மே 2004: வாசகர் கடிதம்
நான் தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில், பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். எனது மகன் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியுள்ளேன்.

தென்றல் இதழ்களை மிகவும் ரசித்து படித்து வருகிறேன். தென்றலின் இனிமையும், சுவையான தகவல்களும் வெகுஅருமை. ஆசிரியர் அசோகனின் கருத்துக்கள், மதுசூதனின் எழுத்தாளர் மற்றும் முன்னோடி, கேடிஸ்ரீ, மதுரபாரதியின் நேர்முகம், டாக்டர் அலர்மேலு ரிஷியின் திருத்தலங்கள், சித்ரா வைத்தீஸ்வரனின் அன்புள்ள சிநேகிதியே, மணி மு. மணிவண்ணன் குழுவினரின் நேர்காணல், நிகழ்வுகள், இளந்தென்றல், வாசகர், புழக்கடைப் பக்கங்கள் மற்றும் பல சுவையான பகுதிகள் மூலம் பல தகவல்களையும், கருத்துக்களையும் தெளிவாக அறிய முடிகிறது.

தென்றல் அளிக்கும் தெவிட்டாத விருந்து அடுத்த இதழை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது. தென்றல் இதழ் புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆற்றிவரும் தொண்டு மகத்தானது. தென்றலின் சேவை மேலும் நல்ல முறையில் தொடர எனது வாழ்த்துக்கள்.

ர. ஆனந்தன்

*****


கடந்த மூன்று மாதங்களாகத் தென்றல் படித்து வருகிறேன். தென்றல் கிடைத்தவுடன் இதயம் மலர்கிறது. பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் இலக்கியக் கட்டுரை - தமிழர் களின் பண்பாட்டையும் கற்பு நெறியையும் பண்டைய இலக்கியங்களின் மூலம் விளக்கியிருப்பது மிகவும் அருமை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களை, இப்பகுதி பண்பாடு வழுவாமல் வாழ வழிவகுக்கும் நினைவூட்டலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அவரது தொண்டு என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்.

அத்துடன் ஆசிரியர் பக்கம் ஒரு துணுக்காக இல்லாமல் சிறந்த ஆணித்தரமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்துக்களைக் கொண்ட தலையங்கமாக அமைத்துத் தர வேண்டுகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆதிரை ஜலீல். லங்காஸ்டர், கலி.

*****


டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களின் 'மகாமகவிழா' வைபவம், களிமண் பிள்ளையார், மதுரை சித்திரை திருவிழா, உ.வே. சாமிநாத ஐயரின் குறிப்பு, அனுராதா ரமணன், மருத்துவப் பக்கம் இவைகள் ஊக்கம் அளித்தன.

அந்த நாளில் தற்பொழுது உள்ள வசதிகள் கிடையாது. சுமார் 12-15 ஆயிரம் ஜனங்கள் மகாமக உற்சவத்திற்கு வருவார்கள். இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வந்ததாகக் கேள்வி. பத்திரிகையைப் பார்த்தேன். தற்பொழுது உள்ள அரசு போக்குவரத்து உணவு, பந்தோ பஸ்து முதலிய தேவைகளை நல்ல முறையில் செய்து ஒரு குறையில்லாமல் இருந்ததை குறிப்பிடாமல் இருக்க முடியாது. அரசியல் களம் போற்றத்தக்கது.

சென்னை மாநிலக்கல்லூரியில் 1953 முதல் 1919 வரை தமிழ் ஆசிரியராக உவேசா பணிபுரிந்ததாக போட்டு இருக்கிறீர்கள். எப்படி சாத்தியம்?

அட்லாண்டா ராஜன்

(இது 1913 முதல் 1919 வரை என்றிருக்க வேண்டும். தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. - ஆசிரியர்)

*****


நாடுவிட்டு நாடு வந்து நம் தாய்மொழி தமிழில் ஒரு பத்திரிகை படிப்பது என்பது நான் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று. தென்றல் இதழின் ஒவ்வொரு பக்கமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஏப்ரல் மாதம் 2004 தென்றல் இதழில் வந்த கட்டுரைகள், சிறுகதைகள் எனக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தன.

அதுவும் அனுராதா ரமணன் எனக்கு மிகவும் பிடித்த கதாசிரியர். அவருடைய எழுத்துலகப் பிரவேசம், வாழ்க்கை தற்போது அவர் செய்து வரும் தொண்டுகளை அறிந்து கொள்ள தென்றல் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த நாட்டை விட்டும் தென்றல் படிக்கும் சந்தப்பத்தை விட்டும் போகப் போவதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

தென்றல் எப்போதும் வீச என் அன்பான பிரார்த்தனைகள்.

எஸ். லட்சுமிநாராயணன், ·ப்ரிமாண்ட், கலி.

*****


நான் சமீபத்தில் மலேசியாவிலிருந்து இங்கு குடிபுகுந்துள்ளேன். உங்கள் மாத இதழைத் தவறாமல் படித்து வருகிறேன். அதிலுள்ள எல்லா அம்சங்களும் மிகவும் சிறப்பானவை.

பார்வதி பொன்னுசாமி, நேபர்வில், இல்லினாய்

*****


4 மாதமாக அடி முதல் நுனி வரை விடாமல் 'தென்றல்' வாசித்து வருகிறோம். தமிழ்நாட்டில் எத்தனையோ மாத வார இதழ்கள், வியாபார நோக்கில் தரம் குறைந்திருக்கும் இந்நேரத்தில் வளைகுடாப் பகுதியில் ஆங்கிலக் கலப்பே இல்லாமல், சினிமாவின் தாக்கம் குறைவாக அளவாக, உயர்ந்த உயர்நடையில், தெள்ளு தமிழில் தென்றலாக வீசும் உங்கள் பத்திரிகையைப் படித்து மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. பெரியண்ணன், மதுசூதனன் ஆகியோரின் சங்கத் தமிழ்ச் சுவையும், ஆன்மீகம், சமயம், கதை, கவிதை, சிறுவர் பகுதி, புதிர், கொஞ்சம் அரசியல் என்று இடம் அளித்துள்ளீர்கள். 'எங்கே போகிறோம்' கவிதையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஏக்கம். 'அமெரிக்கப் பொங்கலி'ல் பிறந்த மண்ணின் மரபு சார்ந்து வருவதும் புலனாகிறது.

சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் குடும்ப நல ஆலோசனையும் சிறந்து விளங்குகிறது. உங்கள் வாசகர்களும் சிறந்த உரைநடையில் எழுதுவது அமெரிக்க மண்ணில் இவ்வளவு உயர்ந்த தமிழா என்று பிரமிப்பு ஏற்படுகிறது. தங்கள் முயற்சி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நாங்கள் ஊர் திரும்பும்பொழுது நண்பர் மற்றும் உறவினர்களுக்குக் காட்ட 'தென்றல்' இதழ்கள் எடுத்துச் செல்வோம்.

சாவித்திரி கிருஷ்ணன், மில்பிடாஸ்

*****


சுமார் 6 மாதகாலமாக எனக்குத் தென்றல் பத்திரிகை படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகத்தான் நான் இதைக் கருதுகிறேன். உயர்ந்த கதைகள், கட்டுரைகள், கவிதை மற்றும் பேட்டி, கலைவிற்பன்னர்களின் விமர்சனம், அரசியல் செய்திகள் போன்ற வெகு உன்னதமான விஷயங்கள் அடங்கியது தென்றல். 38 ஆண்டுகளாக இந்நாட்டில் வாழும் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

கணேசன் பாலா, சிகாகோ

*****


ஏப்ரல் மாதத் தென்றல் வாசித்தேன். சுவையாக இருந்தது. வழிகாட்டல், அறிவுறுத்தல், செய்தி களைத் திரித்துக் கூறாது சமூகத்தை வடிவமைத்தல் என்ற இதழியல் அறத்தைத் தென்றல் நடைமுறையாக்குகிறது. வாழ்க்கையின் அதிர்ச்சிகளைத் தாங்கவேண்டும், பிரச்சனைகளை நேர்மறையாக அணுகவேண்டும், அவற்றிலிருக்கும் பாடங்களைக் கற்க வேண்டும், அதன் அடிப்படையில் நம் எண்ணங்களையும் செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்று 'அன்புள்ள சிநேகிதியே' கூறியிருக்கிறது. சரியான எண்ணம்தான், அதைக் கடைப்பிடிக்கத்தான் அதிக முயற்சி தேவைப்படுகிறது.

நம்மில் பலருக்கு உ.வே.சாமிநாத ஐயரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. தமிழிலக்கியத்திற்கு அவர் செய்த விலைமதிப்பற்ற தொண்டு பற்றிய செய்திகளைத் தென்றல் தந்திருக்கிறது.

பேரா. என்.பி. மாணிக்கம், சன்னிவேல்

© TamilOnline.com