அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
அபிநயா நடனக் குழுமம் (Abhinaya Dance Company) மார்ச் 18, 2004 அன்று 'சிவன்-பிரபஞ்சத்தின் ஆடலரசன்' (Shiva-the Cosmic Dancer) என்ற கருத்திலான ஒரு நடன நிகழ்ச்சியைத் தனது 74 மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றியது. லூயிஸ் பி. மேயர் அரங்கத்தில் நிரம்பிய காட்சியாக நடந்த இந்த நிகழ்ச்சி 1986இல் மிகுந்த வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியின் மீள் அளிப்பாகும். அபிநயாவின் கலை இயக்குநர் மைதிலி குமார் பயிற்சியளித் திருந்தார். பாபநாசம் சிவன், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோரின் பாடல் கள் நிகழ்ச்சியின் தரத்தை மிகவுயர்த்திப் பிடித்தன. ஆஷா ரமேஷ் மற்றும் இசைக் குழுவினர் பின்னணியில் இசைமழை பொழிந்தனர்.

புஷ்பாஞ்சலியோடு தொடங்கி, பஞ்சாக்ஷர ஸ்துதி, நடேச சப்தம், லிங்காஷ்டகம் ஆகியவை சிவ நடனத்தின் சிறப்பைக் கூறின. அடுத்து வந்த 'ஆனந்த தாண்டவம்' சிவபெருமானைப் பிரபஞ்சத்தின் ஆடலரசனாகச் சித்தரித்துப் போற்றியது. நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி சிவ-சக்தியின் கதையைச் சொன்னது. பின் வந்த அர்த்தநாரீஸ்வர நடனம் ஆண்-பெண் சக்திகளைக் கண்முன் காட்டிற்று. மாளவிகா குமார் தனது தனிநடனத்தில் இறைவனைக் குறித்த சிருங்கார ரசத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார்.

பிரான்சைச் சேர்ந்த டொமினிக் டெலா மேவின் 'சிவ கரணங்கள்' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். தன் நடனத்துக்கு அவர் மங்கோலியா, இந்தியா மற்றும் இந்தோனேசிய இசையைப் பின்னணியா கத் தேர்ந்தெடுத்திருந்தார் அவர். பின்னர், தக்ஷ¢ணாமூர்த்தியைக் குருவாகத் துதிக்கும் பாடலுக்கு 74 கலைஞர்களும் ஆடிய நடனத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

© TamilOnline.com