வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு!
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் ஒட்டுப்பதிவில் இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் விடுபட்டிருந்தன. வாக்காளர் அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த முறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் பெயர்கள்கூட இம்முறை இல்லாமல் போனது பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இப்படி வாக்குரிமையைச் செலுத்த முடியாத பலர் நேரடியாகத் தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் கூறினர்.

தமிழகத்தில் வாக்காளர்கள் குளறுபடிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது சென்னை நகரில் மட்டும் ஏறத்தாழ 30 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அப்போது இதில் வெளிவாக்காளர்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கள்ள ஓட்டுப் போடுவதற்கு ஏதுவாகும் என்று பலதரப்பிலிருந்து புகார்கள் வந்ததையடுத்து இதனை ஆய்வு செய்து வாக்காளர்களைக் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அப்போது வாக்காளர்கள் பட்டியலில் சில குளறுபடிகள் நேர்ந்து இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இதற்கிடையில் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தன் வாக்குச் செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் பலர் இதுபற்றி முறையிட ஜெயலலிதாவும் இது மத்திய தேர்தல் கமிஷன்தான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள திருமதி. ராம் என்பவரின் பெயரும் நீக்கப்பட்டதாகவும், இதுபற்றி முறையிடுவோம் என்று கூறினார்.

தேர்தல் அன்று மாலை பத்திரிக்கை யாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் சாரங்கி இதுப்பற்றி கூறுகையில், ''யார் இதில் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...'' என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக் கையில் ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதில் ஏதேனும் தவறு செய்திருக்கிறார்களா என்பதுப் பற்றி அறிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்'' என்றும் தெரிவித்தார்.

மத்திய தேர்தல் ஆணையர் ஏ.என். ஜா புதுடில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, ''நாடு முழுவதும் பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையத் திற்கு புகார்கள் வந்துள்ளது. அதுபற்றி அந்தந்தந்த மாநிலத் தேர்தல் ஆணையர் களிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி அப்துல்கலாமின் அண்ணன், பத்திரிக்கையாசிரியர் சோ, டாக்டர் செரியன் போன்ற பிரபலமானவர்களின் பெயர்கள் இம்முறை வாக்காளர் பட்டியிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com