ஒரு பெருவரம்.

பேரா. என்.பி. மாணிக்கம்,
சன்னிவேல்.

*****

© TamilOnline.com