தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 24, 2004 அன்று மிடில்டௌன் நடுநிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. தொகுப்பாளர்கள் தனியே ஒரு நாடகம்போலத் தொகுத்து நிகழ்ச்சியை வழங்கியது புதுமையாய் அமைந்திருந்தது. ஆடலும் பாடலும் ஆரவாரமாய் புது வருடத்தை வரவேற்றனர். 'நான் யார் தெரியுமா?' என்று சிறுவர் சிறுமியர் நடத்திய மாறுவேடப் போட்டி மிகச் சிறப்பு. பத்துத் தலை இராவணன், சுப்ரமணிய பாரதி, அனுமன், தமிழ் ஆசிரியர், குறவன் குறத்தி - இன்னும் பல வேடங்களில் இந்தியாவை இக்கரைக்குக் கொண்டு வந்த குழந்தை களும் இதைச் சாத்தியமாக்கிய பெற்றோரும் பாராட்டுக்குரியவர்கள்.

'ஓம் நமச்சிவாய' பாடலுக்குப் பரத நாட்டியமும், 'உப்புக் கருவா'டில் கிராமிய மணமும் வலம்வர சினிமா இசைக்குச் சின்னப் பாதங்கள் ஆடின. 'வந்தேன் வந்தேன்' என்று சிறுமியர் ஆடிய நடனப் போட்டி வஞ்சிக்கோட்டை வாலிபனை நினைவுபடுத்தியது. இளைய தலைமுறை யினர் இந்திய தேசிய கீதத்தை முறையான வாத்திய இசையில் வழங்க அரங்கமே எழுந்து நின்று நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியது. தொடர்ந்து நடந்த மங்கையர் நடனமும், 'பாரிஸ்டர் அரிச்சந்திரன்' நாடகமும் அரங்கத்தை ஆரவாரத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே நடந்த கோலப் போட்டி மக்களின் கலையார்வத்தை வெளிப்படுத்தியது. பாதிரியார் கேஸ்பர் ராஜ் இசைஞானி இளையராஜாவின் திருவாசக சிம்பொனி பற்றிச் சிறப்புரை வழங்க இறுதியில் 'த்வனி' குழுவினரின் மெல்லிசையுடன் விழா நிறைவுற்றது.

-

© TamilOnline.com