சிக்கல்
பாலைத் தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் கடைந்தெடுக்கப் படுவது தெரிந்த விஷயம். வெண்ணெய் திரண்டு லிங்கவடிவாகி நவநீதேஸ்வரர் ஆன கதை தெரியுமா? நவநீதம் என்றால் வெண்ணெய். இதுபற்றித் தெரிந்து கொள்ள நாகப்பட்டினம் போகவேண்டும். அங்கிருந்து 3 மைல் தொலைவிலுள்ள ஊர் சிக்கல். பிறவிப் பெருங்கடலில் சிக்கித் தவிப்போரை அச்சிக்கலிலிருந்து மீட்டுக் கரை சேர்க்கும் இறைவன் நவநீதேஸ்வரர் எழுந்தருளியுள்ள தலம். சிக்கல் சிங்காரவேலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்களுக்கு இங்குள்ள நவநீதேஸ்வரர் பற்றித் தெரியுமா என்பது தெரியாது.

பெயர் வரலாறு

வானுலகில் கேட்பவருக்குக் கேட்டதெல்லாம் கொடுப்பவை இரண்டு. ஒன்று கற்பக விருட்சம் மற்றொன்று காமதேனு. ஒருமுறை காமதேனு தெரியாமல் செய்த ஒரு சிறு பிழைக்குச் சாபம் வந்து சேர்ந்தது. பசுவின் முகம் போய்ப் புலியின் முகமாயிற்று. அறியாமற்செய்த தவறு என்பதால் இறைவனிடமே மன்னிப்புக் கோர அவனருளால் பரிகாரம் கூறப்பட்டது. அதன்படிச் சிக்கலுக்கு வந்து அங்குள்ள திருக்குளத்தில் நீராடி மல்லிகை மலர் கொண்டு இறைவனை வழிபட்டுவர, புலிமுகம் மறைந்து பசுமுகத்தைத் திரும்பப் பெற்றது. இக்குளத்தில் காமதேனு நீராடிய காலத்தில் அதன் மடியிலிருந்து சுரந்த பால் பெருகிக் குளமே பாற்குளமாயிற்று. இறைவனால் அங்கு அனுப்பி வைக்கப் பட்ட வசிஷ்டர், குளத்தில் நிரம்பியிருந்த பால் வெண்ணையாய் வியாபித்து விட்டதைக் கண்டு அதனை ஒன்றாய்த் திரட்டி சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்து லிங்கத்தை அவ்விடத் தினின்றும் பெயர்த்தெடுக்க முயன்றபோது அவரது முயற்சி கைகூடவில்லை. இறைவன் அவ்விடத்திலேயே 'சிக்'கெனப் பிடித்துக் கொண்டு கல் போல் அசையாது ஊன்றி இருந்துவிடவே இவ்வூர் 'சிக்கல்' என்ற பெயர் பெற்றது. அன்று முதல் லிங்கமும் நவநீதேஸ்வரர் ஆனார். தமிழில் வெண்ணெய்நாதர் என்று அழைப்பர். இத்தலத்து இறைவனின் அருவுருவத் திருமேனி தோன்றிய வரலாறும் இதுவாகும்.

இறைவியின் பெயர் "சத்தியாயதாட்சி" என்பதாகும். இத்தேவியைத் தேவாரத்தில் 'வேளோன்கண்ணி' என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அமாவாசை அன்றும் பவுர்ணமி அன்றும் லிங்கத்தின் மீது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்தால் வெண்ணெய் உருகுவதுபோல் பக்தர்களின் துன்பங்களும் மறையும் என்று நம்பப்படுகின்றது. காமதேனு மல்லிகை மலரால் அருச்சித்ததால் இத்தலத்தின் விருட்சம் மல்லிகை.

சிங்காரவேலர்

சூரபதுமனை அழிக்க உமையம்மை தன்னுடைய சக்தியை வேலாக வழங்கிய தலம் இதுவாகும். அந்த வேலைக்கொண்டே முருகப் பெருமான் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார். சிக்கலில் மயில் வாஹனத்தில் வள்ளி தெய்வானையுடன் சிங்காரவேலனாய் எழுந்தருளியிருக் கின்றான். சூரனை அழித்த இவ்வேலனைத் திருஞானசம்பந்தரும் "ஆயிரம் கோடி காமர் அழகெலாந் திரண்டொன்றாகி மேயின எனினும் செவ்வேள் விமலனாஞ் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்காற்றாது" என்று பாடிப் பரவசப் படுகின்றார்.

அருணகிரியாரும் தம் திருப்புகழில்

அழகிய சிக்கல் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே

என்று சூரனை வதைத்த சிறப்பினைப் பாராட்டியுள்ளார்.

பிரம்மோத்சவம், தெப்பத்திருவிழா மற்றும் சூர சம்ஹாரம் ஆகியவை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். சூரசம்ஹாரத்திருவிழாவில் அசுரனை அழிக்க அம்மையிடம் வேல் வாங்கிக் கொண்டு சூரனிடம் வரும்போது அவன் மீது படிந்திருக்கும் வியர்வைத் துளிகளை இன்றைக்கும் விழா நாளிலே காண முடிகிறது என்பது வியப்பிற்குரிய ஒரு செய்தியாகும். தங்க ஆட்டுக்கிடா வாஹனம், தங்க மயில் வாஹனம் மற்றும் வெள்ளி ரிஷப வாஹனம் ஆகியவற்றில் சிங்கார வேலன் எழுந்தருளுவது சூர சம்ஹாரத்திருவிழாவின் கண்கொள்ளாக் காட்சியாகும்.

தொன்மை வாய்ந்த கோயில் இது என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலுக்கு கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோச்செங்கட்சோழன் மாடங்கள் எழுப்பி அணி செய்தான் என்பதைத் திருமங்கை ஆழ்வார் "எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது செய்த உலகாண்ட திருக்குலத்து வளச் சோழன்" என்று புகழ்ந்து பாடியுள்ளார். கோயிலின் ஆரம்ப காலத்தில் பல செட்டியார் குடும்பங்களே அறங்காவலர்களாய் இருந்து திருப்பணி களைச் செய்து வந்திருக்கின்றனர். இன்று தமிழ்நாடு இந்துமத அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்தில் உள்ளது இக்கோயில்.

எங்கும் காணக் கிடைக்காத ஓர் அரிய செய்தி - தென்னாட்டுக் கோயில்கள் எதிலுமே காணக் கிடைக்காத ஒன்று இக்கோயிலின் மிகப் பெரிய கலியாண மண்டபம். 4000 பேர் உட்காரக் கூடிய பிரம்மாண்டமான அழகிய மண்டபம். இதில் திருமணங்கள் செய்வதற்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கித் திண்டாடும் அன்பர்கள் சிக்கல் சென்று வெண்ணெய் நாதரையும், சிங்கார வேலனையும் வழிபட்டுச் சிக்கலினின்றும் விடுபடலாமே.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com