விபரீத விளையாட்டு
சலனத்திற்கும் சபலத்திற்கும் எளிதில் தம் நெஞ்சில் இடம் கொடுத்து விட்டுப் பிறகு அவதிப்படுகிறவரல்ல வாசுதேவன். வயதும் நாற்பதைத் தாண்டி விட்டது. குழந்தை குட்டிகள், மனைவி என்ற குடும்பப் பொறுப்பு ஒரு பக்கம். அலுவலகத்தின் கடமைப் பொறுப்பு மறு பக்கம். இதற்கெல்லாம் நேரமும் அவருக்கில்லை.

ஆனாலும்...

வழக்கமாக ஆண்கள் தங்கள் தொழில் வெற்றியின் மேலும், காசு பணத்தின் மேலும் சமூக அந்தஸ்தின் மேலும் காதல் கொள்ளத் தொடங்கும் இந்தப் பருவத்தில், அது எப்படியோ திடீரென்று அவரை ஆட்டிப் படைக்க முன்வந்து விட்டது. அவரே அதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விபரீதமான அந்த விந்தை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குத் தம் இதயத்தில் இடம் கொடுக்க நேரும் என்று அவர் எதிர் பார்க்கவே இல்லை.

என்ன செய்வது?...

ஒரு மாதத்துக்கு முன்பு யாராவது வாசுதேவனிடம் வந்து, "உங்களிடம் யமுனா மூர்த்தி பயித்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளுகிறாள்'' என்றோ, ''நீங்களும் அதற்குத் தாரளமாக இடம் கொடுத்து வருகிறீர்கள்'' என்றோ சொல்லியிருந்தால், ''அப்படிச் சொல்லியவருக்கே பயித்தியம் பிடித்திருக்கிறது'' என்று ஓங்கி அடித்திருப்பார் அவர். ஆனால் இப்போது அது முடியாது; அவரால் ஏதும் பதில் சொல்லவே முடியாது. 'உண்டு' என்று ஒப்புக் கொள்ளவும் முடியாது; 'இல்லை' என்று தள்ளி விடவும் முடியாது.

இப்படி ஓர் இரண்டுங்கெட்டான் நிலை...

இதில் ஒரு முக்கியமான தொல்லை - அபவாதத்துக்குரிய தொல்லை - என்னவென்றால் அவள் வெறும் யமுனாவாகவோ, இல்லை குமாரி அல்லது குமரி யமுனாவாகவோ இல்லாததுதான்! குமரிப் பருவத்தைக் கடந்துவிடாதவள் போல் அவள் தோற்றமளித்தாலும், உண்மையில் முப்பது வயதைக் கடந்துவிட்ட திருமதி யமுனா மூர்த்தி அவள். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவள். வாய்க்கு வாய் தன் கணவரின் அருமை பெருமைகளைச் சொல்லிப் பூரித்துப் போகும் சுபாவம் கொண்டவள். வாசுதேவன் மட்டும் இந்த விஷயத்தில் இளைத்தவரா என்ன? அவளுடைய பதிபக்திக்கு அணுவளவும் குறைந்ததல்ல வாசுதேவனின் சதிபக்தி!

சிக்கல் இங்கேதான் இருந்து தொலைத்தது...

கம்பெனிக்குப் புறப்படுவதற்காக அவசரம் அவசரமாகக் கண்ணாடிக்கு முன் நின்று தலை வாரிக் கொண்டார் வாசு. வயதை மறைக்கும் இளமைச் செழிப்பு அவர் முகத்தில் தவழ்ந்தாலும், 'அப்படியொன்றும் அவர் வயதுப் பிள்ளை இல்லை' என்று ரகசியமாய்ச் சொல்வது போல், வயதைக் காட்டும் வெள்ளிக் கோடுகளும் அங்கங்கே கிராப்புத் தலையில் இழையோடித்தான் இருந்தன. கண்கள் மட்டும் ஒளிசுடரும் கூர்மையான கண்கள். மேல் பரப்பை ஊடுருவிக் கொண்டு உள்ளே ஆழத்தின் ஆழத்திற்குச் சென்று, உள்ளதை மீன் பிடித்து வெளியே கொண்டு வரும் தூண்டில்முள் கண்கள். இந்தக் கண்களுக்கே சவால் விட்டுக் கொண்டு, தன் இதயத்தின் அடித்தளத்தில் துள்ளும் மீன், என்ன மீன் என்பதைக் காட்டாமல் இருந்ததுதான் யமுனாவின் சாதனை.

இதுதான் வாசுதேவனுக்கு ஏற்பட்டிருந்த சோதனை.

'எப்படியாவது இன்றைக்கு - ஆம் இன்றைக்கே, அவளிடம் இதை ஒளிவு மறைவுக்கிடமில்லாமல் கேட்டுவிட வேண்டியதுதான். சுற்றி வளைக்காமல் மனந்திறந்து வாய்விட்டுப் பேசுவது தப்பில்லை' - அவர் முடிவு கட்டிக் கொண்டார்.

ஏற்கெனவே இரண்டு மூன்று முறை அவளிடம் கேட்பதற்கு முயற்சி செய்து அதில் தோற்றுப் போனவர் அவர். ''யமுனா, உன்னிடம் ஒரு முக்கியமான விஷயமாய்ப் பேசவேண்டும்; உன் வேலைகளை முடித்துவிட்டு உனக்கு நேரமிருக்கும்போது வா'' என்பார். ''கம்பெனி விஷயந்தானே? இப்போதே பேசுவோம்!'' என்று ஒன்றுந் தெரியாதவள்போல் தன் பல் தெரியச் சிரிப்பாள் யமுனா. அப்போது அவள் விழிகளில் துள்ளும் கெண்டை மீன்களும் அவளோடு சேர்ந்து சிரிப்பது அவருக்குத் தெரியும். அதற்குமேல் அவரால் அநத்ப் பேச்சைத் தொடர முயாது. அவளுக்குத் தம்மையும் மீறி இடம் கொடுத்துவிட்டது போல் உதடைக் கடித்துக் கொள்வார்.

அவளோ இன்னும் சற்று உற்சாகத்தோடு துள்ளல் நடைபோட்டுக் கொண்டு திரும்பிச் செல்வாள்..

இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு, அவர்களுக்குள் இப்படி நடந்து வந்தாலும், கம்பெனியில் அவருக்குக் கீழே வேலை செய்பவர்கள் எல்லாரும் தங்கள் மானேஜர் யமுனாவிடம் தம் தலையையோ, நெஞ்சையோ இரண்டையுமே பறிகொடுத்து விட்டதாகத்தான் தங்களுக்குள் ரகசியம் பேசிக் கொண்டார்கள். நெருப்பில்லாமல் புகையாது என்பது நடைமுறைத் தத்துவம்! அதை ஊதி ஊதி அவர்கள் தங்களுக்குள் புகை மண்டலத்தை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கம்பெனியின் தலைவராக அவரும், அவருடைய செயலாளராக அவளும் இருந்ததால், வெளிப்படையாகப் பேச அவர்களுக்குத் துணிவில்லை என்பதுதான் விஷயம்.

என்றாலும் தங்களைச் சுற்றிலும் இலே சான புகை மண்டலம் சூழ்ந்து வருவதை அவரால் அறவே புறக்கணித்து விடவும் முடியவில்லை.

'எப்படியாவது இன்றைக்குக் கேட்டுவிட வேண்டியதுதான்' என்ற முடிவோடு, தம் காரின் கதவைத் திறந்து கொண்டு முன்னால் உட்கார்ந்தார். 'ஸ்டியரிங்'கை இறுகப் பற்றினார். குழந்தைகள் வாசலுக்கு ஓடிவந்து 'டா டா!' சொல்லி விடை கொடுத்தன. மத்தியானத்துக்கு வர வேண்டிய சிற்றுண்டியைக் கொண்டு வந்து காருக்குள் வைத்தாள் மனைவி. காரைக் கிளப்பி விரட்டிக் கொண்டு கம்பெனிக்கு வந்து சேர்ந்தார் வாசுதேவன்.

பம்பாயிலிருந்த ஒரு மருந்துக் கம்பெனியின் சென்னைக்கிளைக்கு அவர் மானேஜர். திறமை, நாணயம், லாபகரமாக நடத்தும் ஆற்றல் இவ்வளவும் அவரிடமிருந்ததால் பம்பாய்க்காரர்கள் சென்னைப் பொறுப்பு முழுவதையுமே அவரிடம் விட்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களுமாக அவரிடம் வேலை பார்த்தவர்கள் முப்பது முப்பத்தைந்து பேர். அவர்களில் ஒருத்தியான அவருடைய 'ஸ்டெனோ'தான் யமுனாமூர்த்தி. கம்பெனி சம்பந்தமான பல அந்தரங்கக் கடிதப் போக்குவரத்துக்களையெல்லாம் யமுனாவைக் கொண்டு தான் அவர் கவனித்து வந்தார்.

பத்து மணிக்கு மேலாகிவிட்டதால் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கொள்முதல், ஸ்டாக் விற்பனை ஆகிய பகுதிகளையெல்லாம் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்த நிர்வாகப் பகுதிக்குச் சென்றார். வரிசையாக இருந்த மாடி அறைகளில் விசாலமான கடைசி அறை அவருடையது. அதை மரத்தட்டியால் இரண்டாகத் தடுத்து, அதன் ஒருபுறத்தில் தலைமைக் கணக்கர் தயாநிதியும், ஸ்டெனோ யமுனாமூர்த்தியும் வேலை பார்த்து வந்தார்கள். தயாநிதிக்கு வயது, வேலை, அநுபவம் எல்லாமே அதிகம். ஐம்பந்தைந்து வயதைக் கடந்த பிறகும் அவர் இங்கே உழைத்து வந்தார். யமுனா தன் மானேஜருக்கான வேலைகளைக் கவனித்த நேரம் போக, கணக்கு வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு கவனித்து வந்தாள். அவளிடமிருந்த இந்த ஆர்வமும், உழைப்பாற்றலுந்தான் வாசு தேவனின் மதிப்பை அவளுக்குத் தேடித் தந்தன. நானூறு ரூபாய்ச் சம்பளத்தைப் பெரிதாக மதிக்க வேண்டிய நிலையில்தான் அவள் அங்கு வேலை செய்தாள் என்றாலும், சம்பளத்தையும் மீறிய ஒரு மன நிறைவு அவளுக்கு அந்த வேலை கொடுத்திருக்க வேண்டும்.

பாராட்டுக்குரியவர்களைத் தட்டிக் கொடுப்பதும், வழிப்படுத்த வேண்டியவர்களை யோசனை கூறி வழிப்படுத்துவதும், கண்டிக்க வேண்டியவர்களை அன்போடு கண்டித்துத் திருத்துவதும் அவருக்கு அந்த நிர்வாகத் துறையில் கைவந்த பாடங்கள். இதுவரையில் நிர்வாக இயந்திரம் பெரிய சிக்கல் ஏதும் இல்லாமல்தான் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது புதிதாக ஏற்பட்ட சிக்கல் அவர் இதயமாகிய இயந்திரத்தைப் பொறுத்தது. அது அவராகவே ஏற்படுத்திக் கொண்ட சிக்கலா? - அல்லது அவரிடம் ஏற்படுத்தப்பட்ட சிக்கலா? - புரியவில்லை அவருக்கு.

மாடி வராந்தாவில் அவருடைய 'பூட்ஸ்' களின் சத்தம் கேட்டவுடன், தலைமைக் கணக்கர் தயாநிதியின் அறைக் கதவு திறந்து கொண்டது. கையில் அன்று வந்த தபால்களுடன் தயராகக் கதவுக்கு வெளியில் வந்து நின்று கொண்டு புன்னகை பூத்தாள் யமுனா மூர்த்தி. அவள் தலையில் மலர்ந்திருந்த ஒரு கூடை மல்லிகையும் அவளோடு ஒன்றாய்ச் சேர்ந்து சிரிப்பது போலத் தோன்றியது. மயில் கழுத்து வண்ணத்தில் ஜரிகைப் பட்டும், அதே நிறத்தில் சோளியுமாய் அவள் வந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் சிவந்திருந்தது. முகப்பூச்சின் ரோஜா வண்ணத்தில் கண்களுக்கு அவள் தீட்டிக் கொண்டு வந்திருந்த மை சற்று எடுப்பாகவே தென்பட்டது.

ஒரு கணம் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து ஒரு புன்னகையைப் பதிலுக்கு உதிர்த்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தார் வாசுதேவன். அவள் ஒன்றும் அவருக்குப் புதியவள் அல்ல. இரண்டு ஆண்டுகளாகப் பழகியவள். ஆனால், ஏனோ சில நாட்களாக மட்டும் அவருக்கு அவள் புதியவளாகக் காட்சியளித்தாள். அலுவலக அந்தரங்கத்தைத் தவிர வேறு எந்த அந்தரங்கமும் இதற்கு முன்பு அவர்களுக்குள் இருந்ததில்லை. ஆனால், இப்போது ஏனோ அப்படி ஓர் அந்தரங்கம் குறுக்கே தளிர்விட்டிருப்பது போல் தோன்றியது.

வெறும் 'ஸ்டெனோ'வாக அழகும் பள பளப்பும் கொண்ட 'டைப்' இயந்திரத்துக்கு ஒப்பான பொருளாக இருந்தாள். இப்போது உடலும் உயிர்த்துடிப்புமாய் எப்படி மாறினாள்?

'இவள் வெறும் யமுனா அல்ல; யமுனா மூர்த்தி அந்த மூர்த்தி எங்கோ தொலை தூரத்தில் மைசூரில் இவளைப் போலவே வேலை பார்த்து வருகிறார். இவளுக்கென்று தனியான பெயரே இருக்க முடியாது. இவள் 'திருமதி மூர்த்திதான்' என்ற நினைவுகளை வலிந்து வரவழைத்துக் கொள்ள முயன்றார் வாசுதேவன்.

அவர் பின்னாலேயே அறைக்குள் நுழைந்து விசிறியைப் போட்டுவிட்டு, அவருக்கு வலப்புறத்திலிருந்த நாற்காலியில் சற்று நிமிர்ந்தாற்போல் உட்கார்ந்தாள் யமுனா. பின்புறம் கூந்தலில் தொங்கிய மல்லிகைச் சரம் கழுத்தின் ஓரமாக இருந்து வெளியே எட்டிப் பார்த்தது. கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டு, நாற்காலிக்கு வந்த வாசுதேவன், உடனடியாக அவள் கொண்டு வந்த வேலையில் முழுகலானார்.

கையில் நீலப் பென்சிலோடு கடிதங்களையெல்லாம் ஒரு கண்ணோட்டம் விட்டார். முக்கியமான வரிகளில் பென்சில் கோடுகள் விழுந்தன. நேரடியாக அவர் பதில் எழுத வேண்டிய கடிதங்களை மட்டும் பொறுக்கி எடுத்துக் கொண்டு பதில் சொல்லத் தொடங்கினார் வாசுதேவன். சுருக்கெழுத்து நோட்டில் பென்சில் பிடித்த யமுனாவின் விரல்கள் சுழன்று சுழன்று வந்தன. அரை மணி நேரத்தில் பதில்களை முடித்துவிட்டு, அவளே பதில் எழுத வேண்டிய கடிதங்களுக்குக் குறிப்பும் கொடுத்தார்.

இடையில் ஓரிரண்டு பதில்களின்போது அவருக்குச் சொற்கள் ஓரளவு தடுமாறின. காரணம், அவள் தன் வலக்கரத்தில் என்றைக்குமில்லாதபடி அதிக்கப்படியாக வளையல்களை அணிந்து கொண்டு வந்திருந்ததுதான். அவற்றின் கலகலப்பு ஒலி அவர் கவனத்தைக் கலைத்ததோடல்லாமல் வேலைக்கிடையில் வந்து விளையாடிச் சிரிப்பது போலவும் தோன்றியது. அவற்றின் குறும்புத்தனத்தை அடக்குவதற்காக அவளும் அடிக்கடி அவற்றை மேலே தள்ளி விட்டுக் கொண்டாள். கேட்டால்தானே வளையல்கள்? ஒரே கலகலப்பும், கிளு கிளுப்புந்தான்...

கடிதங்களைக் கவனித்தாயிற்று. வெளியில் காணவந்த வாடிக்கைக்காரர்கள் காத்திருந்தார்கள். மெளனமாகத் தலையை ஆட்டி யமுனாவை அனுப்பி விட்டு, வந்திருந்தவர்களை வரவேற்றார். இடையிடையே டெலிபோன் மணியும் அவரை அழைத்தது. வாடிக்கைக்காரர்களின் சந்திப்பு முடிந்தவுடன், அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து போனார்கள். தலைமைக் கணக்கர் தயாநிதி வந்து முதல்நாள் கணக்கு வழக்குகளைக் காண்பித்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டார். அடுத்த அறையிலிருந்து யமுனாவின் டைப் இயந்திரம் ரீங்காரம் செய்யும் ஒலி விட்டு விட்டுக் கேட்டது.

எப்படி அங்கே பொழுது பறந்ததென்றே தெரியவில்லை. இடைவேளை நேரம் வந்துவிட்டது. பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிவரை சாப்பாட்டு நேரம். யமுனாவுக்கு இன்னும் பசி எடுக்கவில்லையோ, அல்லது அவளுடைய டைப் இயந்திரத்தின் பசி தீரவில்லையோ, அவள் இன்னும் கடிதங்களை அடிக்கும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

வாசுதேவன் தம் வீட்டிலிருந்து கொண்டு வந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டு முடித்தார். பிளாஸ்கிலிருந்த காபியை ஊற்றிக் கொடுத்துவிட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அறைக்கதவை மூடிவிட்டுச் சென்றான் ஆபிஸ் பையன். இரண்டு மணிவரையில் அவர் ஓய்வெடுக்கும் நேரம்.

நாற்காலிக்குப் பின்புறமிருந்த ஸ்கிரீனுக் கப்பால் அவருடைய சோபா கிடந்தது. அதில் சாயப் போனவர் கண்களில் யமுனா உட்கார்ந்திருந்த நாற்காலி தென்பட்டது. அதன் மேலும், கீழே தரையிலும் அங்கங்கே உதிரிப்பூக்கள் சில சிதறிக்கிடந்தன. கசங்காமல் குண்டு முத்தைப் போல் கிடந்த ஒன்றை மட்டும் கையில் எடுத்து முகர்ந்தபடியே, 'ஆமாம், இது எப்போது, எங்கே, எப்படி, ஏன் தொடங்கியது?' என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டு சோபாவில் சாய்ந்தார். ஓய்வு நேரமாக இருப்பதால் அந்த நேரத்தில் கம்பெனி நினைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதும் தவறில்லை என்று பட்டது.

'ஏன் தொடங்கியது?' என்பதற்கு விடை கிடைக்காவிட்டாலும், 'எப்போது தொடங்கியது?' என்பது மட்டிலும் இலேசாக அவர் மனத்திரையில் மின்னியது.

மூன்று வாரங்களுக்கு மேலிருக்கும். சேர்ந்தாற்போல் சில நாட்களுக்கு யமுனா மூர்த்தி முகத்தை என்னவோபோல் வைத்துக் கொண்டு அலுவலகத்தில் நடமாடிக் கொண்டிருந்தாள். நாளுக்கு நாள் முகத்தில் உயிர்க்களை குறைந்தது. எதிலும் பிடிப்போ உற்சாகமோ இல்லாமல் நடைப் பிணம்போல் மாறி வந்தாள். உடையிலும் அலங்காரத்திலும் ஓர் அலட்சியம்; பேச்சில் ஒரு விரக்தி; செயல்களில் தடுமாற்றம், டைப் அடிக்கும் கடிதங்களில் பிழைகள் தலை காட்டின.

வாசுதேவன் அவளைச் சிறிதுகூடக் கடிந்து கொள்ளவோ குறை கூறவோ இல்லை. தாமே பிழைகளைத் திருத்தினார்; அதிகப்படியான கவனத்தோடிருந்து வேலைகளைக் கவனித்தார்.

அவருடைய அன்பையும் பெருந்தன்மையையும் கண்ட யமுனா, ஒரு நாள் ''என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்; இனி மேல், நான் வேலையில் அதிகமான கவனம் செலுத்துகிறேன்'' என்று தானே கூறினாள்.

''பரவாயில்லை; யானைக்கும் அடி சறுக்கும்!'' என்று சிரித்தபடியே சொல்லி விட்டு, ''உனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைக்கிறேன்; நாலைந்து நாள் லீவெடுத்து உடம்பைப் பார்த்துக் கொண்டு பிறகு திரும்பி வரலாமே!'' என்றார்.

அவள் அவரைத் துயரத்தோடு ஏறிட்டுப் பார்த்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

''என்ன யமுனா! கம்பெனி டாக்டரைப் பார்த்து ஏதாவது மருந்தை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம்; வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அல்லது மைசூருக்குப் போய் மூர்த்தியைப் பார்த்து விட்டு வந்தால் சரியாய்ப் போகுமென்றால் அப்படியும் செய்யலாம். ஒரு வாரத்துக்கு இங்கு நானே தயாநிதியை வைத்துக் கொண்டு சமாளிக்கிறேன்.''

கண்கள் கலங்கிவிட்டன யமுனாவுக்கு. அந்தக் கலங்கிய கண்களோடு அவருடைய இந்த அன்புக்கு நன்றி கூறுகிறவள் போல் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். 'வேண்டாம், என்னை லீவெடுக்கச் சொல்ல வேண்டாம்' என்று கெஞ்சுவது போலிருந்தது.

''சரி யமுனா, உன் இஷ்டம்.''

மாலையில் அவரிடம் கணக்கைப் பற்றிப் பேச வந்த தயாநிதி, யமுனா ஏதோ சிறிது நேரம் மெளனமாகத் தன் அறையில் அழுது கொண்டிருந்தாள் என்பதைத் தெரிவித்தார்.

''லீவ் போட்டு ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லுங்களேன்-''

''இப்படி ஏதோ நீங்கள் சொன்னதற்காகத்தான் அவள் அழுதிருப்பாள் என்று நினைக்கிறேன்'' என்றார் தயாநிதி. ''ஆபிசில்தான் அவளால் கொஞ்சமாவது கவலைகளை மறக்க முடிகிறதாம். அவள் இங்கே சந்தோஷமாக இல்லையென்றாலும், வீட்டில் இருப்பது அவளுக்குத் தண்டனை போல் எனக்குத் தோன்றுகிறது.''

திடுக்கிட்டார் வாசுதேவன். தயாநிதியை அவள் தன் தகப்பனாரைப் போல் நினைத்துப் பல சொந்த விஷயங்களை அவரிடம் மனந்திறந்து பேசுவதுண்டு. மேலும் அவர் அவள் வீட்டுக்குப் பக்ககத்திலேயே குடியிருப்பவர், ஓரளவு அவள் மாமியார் குடும்பத்தைப் பற்றியும் அவருக்குத் தெரியும்.

''காலம் கடந்து பிறகுதான் இவளுக்குக் கல்யாணமே நடந்தது. கல்யாணம் ஒன்று நடந்ததே ஒழிய, இவளும் இவள் புருஷனும் ஒரு வருஷமாவது சேர்ந்தாற் போலக் குடும்பம் நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகம். வீட்டில் மாமியார் வைத்ததுதான் சட்டம்...''

''மாமனார் இருக்கிறார் போலிருக்கிறதே?''

''அவர் அந்த அம்மாளின் கெளரவமான வேலைக்காரர், அவ்வளவுதான் சொல்ல முடியும். இவளுடைய கடைசி நாத்தனாருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. அதற்குக் காசு சேர்க்க வேண்டுமென்பதைக் காரணம் சொல்லிக் கணவனையும் மனைவியையும் பிரித்து வைத்திருக்கிறாள் அந்த அம்மாள். மூர்த்திக்கு மைசூரில் நானூறோ ஐந்நூறோ சம்பளம், இவளும் சம்பாதிக்கிறாள். இவர்கள் இரண்டு பேரைவிட, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் தான் அந்த அம்மாளுக்குக் குறி. காசு கொடுக்கக் கடமைப்பட்ட ஒரு வேலைக்காரி என்று அளவில் தான் இவளுக்கு அந்த வீட்டில் மதிப்பு. எப்போதாவது மூர்த்தி இங்கு வந்தாலோ, இவள் மைசூருக்குப் போய் வந்தாலோ, ரயில்காரனுக்குச் காசு போகிறது என்று அடித்துக் கொள்ளுகிறாளாம் மாமியார்.''

வாசுதேவனின் முகத்தில் ஈயாடவில்லை. வீட்டில் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் நடக்க வேண்டும். அதற்குக் காசு வேண்டும். அதைச் சேர்ப்பதற்காகக் கல்யாணம் செய்து கொண்ட இருவர் வனவாசத்து ராமனும் சீதையுமாக வாழ்க்கையை நடத்த வேண்டும்.

''காசும் கல்யாணமும்...'' என்று வேதனையோடு சிரித்தார் வாசுதேவன்.

''ஆண் பெண் சரிநிகர் சமானம், பட்டப் படிப்பு, உத்தியோகம் என்பதில் மட்டும் நாம் மேல் நாட்டு நாகரிகம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறோம். கல்யாணத்தின் கழுத்தில் காசு உட்கார்ந்து கொண்டு கிட்டி போடுவது எந்த நாட்டு நாகரிகமோ தெரியவில்லை. சரிநிகர் சமானம் என்பதெல்லாம் அப்பட்டமான போலித்தனம்!" என்று எரிச்சலோடு கூறினார் தயாநிதி. அவரும் சில பெண்களைப் பெற்றவர்; அதனாலேயே ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டிய வயதிலும் ஓடாய் உழைக்கின்றவர்.

அந்த நிமிடத்தில் தயாநிதி கூறிய விவரங்களைக் கேட்டு வாசுதேவன் யமுனாவுக்காக வருந்தினாரென்றாலும் அடுத்தபடி வந்து குவிந்த அலுவலக வேலைகளில் எல்லாவற்றையும் மறந்து விட்டார்.

கடிகாரம் ஒரு முறை அடித்து ஓய்ந்தது. சோபாவில் கிடந்த வாசுதேவன் அண்ணாந்து பார்த்தார். மணி ஒன்றரை.

அந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் கம்பெனிக்கு வந்த யமுனாவின் தோற்றத்தைக் கண்டு வாசுதேவன் அயர்ந்து போய்விட்டார். தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்துக்கு ஒரு பெண் எப்படி அலங்காரம் செய்து கொண்டு வருவாளோ அப்படி வந்திருந்தாள். அன்றைக்கு மட்டு மில்லை, அதற்கு மறுநாளும் தொடர்ந்து இப்படியே வந்து கொண்டிருந்தாள்.

முதல் நாள் வரை வாடி வதங்கிச் சுருங்கிக் கொண்டே வந்த தாமரை மொட்டு, திடீரெனத் தன் எல்லா இதழ்களையும் விரித்து மலர்ந்தால் எப்படி இருக்கும்? வெளித்தோற்றத்தில்தான் இந்த மாறுதல் என்பதுமில்லை. வாசுதேவனோடு அவள் பேசியதிலும், பழகியதிலும் கூடத் தனியானதோர் உற்சாகத்தைக் கண்டவள் போல் நடந்து கொண்டாள்.

தொல்லை இங்கேதான் அவருக்குள் தொடங்கியது! தொடர்ந்தது...

இனம் புரியாதவாறு ஒரு ஊற்றுக்கண் தன் நெஞ்சகத்தே திரிந்துகொண்டு அதன் வழியாக அன்பென்னும் குளிர் வெள்ளப் பெருக்கு மேலே பொங்கிப் பொசிந்தால் ஒரு பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்வாள்? நடையில் துள்ளலும், பேச்சில் மழலையும் விழியில் மிடுக்குமாக எப்படி அவள் சுழன்று திரிவாள்? பொன்னும், மணியும், பூவும் பொட்டுமாக எவ்வாறு அவள், தன் பெண்மைக்கு மெருகேற்றும் ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்வாள்?

விடை தெரியாமல் தவித்தார் வாசு தேவன், இவ்வளவும் எதற்காக? யாருக்காக? ஏன்?

அவளுடைய அந்த மாற்றத்தால் அதிகமாகத் தாக்கப்பட்டவர் அவர்தான். கம்பெனியில் வேறு யாருடனும் அவளுக்கு அதிகமான வேலையில்லை. அவருக்கு இலேசாகப் புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. அவர் அதைப் புரிந்து கொள்ளவும் விரும்பினார். புரிந்து கொள்ளாமல் இருக்கவும் முயற்சி செய்தார். அவர் புரிந்து கொள்ள விரும்பிய போது அவரால் அதைப்புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ளாமல் இருக்க அவர் முயன்றபோது, அவளது விசித்திரப் போக்கின் பேரலைகள் பொங்கி எழுந்து அவர் மீது மோதிய வண்ணமாகவே இருந்தன. அல்லது, அவராகவே அவளது விகற்பமில்லாத அன்பையும் மதிப்பையும் தவறாகப் புரிந்து கொண்டு, தம்மை அலைக்கழித்துக் கொள்ள இடம் கொடுத்து விட்டாரா என்பதும் அவருக்கே விளங்கவில்லை.

அவர்தான் தவறாகப் புரிந்து கொண்டார் என்றால், அலுவலகத்திலுள்ள மற்றவர்களுமா அப்படிப் புரிந்து கொள்வார்கள்? தயாநிதியே தம்மிடம் எதையோ மனம் விட்டுச் சொல்லமுடியாமல் தடுமாறுவது போல் அவருக்குத் தோன்றியது. அவர் விழிகளில் கலந்துவிட்ட சந்தேகத்தை வாசு கண்டு கொண்டார். 'முன்பெல்லாம் வேலை விஷயத்தில் மூர்த்தியும் என்னைப்போல் கண்டிப்பானவர் என்று கூறுவாளே. அவரோடு என்னை ஒப்பிட்டு அப்படியொரு விபரீதக் கற்பனை செய்து கொண்டு அவஸ்தைப்படுகிறாளோ!' என்று கூடச் சில சமயங்களில் நினைத்தார்.

முழு இருட்டை நோக்கித் தேய்ந்து கொண்டே வந்த நிலவு, அமாவாசைக்குப் பிறகு பிறையாய் வளர்ந்துகொண்டே போவது போல் இருந்தது. முழு நிலவாய் மாறிவிடுமோ என்ற பயம், தவிப்பு, தொல்லை, குறு குறுப்பு...

இதற்கு மேல் இதை வெளியிடச் சொற்கள் கிடைக்கவில்லை.

சோபாவில் சாய்ந்து கொண்டிருந்த வாசுதேவன் தம் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டு மணிக்குப் பத்து நிமிடங்கள் இருந்தன. சிறிது நேரம் அடுத்த அறையில் ஓய்ந்திருந்த டைப் இயந்திரத்தின் ரீங்காரம் மீண்டும் ஒரே சீராகத் தொடங்கிவிட்டது. அவள்தான் அடித்துக் கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் அவள் வேலைகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதே சிரமமாக இருந்தது. எதையும் முன்னைவிடக் கச்சிதமாகவும் பொறுப்போடும் ஞாபக சக்தியுடனும் செய்தாள். அவருடைய பாராட்டுகள் அவளுக்குப் புதிய தெம்பை அளித்திருக்க வேண்டுமென்பது, அவளுடைய ஒவ்வொரு செயலிலும் தெரிந்தது. வேலை முடிந்த பின்னரும் கூட, ஐந்து பத்து நிமிஷங்கள் அவரோடு தங்கி சகஜமாய்ப் பேசினாள்.

சகஜமாய்த் தான் பேசுகிறாளா என்பதில் அவருக்கொரு சந்தேகம்.

கம்பெனிக்குள் அக்கம் பக்கத்தில் அவர்களைப் பற்றி எழுந்த சந்தேகப் புகை மூட்டத்தை அவள் தெரிந்து கொண்டாளா, இல்லையா? அதைப் பற்றி அவள் கவலைப்பட்டாளா இல்லையா? தெரியாது! ஆனால், அவர் தெரிந்து கொண்டார்; அவர் கவலைப்பட்டார்.

இதைப் பற்றி அவளிடம் பேச வேண்டுமென்று அவர் நினைத்தால் அதற்கு அவள் இடம் கொடுத்தால்தானே? இதென்ன விசித்திரமான கண்ணாமூச்சி விளையாட்டு? 'அபாயகரமான விளையாட்டு இது; எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாத விளையாட்டு இது' என்பதை யார் அவளிடம் எப்படிச் சொல்லுவது? கண்டிப்பும் கட்டுப்பாடும் உள்ளவன்தான் நான்; ஆனால் இந்த அணைகளை உடைக்க, இவற்றைத் தகர்த்து மூழ்கடிக்க ஒரு சின்னஞ்சிறு விரிசல் போதாதா என்ன?

என்ன இருந்தாலும் ஆண்பிள்ளை ஆண்பிள்ளைதானே? இரும்பினாலும் கல்லினாலும், மரக்கட்டையாலுமா அவன் படைக்கப்பட்டிருக்கிறான்? - இந்த முட்டாள்களுக்கு ஏன் இதெல்லாம் தெரியவில்லை?

முதல் நாளோ அதற்கு முதல் நாளோ அவர் அவளிடம் இது பற்றிப் பேச முயன்ற போது, ''தனியாக நமக்குள் பேசுவதற்கு என்ன இருக்கிறது?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ''உங்களுடைய அன்பைக் கண்டால் சில சமயம் எனக்குப் பயமாகக்கூட இருக்கிறது'' என்று தன் பல் தெரியச் சிரித்தாள். இப்படிச் சொல்லிவிட்டுப் போகும் போது மட்டும் ஏன் நடையில் அந்தத் துள்ளல் இருக்க வேண்டுமாம்?

இரண்டு மணி அடித்தது. சோபாவிலிருந்து எழுந்து ஒரு தீர்க்கமான முடிவோடு - பிடிவாதத்தோடு - நாற்காலிக்கு வந்தார். 'இன்றைக்கு எப்படியும் கேட்டுவிட வேண்டியதுதான்...'
எதைக் கேட்பது என்பதிலும் எதைச் சொல்வது என்பதிலும் அவருக்கு இனிக் குழப்பம் ஏதும் இல்லை. குழம்பிக் குழம்பி ஒரு தெளிவுக்கு வந்து கொண்டிருந்தது மனம். பேச வேண்டியதை அவர் தமக்குள் ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டார்.

ஒத்திகை தொடங்கியது.

''சில நாட்களாக நாம் இருவரும் மற்றவர்கள் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் எப்படி நடந்து கொள்ளுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. அது என்னைவிட உனக்குத்தான் தெரியக் கூடும். ஆனால் நீ நடந்து கொள்வதைப் பார்த்தால் எனக்குள் ஏதோ குழப்பம் ஏற்படும்படியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதை நான் உன்னிடம் மறைக்க விரும்பவில்லை. பயத்துக்கும் பரபரப்புக்கும் மத்தியில், மனசாட்சிக்கும் சமூகத்துக்கும் மத்தியில், உணர்ச்சிக் கட்டுப்பாட்டுக்கும் அதன் கொந்தளிப்புக்கும் மத்தியில் நாம் சிறு துரும்புகளாகியிருக்கிறோமோ என்று எனக்கொரு சந்தேகம்... நீ இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்? நமக்குள் எங்கே எப்படி நாம் கோடு கிழித்துக் கொள்வது?''

ஒத்திகையெல்லாம் சரியாய்த்தான் நடந்தது. ஆனால் நாடகமோ?

தபாலில் அனுப்ப வேண்டிய கடிதங்களைக் கையெழுத்துக்காக எடுத்துக் கொண்டு, சரியாக மூன்று மணிக்கெல்லாம் மெல்லக் கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்தாள் யமுனா மூர்த்தி. பிற்பகலில் அவள் எடுத்துக் கொண்ட குறுகிய கால ஓய்வு நேரத்தில் அவள் தன் அலங்காரக் கலையையும் மறந்து விடவில்லை என்பது அவள் முகத்தில் தெரிந்தது. பூச்சிலும் புதுமை தென்பட்டது. வெற்றிலைச் சிவப்பும் உதட்டுக்கு இயற்கையான வண்ணம் பூசியிருந்தது. கடிதங்களை அவருக்கு முன்னால் வைத்துவிட்டு, தன் தலையில் வாடிப் போயிருந்த மல்லிகைச் சரத்தைக் கேசத்திலிருந்து நளினமாக எடுத்து அவர் காலடிக்கு அருகிலிருந்த மூங்கிற் கூடைக்குள் போட்டாள். ஒரே சமயத்தில் இது அவருக்கு எரிச்சலையும் தந்தது; ஆனந்தத்தையும் தந்தது.

அவர் காகிதங்களைக் கிழித்துப் போடும் குப்பைக் கூடைக்குள் யமுனாமூர்த்தி சூடிக் கொண்டு வந்த மல்லிகைச் சரம் கிடந்தால், ஆபீஸ் பையன் என்ன நினைப்பான்? அவன் மற்றவர்களிடம் என்ன சொல்வான்?

பற்களைக் கடித்துக்கொண்டு 'மளமள'வென்று கடிதங்களில் கையெழுத்துப் போட்டார். சரியாக அவற்றைப் படித்துப் பார்க்கவில்லை. வேலையை முடித்துவிட்டு ஒரு கணம் வேடிக்கை பார்ப்பது போல் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவளும் பார்த்துவிட்டு, பிறகு பயத்தோடு தன் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

''உன்னிடம் ஒரு முக்கியமான...''

அவர் சொற்களை முடிப்பதற்கு முன்பாகவே அவள் 'சட்'டென்று பாதியில் எழுந்தாள். வாசுதேவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

''உட்கார் யமுனா!'' என்று அதட்டும் குரலில் தொடங்கி, ''நாம் எப்படியாவது இன்றைக்கு இதைப் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும்'' என்று முடித்தார். அவள் முகத்தில் இலேசாகப் பயம் படர்ந்தது. எழுந்தவள் மீண்டும் உட்கார்ந்தாள்.

''யமுனா!...'' ஒத்திகை செய்து வைத்திருந்த சொற்கள் சரியான நேரம் பார்த்து எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன.

''வேண்டாம்; நீங்கள் எதுவும் பேச வேண்டாம்...'' என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, ''உங்களைப் பற்றி நான் அவருக்கு எழுதியிருக்கிறேன்'' என்றாள்.

கூரிய கத்தியால் அவள் அவருடைய நெஞ்சில் ஓங்கிக் குத்தியிருந்தால்கூட அவருக்கு அவ்வளவு வேதனை ஏற்பட்டிருக்காது. ஒரே ஒரு கணம் அந்தத் தாக்குதலால் தடுமாறிவிட்டு, பின்பு நிதானித்துக் கொண்டு, ''யார், மூர்த்திக்கு என்னைப் பற்றி எழுதியிருக்கிறாயா? என்ன எழுதியிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

''வந்து ... வந்து... கொஞ்ச நாட்களாகவே நீங்கள் வந்து... என்னிடம் ஒரு மாதிரியாக நடந்து கொள்ளுகிறீர்கள் என்றும்...'' மேலே பேச முடியாமல் மலங்க மலங்க விழித்தாள் அவள்.

''ஒரு மாதிரியாக என்றால்?'' - தன் வேதனையை மறைக்கும் ஒரு சிரிப்போடு அவர் குறுக்கிட்டார்.

அவளும் அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பதிலளித்தாள்.

'உணர்ச்சி வயப்படுவதுபோல் நடந்து கொள்ளுகிறீர்கள் என்றும், ஆனாலும் கவலைப்பட வேண்டாம். என்னை நான் கவனித்துக் கொள்வேன் என்றும் எழுதியிருக்கிறேன்''

பேசுவதற்கு அவருக்க நா எழவில்லை. தலை சுற்றியது. கோபம் வந்தது. ஓங்கி அவள் கன்னத்தில் அறையலாமா என்று கூடத் தோன்றியது. பிறகு அந்த அதிர்ச்சி, அமைதிக்கு நழுவியது. கோபம் அனுதாபமாக, இரக்கமாக வேதனையாக மாறியது. அவர் கண்கள் அவரையும் மீறிக் கலக்கமுற்றன.

''அவர் என்னைப் பற்றித் தப்பாக நினைப்பது இருக்கட்டும். அந்தப் பழியை நான் தாங்கிக் கொள்ளப் பார்க்கிறேன். ஆனால், நீ? உன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசித்தாயா?''

''என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்!'' என்று அழுகையும் ஆத்திரமுமாய்க் குமறினாள் யமுனா. ''நினைப்பதானால், ஒன்று என்னை அவரிடமே அழைத்துக் கொள்ளட்டும்! அல்லது அடியோடு மறந்துவிடட்டும்... இந்த இரண்டுங் கெட்டான் வாழ்க்கை... என்னால் இனி இதைத் தாங்க முடியாது, தாங்கவே முடியாது...''

அவள் தேம்பி தேம்பி அவர் முன் அழுதாள். அவரும் அவளுக்காகத் தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘எரிமலை’ சிறுகதை தொகுப்பு - 1970

அகிலன்

© TamilOnline.com