தேவை - உங்கள் அனுசரணை
கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டு, காதலாய் மலர்ந்து, பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் நடந்த திருமணம் என்னுடையது.

திருமணம் முடியும் முன்பே அவருக்கு அமெரிக்காவில் வேலைகிடைத்து, பிறகு நானும் இங்கு வந்து சேர்ந்து என் மேல்படிப்பை முடித்தேன். இருவரும் சந்தோஷமாக நன்றாகச் சம்பாதித்துக் கொண்டு இருந்தோம். வாழ்க்கையை நன்றாக அனுபவித்தோம். இரண்டு பக்கப் பெற்றோர்களும் வந்து தங்கிவிட்டுப் போனார்கள். எல்லா இடங்களும் சென்று பார்த்தோம். குழந்தை பிறக்கவில்லை என்ற குறையும் 5 வருடத்திற்குப் பிறகு தீர்ந்தது. பையனுக்கு இப்போது 3 வயது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், வாழ்க்கையின் ஓட்டத்தில் சிறிது சரிவு ஏற்பட்டது. அவர் வேலை வேறு ஊருக்கு மாற்றப்பட்டது. வேறுவழியில்லாமல் 6 மாதம் பிரிந்து இருந்தோம். பிறகு ஏதோ, அவர் மேலாளர் மேல் இருந்த கோபத்தில் வேலையை விட்டுவிடுத் திரும்பி வந்துவிட்டார். இப்போது ஒன்றரை வருடமாக வேலையில்லை. முதலில் நான்தான் நன்றாகச் சம்பாதிக்கிறேனே என்பதால் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் நாள் ஆக ஆக அவர் எந்த வேலையையும் தன்னுடைய தகுதிக்கு ஏற்றது இல்லை என்று தள்ளி வைத்துவிட்டு, வீட்டில் சந்தோஷமாக டிவி பார்த்துக் கொண்டு இருக்கிறார். குழந்தையைக் காப்பகத்தில் (Day care) விட்டு வருகிறேன்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் நிலைமை எப்படி? நான் ஏதாவது சொன்னால் நீதான் சம்பாதிப்பவள் என்ற மமதையில் பேசாதே என்று கத்துகிறார். எங்களுக்குள் 'விரிசல்' பெரிதாகிக் கொண்டே வருகிறது. நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வீடு திரும்பினால், வீடு ஒரே குப்பையாக இருக்கிறது. டிவி சப்தம் கேட்கிறது. எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ஆத்திரத்தில் கத்திவிடுகிறேன். அவரும் திரும்பிக் கத்துகிறார். குழந்தை மிரண்டு போகிறான். வேலையில் என் தோழிகளுடன் என் பிரச்சினையைப் பகிர்ந்தபோது 'அவரை மனநல மருத்துவரிடம் (psychological therapist) போகச் சொல். He needs help என்கிறார்கள். இதைப் பற்றி மெல்ல அவரிடம் சொன்னால் நான் என்ன பைத்தியமாகிப் பாயைப் பிறாண்டுகிறேனா? வேண்டுமென்றால் உன் வாழ்க்கையி லிருந்து மறைந்துவிடுகிறேன் என்று பயமுறுத்துகிறார். இதை எப்படி நான் கையாள்வது?

அன்புள்ள சகோதரிக்கு...

சீராகப் போய்க்கொண்டிருக்கும் எந்த ஓட்டத்திலும், சரிவு ஏற்பட்டால் உடல், மன, பொருள் சேதம் ஏற்படத்தான் செய்யும். நல்ல வேலையில் இருந்து, பிறகு அதிலே தேக்கம் இருந்து வெளியே வந்த உங்கள் கணவருக்கு இன்னும் அந்த மனத்தில் ஏற்பட்ட சேதத்தை, சுதாரிக்க முடியவில்லை. உள்ளுக்குள் அவருக்கும் மனம் அலை பாய்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த மன அழுத்தத்தைப் (depression) போக்க, சிலர் நிறையச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இல்லை டிவி பார்ப்பார்கள். இல்லை விளையாடிக்கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கு எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், உள்ளுக்குள் தன்னம்பிக்கை இழந்து, சுயபரிதாபம் மிகுந்து, தாழ்வு உணர்ச்சி ஏற்பட்டு, மிகவும் பரிதாபமாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் ஏற்படும் அதிர்ச்சிகளை ஏற்று அழகாக அணுகி அந்த அனுபவத்தைப் பாடமாக நோக்கி, மறுபடியும் சீரமைத்துக் கொள்வதற்கு முதிர்ச்சி வேண்டும். அது அவரவர், அடிப்படை குண இயல்புகளைப் பொறுத்தது. உங்கள் கணவர் சற்று 'பிராக்டிகலாக' இருந்திருக்கலாம். இந்த ஊரில் வேலை போவதும் இயல்பு. வேலை கிடைப்பதும் இயல்பு. எப்படியிருந்தாலும் இது ஒரு தற்காலிகமான கட்டம் (temporary phase).

நான் சொல்கிறபடி ஒரு மாதம் செய்து பாருங்கள். மனம் ஒருநிலைக்கு வரும். பிறகு அவர் வேலைக்குப் போகவில்லை யென்றாலும், வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு நிம்மதியாவது இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு நல்ல கணவராக, மகனாக, மருமகனாக - பல உருவங்களில் இருந்திருக்கிறார். இந்த வேலையின் ஏமாற்றம் காரணமாக அவருடைய நடத்தையில் சற்று (இல்லை பெரிய) மாற்றம் இருக்கலாம் ஆனால் இது ஒரு தற்காலிக மாற்றமே என்பதை நிச்சயமாக நம்புங்கள். He will bounce back.

வீட்டுக்கு வந்தவுடன், அவரிடம் ''வீட்டில் தானே இருக்கிறீர்கள்.. இதைக்கூட செய்யக்கூடாதா? வீடு குப்பையாக இருக்கிறதே?'' என்று கேட்காதீர்கள். கேட்டுப் பிரயோஜனமில்லை என்று உணர்ந்து இருப்பீர்கள். ஆகவே மெளனமாக உங்கள் வீட்டு வேலையைத் தொடருங்கள். Sometimes, people communicate better with silence.

மெளனம் என்று சொல்லும்போது, அவரை ஒதுக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. வீட்டைத் துப்புரவு செய்தபின், சகஜமாக இருந்து வாருங்கள். (அவருக்குள் எங்கேயாவது ஒரு குற்றஉணர்ச்சி இருக்கும். நீங்கள் எது சொன்னாலும் அப்போது கேட்கத் தயாராக இருப்பார். உதாரணம்: குழந்தைக்கு ஆரஞ்சுச் சாறு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் வாங்கி வருகிறீர்களா என்று கேட்டு அவரை வெளியே சில மணி நேரம் அனுப்பப் பாருங்கள்).

ஒரு நண்பரைப் போல பழகிப் பாருங்கள். மெல்லத் தன்னுடைய பலவீனங்களையும், உணர்ச்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்போது உங்களால் அவரைப் பழைய நிலைக்கு மாற்றி, வேலை தேடும் பணியில் ஈடுபட வைக்க முடியும். உங்கள் அனுசரணையும், சகிப்புத் தன்மையும் (சகித்துக் கொள்கிறேன் என்ற உணர்வு இல்லாமல்) மிக முக்கியம்.

வாழ்த்துக்கள்
அன்புடன்
சித்ரா வைத்திஸ்வரன்

© TamilOnline.com