FeTNAவின் 17வது தமிழர் திருநாள்
ஜூலை 2-5 தேதிகளில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை தனது 17வது தமிழர் விழாவை பால்டிமோரில் கொண் டாடவிருக்கிறது. இசைஞானி இளைய ராஜாவின் இசையில் அமைந்த திருவாசக இசையோடு அவர் முன்னிலையில் விழா துவங்கும். தமிழ் அமெரிக்கர்களின் இதய நாடிகளைத் தொட்ட மறைத்திரு சகத் காசுபர்இராசு அவர்களின் சிறப்புச் சொற்பொழிவும் உண்டு. இன்னும் தமிழ் இலக்கிய வானில் ஒளிவீசும் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பிரபஞ்சன், சிவகாமி IAS, வெ. இறையன்பு IAS ஆகியோரும் வருகை தருகின்றனர்.

இது போதாதென்றால் நாட்டுப்புறப் பாடல்களால் நம் மனம் கவர்ந்த புட்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதியரும் வருகின்றனர். திரைக்கலைஞர்களின் பங்கேற்பு இல்லாமல் போகுமா? நகைச் சுவை நாயகன் விவேக்கும் விருமாண்டி புகழ் அபிராமியும் சில நிகழ்ச்சிகளை வழங்கு கிறார்கள். இசைமழைக்கு ஸ்ரீனிவாஸ் மற்றும் சித்ரா. இவர்களோடு துணைதர அக்னி இசைக்குழு. கவியரங்கம் சேரன் தலைமையிலும், பட்டிமன்றம் சுந்தர ஆவுடையப்பன் தலைமையிலும் பொலிவு பெறும்.

'மருத்துவர் தொடர் கல்வி', 'தொழில் முனைவோர் அரங்கம்' மற்றும் சுயம்வர மன்றமும் உண்டு. மொத்தத்தில் இது ஒரு பெரும்விழா. அமெரிக்கா வாழ் தமிழ்க் குடும்பங்களை ஒருசேரப் பார்க்கவும், நவீன மற்றும் பாரம்பரியக் கலைகளைக் கண்டு களிக்கவும் பங்கேற்கவும் ஒரு அரிய வாய்ப்பு.

அதிக விவரங்களுக்கு:www.fetna.org


வ. செ. பாபு

© TamilOnline.com