தொ.மு.சி. ரகுநாதன்
தமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை மரபின் செழுமைக்கும் அதன் ஆழ அகலத்துக்கும் வளம் சேர்த்தோரில் தொ.மு.சி. ரகுநாதனுக்கு முதன்மையான இட முண்டு. 1941இல் எழுத்துத்துறையில் ஈடுபட்டு 2001இல் தனது இறுதிவரை அவரது பணிகள் பலதரப்பட்டவை.

கவிதை, சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்பு, விமரிசனம், ஆய்வு மற்றும் பத்திரிகையாசிரியர் என ரகுநாதனின் ஆளுமை பன்முக விகசிப்பு கொண்டது. முற்போக்கு இடதுசாரிச் சிந்தனையிலும் அதன் இலக்கிய வளர்ச்சியிலும் மற்றும் ஆய்வு விமரிசனத் துறைகளிலும் தீர்க்கமான பங்கு வகிக்கும் ஆற்றலை மார்க்சிய தத்துவப் பயிற்சி தொமுசிக்கு வழங்கியது. வேறு வார்த்தையில் சொன்னால், இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை, படைப்பு மற்றும் விமரிசனத்துக் கான 'புலமை' நிலை பெறுவதற்கு தொ.மு.சி. காரணமாக இருந்துள்ளார்.

1923இல் ரகுநாதன் திருநெல்வேலியில் பிறந்தார். இவரது தாத்தா தகப்பன் உள்ளிட்டோர் கலை இலக்கியம் சார்ந்த துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். இவரது மூத்த சகோதரன் கூடச் சிற்பங்கள் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

1940களில் உருவான இந்திய அரசியல் சூழல் இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. ரகுநாதனும் மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டார். சிறை சென்றார். படிப்பை நடுவில் விட்டார். சமூக உணர்வுமிக்க இளைஞராக வளர்ந்தார்.

தொடக்கத்தில் இவரது ஆங்கில ஆசிரியராக இருந்த அ. சீனிவாச ராகவன் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியவர் எனலாம். இயல்பாக இவரிடம் இருந்த இலக்கிய ஆர்வம் மேலும் வளர்ந்தது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதத் தொடங்கினார்.

தினமணியில் துணை ஆசிரியர் (1944), அதிலிருந்து விலகி முல்லை என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் (1946), சக்தி இதழின் ஆசிரியர், சக்தி இதழில் 1948முதல் 1951 வரை துணை ஆசிரியர் என்று தொடர்ந்தது இவரது இதழியல் பணி. 1954இல் சாந்தி எனும் மாத இதழைத் தொடங்கினார். ஓராண்டுக் காலம் சாந்தி வெளிவந்தது. முற்போக்கு இடதுசாரி இலக்கியப் பயில்வில் சாந்தி முனைப்பான அக்கறை செலுத்தியது. 1967 - 1988 காலத்தில் சென்னையில் சோவியத் செய்திப் பத்திரிகையில் பணி புரிந்தார்.

தமிழில் சோசலிச யதார்த்தவாதப் படைப்புலகு சார்ந்த எழுத்துக்களுக்கு ரகுநாதனின் எழுத்துக்கள் முன்னுதாரண மாக இருந்துள்ளன. கன்னிகா, முதலிரவு, பஞ்சும் பசியும் உள்ளிட்ட நாவல்கள் ரகுநாதனின் படைப்புலகு எத்தகையது என்பதைக் காட்டுகின்றன. பஞ்சும் பசியும் தமிழ் நாவல் இலக்கியத்தில் புதிய வழித்தடத்தை அமைத்தது என்று சில விமரிசகர்கள் கூறுவார்கள். தொழிலாள வர்க்கப் பிரச்சனைகளை மையப்படுத்தி உருவாகும் நாவல் முயற்சிகளுக்குப் பஞ்சும் பசியும் ஒரு மாதிரிப் படைப்பென்றும் சிலரால் கணிக்கப்பட்டது.

''சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக் கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்மையுடன் சித்தரிப்பவனே யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கியநெறி தமிழ் நாவலுலகில் பெருவழக்குப் பெற்றுள்ள தெனக் கூற முடியாது. இந்த வகையில் ரகுநாதனுடைய பஞ்சும் பசியும் ஒன்று தான் வியந்து கூறத்தக்கது'' என்று டாக்டர் க. கைலாசபதி கணித்துள்ளார். இதுவே முற்போக்கு இலக்கியப் பயில் வில் ஆழமாக பின்பற்றப்படும் கூற்றாகவும் இருந்தது. ஆனால் அக்கணிப்புப் பற்றி பின்னர் பலரும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தார்கள்.

தொ.மு.சி.யின் இலக்கிய விமரிசனம் என்ற நூல் இத்துறைசார் சிந்திப்பில் முக்கியமானது. இதனை க.நா.சு. கூட ஒத்துக்கொள்வார். அடுத்து பாரதி, புதுமைப்பித்தன் பற்றிய ரகுநாதனின் ஆய்வுகள் இவர்கள் பற்றிய விரிவான புரிதலுக்கும் ஆய்வுக்கும் தளம் அமைந் தது. இந்த வகையில் ரகுநாதன் ஒரு முன்னோடி ஆய்வாளராகவே உள்ளார். 'பாரதி காலமும் கருத்தும்' என்ற இவரது ஆய்வுநூல் பாரதியின் வாழ்க்கை, தாக்கங்கள் இவற்றோடு அவரது படைப்புக்களைத் தொடர்பு படுத்திச் சிறப்பாகப் பேசியது. இந்நூலுக்கு சாகித்ய அகாதெமியின் விருதும் கிட்டியது.

சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சமூக மாறுதல் களைப் புரிந்து கொள்ள முற்பட்டார். சோசலிச யதார்த்தவாதம் நாம் பேசியதற்குப் பதிலாக விமரிசன யதார்த்தவாதம் பேசியிருக்க வேண்டுமென்று சுயவிமரிசனப் பார்வையாக 1990களில் சில கருத்துகளை முன் வைத்தார். இன்னும் பல்வேறு புதிய சிந்தனைகளுக்கான விவாதப் புள்ளி களையும் தொட்டுக்காட்டினார். ஆனால் முற்போக்கு இடதுசாரி வட்டத்தில் ரகுநாதனின் சிந்தனைகள் முழுமையாக விவாதிக்கப்படாமல் போய்விட்டன.

ரகுநாதனின் சிந்தனைகளும் ஆய்வுக் கண்ணோட்டங்களும் சமூகச் சார்பு மிக்கதாகவே வளர்ந்து வந்தன. இதுவே அவரது படைப்பு அனுபவ வெளிக் குள்ளும் பாய்ந்து வழிநடத்தியது. ரகுநாதனின் பன்முக ஆளுமை படைப்பு ஆய்வு என வெளியிட்டு அவரை தமிழ்ச்சூழலில் நிலைநிறுத்தி உள்ளது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com