மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
போன்டியாக், மிஷிகனில் உள்ள பராசக்தி கோவிலில் 18 படிகளுடன் கூடிய ஒரு தனி சன்னிதியில் அய்யப்பன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை நடைபெற்ற நாள் ஏப்ரல் 4தான் என்றாலும் 2ஆம் தேதி முதலே அதற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கிவிட்டன. அய்யப்பனின் சிலை கேரளத்திலுள்ள வைக்கத்தில் செய்யப்பட்டது. அதைப் பின் சபரிமலைக்குக் கொண்டுபோய் ஆகம முறைப்படி சுத்தீகரண பூஜை செய்தனர். செப்டம்பர் 2003ல் மிஷிகனுக்குக் கொண்டு வரப்பட்ட விக்ரகம் கோவிலின் 'பாலாலயா' வில் வைக்கப்பட்டது.

ஏப்ரல் 2ம் தேதிமுதலே ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்றன. இதற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். 4ம் தேதியன்று தங்கம் நவரத்தினங்கள் ஆகியவற்றையும் வைத்து யந்திரபூஜை ஸ்தாபனம் செய்யப்பட்டது. 158 கலசங் களுக்கு மேல் புனிதநீர் கொண்டுவரப்பட்டு, அபிஷேகம் நடந்தது. பேரா. வெங்கட் ஹரி யந்திரம், தந்திரம், ஆகமப் பிரதிஷ்டை ஆகியவற்றின் முக்கியக் கூறுகளைப் பற்றி விளக்கினார். விழாக்குழுவின் தலைவரான N. சந்திரசூடன் பராசக்தி கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவரும் நிறுவன ருமான G. கிருஷ்ணகுமார் அவர்களை அறிமுகப்படுத்திப் பேசியதுடன் நன்றியும் கூறினார். பராசக்தி கோவிலின் தெய்வீகத் தன்மை குறித்து கிருஷ்ணகுமார் பேசினார். கோவிலில் பூஜை செய்யும் சிவகுமார், ரமேஷ் பட்டா மற்றும் ஜெயகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தற்போது 48 நாள் மண்டல பூஜை நடந்து வருகிறது.

மே மாதத்தில் குருவாயூரப்பன் மற்றும் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டைகள் நடக்கவிருக் கின்றன. பிறகு ஜூன் மாதம் வைகாசி விசாகத்திற்கு முருக பக்தர்கள் குழுமிவிடுவர். மொத்தத்தில் இங்கே வரும் மாதங்கள் ஒரே கோலகலமாகத்தான் இருக்கப் போகிறது.

© TamilOnline.com