நேனோடெக் நாடகம் - பாகம் - 2
முன் கதை: Silicon Valleyஇல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.

மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நேனோடெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரிய சாதனை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நேனோ தொழில்நுட்பம் ஒன்று காரணம் விளக்க முடியாதபடி தோல்வியடைந்து கொண்டே இருக்கிறது. அதனால் நிறுவ னமே மூழ்கிவிடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் நிறுவிய பால் ஜென்னிங்ஸ், மற்றும் மூலதனமிட்ட பீட்டர் ஸ்டம்ப் இருவரும் பெரும் சோகத்தில் உள்ளனர். அங்கு நிபுணராக அவ்வப்போது யோசனை கூறும் ஷாலினி, விளக்கம் காண சூர்யாவை அழைத்திருக்கிறாள். நிறுவனத் தில் உள்ள விஞ்ஞானிகளைக் குற்றம் சாட்டுவது போல் வெளிப் படையாக விசாரிக்காமல், வெறும் ஆவலுக்காகச் சுற்றிப் பார்ப்பது போல் ஆராய வேண்டும் என்று ஷாலினி கேட்டுக் கொண்டாள்.

ஷாலினி கட்டிடத்தின் இரண்டாம் தளத்தின் மூலையிலிருந்த அலு வலக அறைக்கு சூர்யாவையும், கிரணையும் அழைத்துச் சென்றாள். கிரண் முதலில் எலிவேட்டர் இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டான். ஷாலினி, "சரிதான்! இந்த வயசுலேயே ஒரு தளம் மாடிப்படி ஏறரதுக்கு அலுத்துகிட்டா அவ்வளவுதான். இன்னும் ரெண்டு வருஷத்துல வீல் சேருக்கே போயிடுவே போலிருக்கு" என்று அதட்டி விட்டு விடுவிடுவென ஏறிச் சென்றாள். கிரண் அவள் முதுகுக்கு பழித்துக் காட்டிவிட்டு அவளைவிட வேகமாக ஏறி வீரமாக முன்னால் சென்றான்.

சூர்யா இந்த அக்காள் தம்பிப் போட்டியைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டு அவர் வழக்கப்படி அலட்டிக் கொள்ளாமல், ஆனாலும் வெகு வேகமாகவே படியேறினார்.

பால் ஜென்னிங்ஸின் அலுவலக அறை, கிரண் எதிர்பார்த்த படியே அலங் கோலமாக இருந்தது. மேஜை, நாற்காலிகள், புத்தகக் காபினெட் எல்லாமே "நாங்கள் பழசு" என்று தம்பட்டமடித்தன. மேஜையின் மேல் பல பேப்பர் குவியல்கள். அறை மூலைகளிலும் புத்தகங்கள், ஏடுகள், மற்றும் தொழில்துறைப் பத்திரிகைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. சுவர்கள் மேலும், கார்க் போர்டுகள் மேல் தாள்கள் குத்தூசிகளால் பிணைக்கப்பட்டிருத்தன.

அறையிலிருந்த இரண்டு பெரிய வெள்ளைப் பலகைகளோ (white board) இன்னும் பரிதாபம். அவற்றின் மேல் வானவில் போல் பல வண்ணங்களில் படுகிறுக்கலாக எழுதப்பட்ட பல ·பார்முலாக்களும் அஷ்ட கோணல் மாணலாக வரையப்பட்ட (இல்லை -- கிறுக்கப்பட்ட!) படங்களும் பாதி அழிக்கப்பட்டு மேல் எழுதப்பட்டு, அந்த பிரம்ம தேவனே வந்தாலும் படித்தறிய முடியாத தலையெழுத்துப் போல் காட்சியளித்தன. கிரண் தனக்குள், "மெமோ டு கிரண்: இந்த போர்டுகளை நேனோ-சயன்ஸ் அப்படின்னு தலைப்புப் போட்டு ஆர்ட் காலரில வச்சுட்டா, பல்லிளிச்சுக் கிட்டு பல ஆயிரம் குடுத்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. இங்கேருந்து போகறச்சே கேட்டு அடிச்சிகிட்டுப் போகணும்." என்று சொல்லிக் கொண்டான்.

ஆனால், அங்கங்கு பாலைவனச் சோலைகள் போல் படங்களும், பட்டங்களும் நல்ல ·ப்ரேம் போட்டு மாட்டப் பட்டிருந்தன. அறையிலிருந்த ஒரே மேஜை மேலும் ஒரு பூ ஜாடியில் ஒரு சிறிய மலர்ச்செடி இரண்டு மலர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் ஒரு சிறிய குடும்பப் படம். அதன் பக்கத்தில் ஒரு காகித உறை யிலிருந்து இன்னும் பல வண்ணப் புகைப் படங்கள் சிதறியிருந்தன.

நுழைந்த ஒரு சில நொடிகளுக்குள் சூர்யா அறையை அக்கு வேறு ஆணி வேறாகத் தன் கூர்ந்த பார்வையால் அலசி விட்டார்.

ஷாலினி மற்ற நால்வருக்கும் பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தாள்.

சூர்யா முதல் சுற்று ஹலோ முடிந்தவுடனேயே பாய்ந்தார். "பால், பீட்டர்--உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்பப் பாராட்டறேன். முப்பது வருஷகாலமா காலேஜ் காலத்துலேந்து நீங்க ரெண்டு பேரும் நண்பர்களாவும் பங்காளர்களாவும் (பார்ட்னர்) சேர்ந்து எவ்வளவு சாதிச் சிருக்கீங்க? இணைந்த கண்டுபிடிப்புக்கள், பேடன்ட்டுகள்..."

சூர்யாவின் முதல் அஸ்திரம் பால், பீட்டர் இருவருக்கும் சற்றே அதிசயம் அளித்தது. ஆனால் அவர் நிறுத்தாமல் அடுத்து வீசிய ஏவுகணை இன்னும் பலமான பலனை அளித்தது: "தொழில்ரீதியா மட்டுமில்லாம, தனிப்பட்ட முறையிலயும் ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கியிருக்கறது ரொம்ப நல்லா இருக்கு. ரெண்டு பேருக்கும் பனிச்சறுக்கு (ski) பிடிச்சிருக்கு; உங்க மனைவிகளுக்கும் கூட! பிரமாதம். அது பத்தி சொல்லப்போனா போன மாசம் நீங்க போன லேக் டாஹோ பனிச்சறுக்குப் பயணம் எப்படியிருந்தது? திரும்பி வரப்போ வீசின பனிப்புயலில மாட்டிக்கிட்டது ரொம்பக் கஷ்டமா யிருந்ததா?"

பால், பீட்டர் இருவர் முகத்திலும் அளவு கடந்த ஆச்சரியம் பீறிட்டது. கீழ்த்தாடை மார்பைத் தொடும் அளவுக்கு வாய் பிளந்தனர். "என்ன... எப்படி!" என்று திணறினார் பால். பீட்டருக்கோ அவ்வளவு வார்த்தைகளும் வரவில்லை. வாயைத் திறந்து மூடியபடி முகத்தில் ஆச்சரியத்துடன் ஒரு விதமான பீதியும் கலந்தது போல் தடுமாறிக் கொண்டிருந்தார்.

பால், பீட்டர் இருவரைப் பற்றி சூர்யா முதலில் கூறிய தொழில்ரீதி விவரங்கள் பெரும்பாலும் நேனோஜென்னின் வலைத் தளத்தில் இருந்ததால் அவருக்கு அவற்றைப் பற்றித் தெரிந்திருந்தது அவ்வளவாக ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. ஆனாலும் அழைத்த பதினைந்து நிமிடங்களுக்குள் சூர்யா வலைத்தள விவரங்களைப் படித்து விட்டாரா என்பது கொஞ்சம் வியப்புத்தான். (சூர்யா அதைப் படிக்கவில்லை, அறையில் கவனித்ததை வைத்தே கணித்த யூகங்கள் என்பது அவர்களுக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே, மன்னித்து விடுவோம்!)

பால்தான் முதலில் சுதாரித்துக் கொண்டார். பீட்டரின் முகத்தில் இன்னும் சில இனம் புரியாத உணர்ச்சிகள் கலை டாஸ்கோப்பில் வண்ண அமைப்புகள் மாறிமாறித் தெரிவது போல் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

பால் வினவினார் "எங்க தொழில் விவரத்தை வலையகத்திலிருந்து இவ்வளவு சீக்கிரமா தெரிஞ்சிகிட்டீங்கன்னு நெனச் சேன். ஆனா எங்க தனிப்பட்ட விவரங்களைக் எப்படி கண்டு பிடிச்சீங்க! அதுவும் நாங்க பனிப் புயலில மாட்டிக்கிட்ட விவரம் அளவுக்கு? உங்களை ஷாலினி கூப்பிட்டு இருபது நிமிஷம் கூட ஆகலயே!" என்றார்.

கிரண் அலட்சியமாக "ஹா! இருபது நிமிஷம் என்ன, இருபது நொடிகூடப் போதும் எங்க சூர்யாவுக்கு..." என்று பீற்றிக்கொள்ள ஆரம்பித்தான். ஷாலினி, சூர்யா இருவரும் அவனை நோக்கிப் படாரெனெத் திரும்பி எரித்துவிடுவது போல் பார்க்கவே, படக்கெனப் பாதியில் வாயை மூடிக் கொண்டு, கையை விரித்துக் தூக்கி "இப்ப என்ன சொல்லிட்டேன்!" என்பது போல் அலட்சியத் தோள் குலுக்கலுடன் ஒதுங்கிக் கொண்டான்.

பீட்டர் ஒரு வழியாக உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு, சற்று பயமும் உஷ்ணமும் கலந்த வியப்புடன் "ஆமாம்; இது என்ன மாயாஜால மந்திர தந்திரமா இருக்கு! விளக்கம் தெரிஞ்சாகணும்" என்றார்.

சூர்யா பொறுமையாக தற்பெருமை கடுகளவுமில்லாமல் விளக்கினார். "நாங்க உங்களைப் பத்தி வலையகத்தில படிச்ச தில்லை. வரச்சே PDA-வில படிச்சிருந் திருக்கணும், ஏதோ கிரணோட பேசிட்டு வந்ததுல படிக்க மறந்துட்டேன். மன்னிக் கணும். ஆனாலும், இந்த அறையில நுழைஞ்சவுடனேயே இங்க இருக்கற பல பொருட்கள் உங்களைப் பத்திக் கதை சொல்லிடுச்சே. அதை வச்சே யூகமாச் சொன்னேன் அவ்வளவுதான்."

பால், பீட்டர் இருவரும் ஒரே குரலில், "இங்க இருக்கறத வச்சா? எப்படி?" என்றனர்.

கிரண் இடையில் குதித்து நக்கலாக "அ... அ... அ... அதெப்படி? மந்திரவாதி தந்திரத்தை எப்படி செய்யறான்னு சொல்லிட்டா மவுசு போயிடுமே. தெரியாம இருக்கறதுதான் நல்லது" என்றான்.

சூர்யா தலையாட்டி மறுத்தார். "இல்லை கிரண், இவங்களுக்கு என்னைப் பத்தி ஷாலினி சொல்லித்தான் தெரியும். அவங்களுக்கே நம்ம மேல நம்பிக்கை வளரணும்னா இதைப் பத்தி விவரமா சொல்லித்தான் ஆகணும்" என்றார்.

பால் ஆவலுடன் "மேல சொல்லுங்க" என்றார். பீட்டரும் பெரிய தலையாட்ட லுடன் ஊக்குவித்தார்.

சூர்யா ஆசிரியர் மாணவர்களுக்குப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பதைப் போல் படிப்படியாக விளக்க ஆரம்பித்தார். "சொல்றேன். ஆனா சொன்னப்புறம் 'ஓ இவ்வளவுதானா'ன்னு சொல்லிடுவீங்க. இருந்தாலும் பரவாயில்லை. நான் விளக்கினாத்தான் உங்க தலைசிறந்த விஞ்ஞானிங்களைக் குற்றம் சாட்டறது மாதிரி ஆழ்ந்து விசாரிக்காம மேலுக்குப் பேசி சுற்றிப் பார்த்தே எதாவது கண்டறிய முடியும்னு நம்பிக்கை வரும்" என்றார்.

ஷாலினி மெளனமாக உள்ளத்தில் பெருமையுடனும் உதட்டில் புன்னகையு டனும் தலையாட்டி ஆமோதித்து ஊக்குவித்தாள்.

சூர்யா தொடர்ந்தார். "முதலாவது உங்க தொழில் பத்தின விவரம். நீங்க ரெண்டு பேரும் முப்பது வருஷமா, காலேஜ் காலத்துலேந்து சேர்ந்திருக்கீங்கன்னு சொன்னேன். அது இங்க மேஜை மேல இருக்கற பழைய புகைப்படத்துல, நீங்க ரெண்டு பேரும் யூனிவர்ஸிடி கயாக் படகு குழுவுல இருக்கறதை வச்சு. பேடன்ட் பத்தி சொன்னது இதோ இங்க சுவர் மேல வரிசையா மாட்டிருக்கற பத்திரங்களை வச்சு."

பீட்டர் குறுக்கிட்டு "அது ரொம்ப க்ளெவர்தான். அது சரி, ஆனா நீங்க எங்க குடும்ப விவரம், பனிச்சறுக்கு எல்லாம் சொன்னது" என்றார்.

சூர்யா முறுவலித்தார். "அதெல்லாமும் அதே மாதிரி இங்க இருக்கற பொருட்களையும் அதோட எனக்குத் தெரிஞ்ச மற்ற விவரத்தையும் இணைச்சுத்தான். இங்க பாருங்க உறையிலேந்து வெளியில விழுந்து மேஜைமேல பரவியிருக்கற சமீபகாலப் புகைப்படங்கள். நீங்க ரெண்டு பேரும் குடும்பத்தோட பனிச்சறுக்குக்குப் போனப்போ எடுத்துக்கிட்டது."

பால் இடையில் குதித்து "அது லேக் டாஹோங்கறது எப்படித் தெரியும்?" என்றார்.

கிரண் சிரித்தான். "எலிமென்டரி மை டியர் டாக்டர் ஜென்னிங்ஸ். நான் கூட சொல்லிடுவேன். இந்தப் படத்துல பாருங்க டாஹோ க்வீன் உல்லாசப் படகு இருக்கற துறையோட போர்டு இருக்கே. அதை வச்சு யூகிச்சிருப்பாரு." என்றான்.

சூர்யா புன்னகையுடன் சுட்டு விரலை மூக்கின் மேல் வைத்து "ரைட் ஆன் த நோஸ். நீயும் நல்லாத் தேறிட்டு வரே" என்று அங்கீகரித்தார்.

ஷாலினிக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருந்தது. "ஆனா அந்த பனிப் புயலப் பத்தி அந்தப் படங்களில இல்லயே சூர்யா? அதைப் பத்தி எப்படிக் கண்டு பிடிச்சீங்கன்னு எனக்கே வியப்பா இருக்கு."

கிரணும், "எனக்குந்தான்" என்றான்.

சூர்யா புன்னகைத்தார். "ஆமாம். அந்தப் பனிப்புயலைப் பத்தி அந்த புகைப் படங்களில இல்லைதான். ஆனா அதைக் கண்டு பிடிக்கறத்துக்கான துப்பு ஒண்ணு இருக்கு" என்றார்.

பால் "அது என்ன" என்று வினவினார்.

சூர்யா விளக்கினார். "வெல், புகைப் படங்களோட வலது மூலையில பாத்தீங்கன்னா அதை எடுத்த தேதி சிகப்பு எழுத்துல பதிஞ்சு இருக்கு. அது போன மாசத்துத் தேதி. அதை வச்சு அது ஒரு சனிக் கிழமைன்னு தெரிஞ்சுது. அது மூணுநாள் வாரயிறுதி விடுமுறை. அப்படின்னா நீங்க ஞாயிறு இல்லை திங்கள் காலையிலதான் திரும்பி வந்திருக்கணும்."

பீட்டர் "கரெக்ட், நாங்க ஞாயிறு மாலைதான் கிளம்பினோம்" என்று ஆமோதித்தார்.

சூர்யா தலையாட்டி அங்கீகரித்து விட்டுத் தொடர்ந்தார். "எனக்கு அந்த விடுமுறையில ஞாயிறு, திங்கள் ரெண்டு நாளும் பெரிய பனிப் புயலால டாஹோ பக்கத்துல எல்லாம் I-80, US-50 போன்ற பெருஞ்சாலைங்களை (highways) மூடிட்டாங்கன்னு படிச்சிருந் தேன். முடிச்சுப் போட்டுக் கணிச்சு அந்தப் புயலில நீங்க மாட்டிக் கிட்டிருந் திருப்பீங்கன்னு யூகிச்சேன் அவ்வளவு தான்."

பால், பீட்டர் இருவரும் பலமாகக் கைதட்டிச் சிரித்தனர். பால் "ப்ராவோ, ப்ராவோ! பிரமாதமான யூகம் சூர்யா" என்று பாராட்டினார். பீட்டரும், "ஆமாம். ரொம்பவே இம்ப்ரஸிவா இருக்கு" என்று ஆமோதித்தார்.

ஷாலினி "என்ன பால், பீட்டர், ரெண்டு பேருக்கும் இப்ப சூர்யா உங்க விஷயத்துல துப்பறியறது சம்மதமா?" என்றாள்.

பால், பீட்டர் இருவரும் ஒரே குரலாக. "அ·ப்கோர்ஸ்!" என்றனர். பால் சிரித்து விட்டுத் தொடர்ந்தார். "ஆமாம் சூர்யா, நீங்க வரத்துக்கு முன்னால, உங்களால தீவிர விசாரணையில்லாம என்ன கண்டு பிடிக்க முடியும்னு ஷாலினி கிட்ட எங்க கவலையை சொன்னோம். ஆனா உங்க யூகிப்புத் திறமையை நீங்க இப்ப காட்டினப்புறம் அந்தக் கவலை காத்தோட பறந்து போச்சு. எனக்கு மனசிலேந்து ஒரு பெரிய பளுவை இறக்கினா மாதிரி ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கு" என்றார்.

பீட்டரும் பெரிதாகத் தலையாட்டி ஆமோதித்தார். "யெஸ், யெஸ். பால் சொல்றது ரொம்ப சரி. நீங்க எதாவது கண்டு பிடிச்சு இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிவாரணம் தந்துடுவீங்கன்னு நம்பிக்கை வந்துடுச்சு. ப்ளீஸ் ப்ரோஸீட்."

சூர்யா சிரம் தாழ்த்தி அவர்கள் பாராட்டையும் நம்பிக்கையையும் துளிக் கூடத் தலைக் கனமின்றி ஏற்றுக் கொண்டு மேலே தொடர்ந்தார். "சரி விஷயத்துக்கு வரலாமா? உங்க பிரச்சனையைப் பத்திக் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. ஷாலினி மேலாக ரெண்டு வரில சுருக்கமாத்தான் சொல்லியிருக்கா" என்றார்.

பால் ஆரம்பித்தார். "நாங்க நேனோ பயோ-டெக் தொழில் நுட்பங்களை வச்சு சர்ஜரிக்கும், உடம்புக்குள்ளயே அனுப்பி மருந்துகளை சரியான இடங்களுக்கு மட்டும் செலுத்தறத்துக்குமான மிகமிக சிறிய கருவிகளை உற்பத்தி செய்ய இந்தக் கம்பனியை ஆரம்பிச்சோம். பீட்டர்தான் பெரும்பாலான முதலீட்டைப் போட்டார்."

பீட்டர் தொடர்ந்தார். "பால் கண்டுபிடிச்ச நேனோ தொழில்நுட்பக் கருவிகள் ரொம்பப் பிரமாதமானவை. இப்ப பயன்படுத்தற மருத்துவ வழிமுறைகளை விடப் பலநூறு மடங்கு நல்லதுன்னே சொல்லலாம். அந்தத் தொழில்நுட்பத்தை வணிக ரீதியா (commercialize) வெளியிடணும்னுதான் நான் என் சொந்தப் பணத்தையே போட்டு பால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்க உதவியிருக்கேன். இங்கேயே தினமும் வந்து பாலோட உழைக்கிறேன்."

பால் "பீட்டர் ஒரு ஸீரியல் ஆன்ட்ரப்ரன்யூர். அவர் வேற நிறுவனங் களை நிறுவி வெற்றியடைஞ்சிருக்கார். அவர் நினைச்சா பேசாம வீட்டுல அக்கடான்னு உக்காரலாம். ஆனா இந்தத் தொழில் நுட்பத் தோல்வியால அவர் இங்க வந்து பாடு பட்டுக்கிட்டிருக்கறதை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என்றார். பிறகு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, "சீக்கிரம் இந்தப் பிரச்சனை தீர ஒரு வழி கண்டு பிடிக்கலைன்னா நிறுவனத்தையே இழுத்து மூடிட வேண்டியதுதான். எவ்வளவு பெரிய விஞ்ஞானிங்க இங்க இருக்காங்க. அவங்க பேர், என் பேர், பீட்டர் பேர் எல்லாத்துக்கும் இழுக்கு வந்துடும். சூர்யா, நீங்க எப்படியாவது இதுக்கெல்லாம் யார் காரணம்னு கண்டு பிடிச்சே ஆகணும்" என்று சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆவேசத்துடன் கெஞ்சினார்.

பீட்டரின் முகத்தில் பரிதாபமும், கவலையும் இன்னும் என்னவென்று தெரியாத சில உணர்ச்சிகளும் கலந்து விளையாட, பாலைத் தேற்றினார். "பால், என்னைப் பத்திக் கவலைப் படாதீங்க. நான் நல்ல நிலைமையில இருக்கேன். உங்களுக்காகவும், மத்த விஞ்ஞானிகளுக் காகவும் தான் கவலைப் படறேன் என்றார்."

சூர்யாவும் பாலுக்கு ஆறுதல் சொன்னார். "என்னால் முடிஞ்ச அளவு அத்தனையும் முயற்சி செய்யறேன் பால். கண்டு பிடிச்சிடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றார்.

பால் சுதாரித்துக் கொண்டு "சரி. உங்களுக்கு என்ன உதவி வேணும்? எதுவானாலும் நான் செய்யறேன்" என்றார். பீட்டரும் சேர்ந்து கொண்டு, "நானும் இங்கயேதான் இருப்பேன். எதாவது விளக்கம், உதவி வேணும்னா தயங்காம என்னையும் கேளுங்க. இதோ என் செல் ·போன் நம்பர்" என்று ஒரு சீட்டைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட சூர்யா சில நொடிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். பிறகு, "உங்க தொழில் நுட்பம் கொஞ்சநாள் சரியா வேலை செஞ்சுது ஆனா பிறகு திடீர்னு கெட்டுப் போச்சுன்னு சொன்னீங்க இல்லயா?" என்றார்.

பால் "ஆமாம் அப்படித்தான் ஆச்சு, அதுக்கென்ன?" என்றார்.

கிரண் இடையில் புகுந்து, "நான் சீப்பா ஒரு நோட்புக் கம்ப்யூட்டர் வாங்கினேன். அது கூட அப்படித்தான். முதல்ல பிரமாதமா வேலை செஞ்சுது. ஆனா உற்பத்தியாளர் உத்திரவாதம் (manufacturer's warranty) மூணே மாசம்தான். பாருங்க, மூணு மாசம் முடிஞ்ச மறுநாள் டகால்னு மக்கர்! புகை கூட வந்துடுச்சு. தூக்கிப் போட்டதுதான் மிச்சம். அந்த மாதிரி எதாவது வாரண்ட்டி போன மக்கரா இருக்குமோ?" என்றான்.

விஞ்ஞானிகள் மூவரும், அவனை முறைத்த முறைப்பில் படக்கென வாயை மூடிக் கொண்டு, "ஜீஸ், அப்படி என்ன சொல்லிட்டேனாம்! கடைசியில பாருங்க அப்படியே எதாவது மக்கர்னு கண்டு பிடிச்சுட்டு பல்லிளிக்கப் போறீங்க" என்று மனத்துக்குள் கருவிக் கொண்டான்.

சூர்யா சற்றுத் தயங்கி விட்டு "நான் கேட்கறதை தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கும் கிரண் கேட்ட திக்குலயே ஒரு சந்தேகம். அந்தக் கருவிங்க அப்படி சரியா வேலை செய்யாமப் போனதுக்கு யாரோ செஞ்ச சதியினால தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க? அந்தக் கருவிகள் உற்பத்தி செய்யப் பட்ட விதத்தால் ஏற்பட்ட கோளாறோ இல்லன்னா அடிப்படைத் தொழில்நுட்பத்திலேயே இருக்கற பழுதோ காரணமாயிருக்கவே முடியாதா? அதையெல்லாம் ஆராய்ஞ்சு இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டீங்களா?"

கிரணின் வாரண்ட்டி கேள்வியால் ஏற்கனவே கடுப்படைந்திருந்த பீட்டர், சூர்யாவின் கூர்மையான கேள்வியால் இன்னும் சூடேறினார். ஏகப்பட்ட உஷ்ணத்துடன் "வாட் டூ யூ மீன்? பால் கண்டுபிடிச்ச தொழில்நுட்பமே உடைசல்ங்கறீங்களா? அது எங்க ரெண்டு பேருக்குமே ஒரு அவமானம். பால் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானி தெரியுமா?" என்று பீட்டர் உரக்க பொங்க ஆரம்பித்ததும் ஷாலினி இடைபுகுந்து அவரை நிதானப் படுத்தினாள். "சே, சே! அப்படியெல்லாம் சூர்யா நினைக்க மாட்டார். அவர்தான் உங்க சாதனையையெல்லாம் பத்தி ஏற்கனவே புகழ்ந்தாரே. அவருக்கு உங்க திறமை மேல பெரும் மதிப்பு இருக்கு. இது இந்த விசாரணையின் முதல் படியா இருக்கும்" என்றாள்.

சூர்யாவும் ஆமோதித்தார். "ஆமாம் பீட்டர். ஸாரி நான் கேள்வியை சரியாக் கேட்கலை. மன்னிக்கணும். நான் கேட்க வந்தது என் னன்னா, முதல்ல கருவிங்க கெட்டுப் போக ஆரம்பிச்சவுடனேயே நீங்க அது எதுனா லன்னு ஆராய்ஞ்சு பாத்திருப்பீங்க இல்லயா? அதுல என்ன விவரங்கள் கிடைச்சது? யாரோ செஞ்ச சதிங்கறத்துக்கு எதாவது தடயங்கள் கிடைச்சதா? அதுபத்தி எங்களுக்குச் சொன்னீங்கன்னா மேற்கொண்டு தடயம் தேடறத்துக்கு உதவியா இருக்கும். அதுக்காகத்தான் கேட்டேன்" என்றார்.

பீட்டர் தணிந்து அமைதியானார். பால் விளக்கினார். "சூர்யா என்னை நம்புங்க. இந்தப் பிரச்சனைக்கு உற்பத்திமுறைக் கோளாறோ இல்லன்னா என் தொழில் நுட்பத்திலேயே இருக்கற பழுதாவோ இருந்துட்டா அது எனக்கு நிம்மதியைத் தான் குடுக்கும். இந்த மாதிரி மிக உயர்நிலைத் தொழில்நுட்பத்தில எதாவது இடக்கல் ஏற்பட்டு அதை சரி செய்யறது சகஜந்தான். நீங்க கேட்கறது ரொம்பவும் சரிதான். ஏற்கனவே பலமுறை ரெண்டு மாதிரி தடங்கலும் ஏற்பட்டிருக்கு, நாங்க சரி செஞ்சுதான் முன்னேறியிருக்கோம். ஆனா இந்த முறை அப்படி இருக்கறா மாதிரி தோணலை. எல்லா விவரங்களையும் துருவித் துருவிப் பாத்தாச்சு. கருவிகளை யெல்லாம் அக்கு வேறு ஆணி வேறா அலசிப் பாத்தாச்சு. ஒரு தவறும் இல்லை..."

பால் சில நொடிகள் நிறுத்திவிட்டுப் பிறகு சோகப் பெருமூச்சுடன் தொடர்ந்தார். "மேலும் இதுக்கு முன்னால பரிசோதனை முடிஞ்சப்புறம் பல நாளுக்குப் பிறகு திடீர்னு கெடறா மாதிரிப் பிரச்சனை ஏற்பட்ட தில்லை. ஆனாலும் இது சதிதான்னு என்னால நூறு சதம் சொல்லிட முடியாது. அதுக்கான உறுதியான தடயங்கள் இல்லை. விஞ்ஞானத்துல அதுவும் இந்த மாதிரி நுணுக்கமான கருவிகளில எங்களுக் குத் தெரியாத பழுது எதாவது இருக்க வாய்ப்பிருக்கு. ஆனாலும் அது ரொம்பக் குறைவான வாய்ப்பு. எங்களுக்கு உடனே தெரியாததுனால நாங்க சதின்னு சந்தேகிக்கறோம். அப்படி சதின்னா, யாரோ ஒரு மிகத் திறமைசாலி, தடயமே இல்லாம செஞ்ச சதி. நீங்க துப்பறிஞ்சு கண்டு பிடிக்கறதை வச்சு மேல பாக்கலாம்" என்றார்.

சூர்யா "அப்படி யாராவது வேணும்னே செஞ்சிருந்தா தடயங்கள் நிச்சயமாக் கிடைக்கும் கவலைப்படாதீங்க. உங்க நேனோ கருவிகளைப் பத்தி இப்பக் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. அதைக் கேட்டப்புறம் தடயம் தேடலாம்" என்றார்.

பால் தான் கண்டுபிடித்த கருவிகளைப் பற்றிப் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தற்காலிகமாகத் தன் கவலைகளை மறந்தார். அவர் முகத்தில் பெருமிதம் படர்ந்தது. தன் விஞ்ஞானக் கனவுலகுக்கே போய் அங்கு உலவிக் கொண்டே விவரிக்கத் துவங்கினார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com