ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்...
செக்ஸ் என்பது வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி இலைமறை காயாய் இருந்தது. இப்போது பகிரங்கமாகிவிட்டது. இதனால் கலாசாரச் சீரழிவு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டியது எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் சமூகத்தின் கடமை. இதைச் செய்ய நாம் தவறிக் கொண்டிருக்கிறோம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தக் கடமை சரியாகச் செய்யப்படுகிறது. இங்கே வியாபாரம் என்ற பெயரில் தொலைக்காட்சிகளும் சில பத்திரிகைகளும் சமூகத்தைச் சீரழிக்கின்றன. இதை இப்போதே தடுக்க வேண்டும். சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் தமிழ்நாட்டில் இப்போது எந்தப் பாடல்கள் பிரபலமாக இருக்கின்றன என்று கேட்டார்கள். நான் 'மன்மதராசா' பாட்டையும், 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா' பாட்டையும் சொன்னேன். உடனே அவர்கள் 'மெதுவாப் பேசுங்க. சிங்கப்பூரில் இப்படிப்பட்ட பாடல்களும் காட்சிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன' என்றார்கள். கூடவே 'கல்யாணம் கட்டி கிட்டு ஏன் ஓடி போகணும்?' என்ற கேள்வி¨யும் கேட்டார்கள். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் 'தமிழ் ஒழிக' என்று கூடப் பாட்டு எழுதிவிடுவார்கள் போலிருக்கிறது.

கவிஞர் முத்துலிங்கம், முன்னாள் திரைப்படப் பாடலாசிரியர், வார இதழ் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில்...

*****


நடுவர்களின் தவறான தீர்ப்பு மற்றும் டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது தோல்விக்கு காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. சரியாக ரன் சேர்க்காததும், பாகிஸ்தானின் ரன் குவிப்பை முதல் இன்னிங்சில் கட்டுப்படுத்தத் தவறியதும் தான் தோல்விக்குக் காரணம்.

ராகுல் திராவிட், லாகூரில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்டில் தோல்வி குறித்து பத்திரிகையாளர்களிடம்...

*****


தமிழிசைச் சங்கத்தை நிறுவி மீண்டும் தமிழகத்தில் தமிழிசையை மலரச் செய்தவர் ராஜா அண்ணாமலை செட்டியார். 60 ஆண்டுக் காலம் தமிழிசையின் பழமையையும், மேன்மையையும் பண்ணாராய்ச்சி மாநாடுகளை நடத்தி நம்முடைய இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டிய பணியை நாடு போற்றக் கடமைப்பட்டுள்ளது.

நாலாயிர திவ்வியப் பிரபந்த ஆராய்ச்சிகளை நிகழ்த்தியது மட்டுமன்றி இசைய ரங்குகள் நிகழ்த்தியும், தமிழிசைக் கல்லூரியில் மாணவர்களைப் பயிற்றுவித்து, பட்டயமளித்து, போட்டிகளில் பரிசுகள் வழங்கியும் தமிழிசை பரவத் தொண்டாற்றியுள்ளது தமிழிசைச் சங்கம்.

நமது இசை, நாடகம், நாட்டியம் போன்ற துறைகளை உலகமயமாக்க வேண்டும். இயல், இசை, ஆடல், நாடகம் ஆகிய பல கூறுகள் இன்று அறிவியலின் துணையுடனும், மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி, இணைய தளங்களின் உதவியுடனும் உலகின் பல்வேறு இடங்களில் உள்ள மக்களைச் சென்றடையச் செய்வதைக் குறிக்கோளாக கொண்டு பல்கலைக் கழகங்கள் செயல்படவேண்டும். சர்வதேச அளவில் தமிழிசையின் தொன்மையை ஆங்கிலத்தில் மட்டுமின்றி உலக மொழிகளிலும், இந்தியாவின் ஏனைய மாநில மொழிகளிலும் அறியும்படிச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

தியாகராஜன், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழ் இசைக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில்...

*****


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், சேலம் அரசினர் கலைக்கல்லூரி ஆசிரியர் பணிக்கு ஆணை வந்தது. அதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தரிடமும் எனது குருநாதர் தொ.பொ.மீ. அவர்களிடமும் காண்பித்து ஆசி பெற்று வருவதற்காகப் போனேன். அப்போது அங்கே "பயிற்று மொழி ஆங்கிலமா? தமிழா?'' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. 'தமிழால் முடியாது; கலைச் சொற்கள் இல்லை; அறிவியலை தமிழில் சொல்லிக் கொடுக்கும் மனநிலை ஆசிரியர்களிடம் இல்லை; படிக்கும் மனநிலை மாணவர்களிடம் இல்லை' இந்தவிதமாக எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் ஒருவர், 'தமிழை பயிற்றுமொழியாக்குவது எதிர்காலச் சந்ததியினரை குழிதோண்டிப் புதைக்கிற முயற்சி' என்று சொன்னார். என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடலே எரிந்துவிடும்போல் இருந்தது. நிதானமிழந்த நிலையில் எழுந்து நின்றுவிட்டேன். பேராசிரியர் இதைப் பார்த்து பேச்சை நிறுத்திவிட்டார். நான் மேடைக்குச் சென்றேன். ''எத்தகைய அறிவியல், தொழில்நுட்பச் செய்திகளையும் தமிழால் தர முடியும். எப்படி என்று கேட்பவர்களுக்கு வாய்ச்சொல்லால் விளக்கம் தராமல் செயல்மூலம் நிறுவுவதையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு, எனக்குக் கிடைத்துள்ள கல்லூரி ஆசிரியர் பணியை இப்போதே விட்டுவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு மேடையிலேயே பணிக்கான ஆணையைக் கிழித்துப் போட்டேன்.

மணவை முஸ்தபா, யுனெஸ்கோ கூரியர் நிர்வாகப் பதிப்பாசிரியர், ஒரு பேட்டியில்...

*****


இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு பலம் பெற்று வருகிறது. நான் பாகிஸ்தான் செல்லும் திட்டம் இல்லை. இருப்பினும் அமைதிப் பேச்சுக்காக பாகிஸ்தான் அழைத்தால் நான் அங்கு செல்லத் தயாராக உள்ளேன்.

அமைதி முயற்சிகள் தொடங்கிய பின்னர் இரு நாடுகளிடையே உறவு பலப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் பதற்றம் குறைந்துள்ளது. மக்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளதை பாகிஸ்தான் மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

அமைதிப் பணிகளில் இருநாடுகளும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் பாகிஸ்தானிடம் எந்த முரண்பாடும் இல்லை.

ஜார்ஜ் பெர்னாண்டஸ், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர், செய்தியாளர்களிடம்...

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com