சிகாகோவில் தேனிசை மழை
ஜுன் 5, 2004 அன்று சிகாகோ நகரின் லெமாண்ட் கோயில் அரங்கத்தில் ராமன் ஸ்வாமி தலைமையில் நடந்தேறிய இசை மழையைப் பார்த்தபின், இந்நகரில் இவ்வளவு திறமைசாலிகளா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. என்றும் மறக்காத, நெஞ்சில்விட்டு அகலாத பழைய பாடல்களும், தாளம் போட வைக்கும் புதிய பாடல்களும் வந்திருந்தோருக்கு ஓர் அரிய விருந்துதான் போங்கள். 'சின்ன மணிக் குயிலே' என்று கணீர்க்குரலில் நிகழ்ச்சி யைத் துவக்கினார் ரவிசங்கர். பழனி, பவித்ரா ஆனந்த், ரமாரகுராமன் அஜித், சுதா வெங்கட், சரண்யா, ரவிசங்கர் ஆகியோரும் தம் பங்குக்கு ரசிகர்களை இசையால் திணறடித்தனர். கலை நிகழ்ச்சியின் உச்சம் ராமன் பாடிய 'மதுரா நகரில்', 'காதல் ஓவியம்' போன்ற பாடல்கள்தாம். வளரும் இளம் கலைஞர் ஆர்த்தி சூசை 'தூது வருமா?' என்று கேட்டு அமர்க்களப்படுத்தினார்.

சிகாகோவின் இசைப் பிதாமகன் என்று அழைக்கப்படும் சேவியர் ரோஸ், அந்தக் கால சிவகவிப் பாடலைப் பாடி புராதன இசைப்பிரியர்களின் மனம் குளிர வைத்தார். பாடி இசையமைத்த கவுரவ் மற்றும் சர்யாம் மிகத் திறமைசாலிகள். இடைவேளை முடிந்து வந்த பாடலுக்கு நடனமாடி 'தூள்' கிளப்பினார் சிறுவன் சித்தார்த்.

நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கினர் கிருஷ்ணன் மற்றும் லட்சுமி சிவராமன்.

ஜோலியட் ரகு

© TamilOnline.com