ஒரு மருத்துவரின் பார்வையில்
இது சென்னையில் ஒரு சங்கீத சபையா அல்லது மும்பை ஷண்முகானந்த சபையா என்று அதிசயப்பட வேண்டிய காட்சி. நாம் இருப்பதோ அமெரிக்கா. ஊர் கிளீவ்லாந்து. இந்த ஊரிலே 1800 ஆம் வருடத்தில் ஜனத்தொகை 7! இன்று இங்கு வந்திருந்த இந்தியர்கள் எண்ணிக்கை, அதுவும் சங்கீத ரசிகர் கூட்டம் மட்டும் ஆயிரத்துக்கு மேலே! எல்லோரும் தியாகராஜ ஆராதனைக்காக வந்தவர்கள். அநேகம் பேர் வருடாவருடம் வருபவர்கள். இந்த வருடம் முதல் தடவையாக வந்தவர்கள் நிறைய.

இந்த ஆராதனை 26 வருடங்களாக விடாமல் நடந்து வருகிறது. ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர்களான மிருதங்க வித்வான் ராமநாதபுரம் ராகவன், டொராண்டோ வெங்கடராமன், கிளீவ்லாந்து பாலு, கிளீவ்லாந்துக்கும் இந்தியாவுக்கும் ஓடிக்கொண்டிருக்கும் வி.வி.சுந்தரம் எல்லோரும் இந்த வருடம் அங்கு இருந்தார்கள். கிளீவ்லண்ட் ஸ்டேட் யுனிவர்ஸிடி பேராசிரியராக இருந்த டட்டில் அவர்கள் இல்லாததது குறைதான். சின்னதாக ஆரம்பித்து இப்போது தனி முக்கியத்துவம் பெற்றுவிட்ட விழா. இந்தியாவுக்கு வெளியே நடக்கும் சங்கீத விழாக்களில் இதுதான் சிறந்தது என்று பெயர் பெற்றுவிட்ட விழா. நடத்துவோருக்கும் தொண்டர்களுக்கும் அவசியம் நன்றி சொல்லியாகவேண்டும்.

ஏப்ரல் 10ஆம் தேதி காலை 7 மணிக்கு ஷேக் ஸ¥பானி மஹபூப் குழுவினரின் மங்கள நாதஸ்வர இசையுடன் ஆரம்பித்து ஒன்பது நாட்கள் இசை விருந்து. நான் இருந்து கேட்டது இரண்டுநாள்தான். தவிர என் சங்கீத ஞானம் ரொம்ப குறைவு. சமைக்க தெரியாது... குறை சொல்லத் தெரியும்! சங்கீத விமர்சனம் செய்யாமல் இந்த விழாவின் சில அனுபவங்களை மட்டும் சொல்கிறேன். என் மனதைக் கவர்ந்த சில சிறப்பு அம்சங்கள். வருடா வருடம் இயேசு உயிர்ந்தெழுந்த தினமான புனித வெள்ளி வரும் அந்த வாரத்தில் நடப்பதால் முன்கூட்டியே ஏற்பாடு செய்து போய்வருவது சுலபமாகிவிட்டது.

எப்படி கிளீவ்லாந்து வாசிகள் வருடாவருடம் இவ்வளவு உயர்வாகத் தங்கள் மனத்தையும் இல்லத்தையும் திறந்து அன்புடன் வரவேற்று, செவிக்கும் வாய்க்கும் உணவூட்டுகிறார்கள் என்பது ஒரு அதிசயம். ஒருநாள் காலையும் மதியமும் வந்தவர்கள் எல்லோருக்கும் உணவு. அது இந்த ஊராரின் ஒற்றுமை உணர்ச்சி மற்றும் சேவை மனப்பான்மையின் வெளிப்பாடு.

அடுத்த அம்சம் காலந்தவறாமை. சரியான நேரத்துக்கு வந்து சரியான நேரத்துக்கு முடிக்காமல் இழுத்து அடிப்பவர்கள் மேல் 'சுந்தர மாமா'வுக்குப் (வி.வி. சுந்தரம்) பொறுமை கிடையாது. மஹாவித்வானாலும் சரி எட்டு மணி என்றால் எட்டு மணிக்கு இருக்கவேண்டும். இந்திய கால அட்டவணை இங்கே நடக்காது. சின்ன விஷயம்... பெரிய சாதனை.

இந்த வருட போட்டியில் எல்லோருடைய மனத்தையும் செவியையும் கவர்ந்தது 12 வயது சிறுவன் கல்யாண் செய்த சீழ்க்கையடிக் கச்சேரி. இச்சிறுவனுக்கு ஏதோ ஒரு தசை எலும்பு வியாதி. நடக்க முடியவில்லை. சுழற்று வண்டியில் அமர்ந்திருந்தான். ராகக்கட்டு தான் என்ன அழகு, என்ன அழகு? சில இடங்களில் புல்லாங்குழல் இசை போலிருந்தது. பல பேர் கண்ணில் நீர் துளும்பியது.

சங்கீத அபிமானிகளுக்கு ஒரு வேண்டு கோள். இதுவரை எல்லாமே இலவச மாகவே நடந்து வந்தது. இந்த வருடம் சில கச்சேரிகளுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வைக்க வேண்டியிருந்தது. இவ்வளவு சிறந்த விழா தொடர்ந்து நடக்க வேண்டுமானால் ரசிகர்கள் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே அடுத்த வருடமும் வாருங்கள். கேட்டு ரசியுங்கள். அத்துடன் உங்களால் முடிந்த காணிக் கையை ஆராதனைக் குழுவுக்கு அனுப் பினால் கர்நாடக சங்கீதம் வளரும். நம் குழந்தைகளுக்கும் பின்னாள் பிரஜைகளுக்கும் ஊக்கமளிக்கும்.

டாக்டர் பாலு ஆத்ரேயா

*****


பாட்டுப் போட்டிகள்

முப்பது டாலர் கட்டணம் இருந்தாலும் போட்டியில் பங்குகொள்ளப் கூட்டமிருந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்குச் சரியாகப் போட்டிகள் துவங்கின. போட்டியாளர்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தனர்:

பகுதி பங்குபெற்றோர் எண்ணிக்கை
கருவி இசை 50

வாய்ப்பாட்டு:

9 வயதுவரை 32
9 - 14 துவக்கநிலை
பெண்கள் 52
ஆண்கள் 24
9 - 14
உயர்நிலை 25
16 - 25
உயர்நிலை 16
மிக உயர்நிலை 8

சுப்புலட்சுமி அம்மாள், அஷோக் ரமணி (சான் டியகோ), திருச்சூர் ராமச் சந்திரன், சஞ்சய் சுப்பிரமணியம், மாலா சந்திரசேகர், சாருமதி ராமச்சந்திரன் ஆகியோர் இதற்கு நடுவர்களாகப் பணியாற்றவர்களில் சிலர். தவிர பிரபல வித்வான்களான டி.என். கிருஷ்ணன், ராஜம் ஐயர் ஆகியோர் வந்து அரங்கத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.

10ஆம் தேதி சுமார் 100 பேர் ஒருசேரப் பஞ்சரத்னக் கிருதியைப் பாடியது கண்கொள்ளாக் காட்சி. அதைத் தொடர்ந்து சுமார் 50 கலைஞர்கள் தனித்தனியே தியாகராஜர் கீர்த்தனை களைப் பாடினர்.

அனுராதா சுரேஷ்.

© TamilOnline.com