இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
'மனிதனுக்குச் சேவை செய்வதன் மூலம் இறைவனை வழிபடலாம்' என்று நம்பிக்கை யினால் 'இந்து சமுதாய மற்றும் கலாசார மையம்' (லிவர்மோர் ஆலயம் என்று அறியப்படுவது) லிவர்மோரிலும், வட கலிஃபோர்னியாவிலும் பல சமுதாயப் பணிகளைச் செய்துவருகிறது. இன, மத, தேச வேறுபாடுகளைக் கடந்து ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொருட்டு ஒரு உதவி நிதியை ஏற்படுத்தியும் உள்ளது. உடல்நலம், பல்நலம், இரத்தம் மற்றும் மஜ்ஜை (bone marrow) தானம் ஆகியவற்றுக்கான முகாம்களையும் நடத்துவதுடன் ஆண்டுக்கொருமுறை வீடற்றவர்களுக்கு கம்பளிப் போர்வை வழங்கும் பணியும் செய்கிறது.

இந்த ஆண்டு நிதிவழங்கும் நிகழ்ச்சி ஜுன் மாதம் 20, 2004 அன்று சான் ரமோன் நகரத்தந்தை டேவிட் E. ஹட்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், கமலா ஹாரிஸ் (சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்குரைஞர்) அவர்கள் தலைமை விருந்தினராகவும் இருக்க நடந்தேறியது. சமுதாயத்தின் பல்வேறு அங்கங்களான முதியோர், வீடற்றோர், கல்வியறிவற்றோர், கணவரால் தாக்கப்பட்ட பெண்டிர், குறைந்த வருமான முள்ளோர் என்று இவர்களுக்கெல்லாம் உணவு, உதவி, கல்வி இவை வழங்கும் சுமார் 18 அமைப்புக்களுக்கு இவ்விழாவில் நிதியுதவி வழங்கப்பட்டது. இம் மையம் முழுக்கமுழுக்கத் தன்னார்வப் பணி மற்றும் நிதிக் கொடையால் நடத்தப்படுவது ஆகும்.

© TamilOnline.com