ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
ஆசியக் கலையுணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக பாலா தேவி சந்திரசேகரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஏப்ரல் 15ம் நாள் ரைடர் பல்கலைக் கழகத்தால் (லாரன்ஸ் வில், நியூஜெர்சி) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. துவக்கத்தில் ஒடிஸியின் மங்களாசரணை பரதநாட்டிய பாணியில் அவர் அமைத்திருந்தார்.

'ஜடாயு மோக்ஷம்' நாட்டிய சாஸ்திரத்தின் உள்ளார்ந்த படைப்புணர்வையும் நுட்பத் தையும் வெளிப்படுத்தியது. அவரது குரு பத்மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு ரஷ்ய நிகழ்ச்சிக்காக சைக்கொவ்ஸ்கியின் சிம்பனி இசைக்கு நடனம் அமைத்திருந்தார். அதை இங்கு இவர் ஜடாயுமோக்ஷத்தில் பயன்படுத்தினார்.

சம்பந்தர் தேவாரத்திற்கு இவர் பிடித்த அபிநயம் பக்தி ரசத்தின் முழுமையான வெளிப்பாடாக அமைந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அன்னமாச்சார்யா எழுதிய 'பிரம்மம் ஒகடே' என்ற பாடலில் இவர் எல்லாம் கடந்த ஒருமையைப் பிரதி பலித்தார். இது முத்தாய்ப்பாக அமைந்து வந்திருந்தோரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

சுதா கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com