ச.தமிழ்ச் செல்வன்
எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச்சிறுகதை புதிய வளங்களாலும் கதை சொல்லல் மரபுகளாலும் விரிவும் ஆழமும் மிக்க நவீனத் தன்மைகளை உள்வாங்கத் தொடங்கின. மிகச் சாதாரண கிராமமனிதரும் சிறுகதைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெறத் தொடங்கினர். இந்தக் கதை சொல்லல் மரபில் வெகு இயல்பாக வந்து சேர்ந்தவர் ச.தமிழ்ச் செல்வன். இவர் 1970களின் கடைசிப் பகுதியில் எழுத்துலகில் அறிமுகமாகி 1985களில் 'வெயிலோடு போய்' எனும் தொகுப்பு மூலம் கவனிப்பை ஈர்த்த எழுத்தாளராகப் பரிணமித்தார்.

தமிழ்ச்செல்வன் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் பண்பாட்டுச் செயலாளியாகவும் தொழிற்பட்டு வருபவர். ஆனால் இவரது கலை இலக்கியம் சார்ந்த புரிதலும் உரையாடலும் மற்றும் எழுத்தும் படைப்பும் மிகவும் வித்தியாசமானது. கலை அனுபவம் சமுகப் பிரக்ஞையின் அடிநாதமாகவே இழையோடுகிறது. இந்தப் பலம் இலக்கியச் செயற்பாட்டின் அதனதன் இயக்கமாகிறது.

தீப்பெட்டித் தொழிற்சாலையில் கருகும் பிஞ்சுகளும் அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் கரிசல் மக்களும் இவரது கதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றனர். இதைவிட கிராமங்களில் உறவுகள் சிதில மடைந்து பண உறவுகளாக வளர்ந்து வருவதையும் அதில் சிக்தித் தவிக்கும் உணர்வுபூர்வமான மனிதர்களையும் தமிழ்ச் செல்வன் காட்டுகிறார்.

படைப்பு சார்ந்து காட்டும் மனிதர்களும் வாழ்வியலும் அவை தொற்றவைக்கும் அனுபவமும் வெகு இயல்பான வலிகளுடனும் வேதனைகளுடனும் படைப்பாகின்றன. படைப்பு அனுபவம் மனித வாழ்வியலின் பொதுக் கூறுகளை உரசிப் பார்க்கும் விசாரணை செய்யும் பாங்கு கொண்டவை. மனிதாயத்தின் அடையாள இருப்பின் வாழ்வியல் தரிசனமாகப் பதிவாகின்றன. இப்பண்புகளுடன் யதார்த்தத்தின் எல்லைகளை உச்சமாக விரிந்து ஆழமாக்கி இலக்கியமாக்கும் திறன் தமிழ்ச்செல்வனிடம் அதிகம்.

இவர் யதார்த்தமான படைப்பு வெளிகளில் வெகு இயல்பாக நகர்ந்து செல்லும் தொந்தரவுகளற்ற படைப்பாளி. இருப்பினும் புறவுலக நெருக்கடி காரணமாகச் சிக்கலுக்கு உள்ளாகும் தனிமனிதத்தின் வீழ்ச்சி சமுக இயைபுகளுடன் நேர்மையாக கதையாடலாக எடுத்துரைப்புச் செய்யும் பண்பு இவரிடம் வளர்ந்து செல்லும். இது மனித இருப்பின் அர்த்தம் தேடும் நுண்மை உணர்வுகளாக ஆங்காங்கு வலுவாக திரள் கொள்ளும். இதுவே வாசிப்பு அனுபவத்தில் படைப்பாளியின் அனுபவம் விலகி நின்று வாசகத் தளத்தில் புதிய தரிசனத்துக்கான கனவுகளை விதைக்கிறது. வரலாற்றில் மனிதனின் இடம் கண்டறியப்படுவதற்கான வாயிலாக யதார்த்தம் மட்டும் போதாது. அதையும் தாண்டும் யதார்த்தமற்ற கதை சொல்லல் களம் நோக்கி நகர்ந்து செல்லும் முயற்சியும் பிரக்ஞை பூர்வமாக தமிழ்ச்செல்வனிடம் உள்ளது. 'வாளின் தனிமை' எனும் தொகுப்பில் இதற்கான தடயங்கள் உண்டு. இவை படைப்பாளியின் கலைத்துவ நேர்மையின் பாற்பட்டது. இவை வெறுமனே பரிசோதனை செய்யும் பாணி வகைப்பட்டவை அல்ல. கதையை நகர்த்தி வளர்த்துச் செல்லும் எடுத்துரைக்கும் ஆற்றலின் நுட்பமாகவும் வெளிப்படுகின்றன.

தமிழ்ச்செல்வனிடம் இன்னொரு விசேட பண்பு உண்டு. அதாவது அரசு அலுவலகம் சார்ந்து தொழில் புரியும் நபர்களின் அகவுலகம் கச்சிதமாக பதிவாகிறது. அந்நியமாதல் உணர்வுக்கு எவ்வாறு ஆட்பட்டு அதிகாரவர்க்கத்தின் கருவியாக எடுபிடியாக மாறும் முரண்களை கட்டியாகிப்போன மனிதத்தை கோடி காட்டும் பாங்கு சிறப்பாக ஆங்காங்கு வெளிக்காட்டுகின்றன. குடும்ப வெளியிலும் ஆண் - பெண் உறவு சார்ந்த புரிதல் முரண்களில் மோதல் அவநம்பிக்கை என விரிந்த களங்களில் மனித இருப்பின் அர்த்தம் தேடும் தேடல் படைப்புக் கூறுகளின் ஆற்றுப்படுத்தலாக பலமாகவே சேர்மானமாகின்றன. இதனை தமிழ்ச்செல்வனின் படைப்புலகம் மேலும் உறுதி செய்கின்றன.

தமிழ்ச்செல்வன் கலை இலக்கியம் சார்ந்த பரப்புகளில் இயக்கம் கொண்டாலும் பண்பாட்டியல் அரசியல் சார்ந்த களங்களில் இவரது அக்கறை அவதானம் அதிகமாக உள்ளது. இவை படைப்பிலக்கிய களங்களிலும் மெதுவாக தலைநீட்டுவது தவிர்க்க முடியாது. ஆனால் அந்தக் தலைநீட்டல் துரத்திக் கொண்டிருக்காமல் படைப்பின் கூறுகளின் பலமாக மாற்றமடையும் சாத்தியங்களைக் கொண்டவை. இதுவே இவரது பலம்.

'மேலும் இருட்டு எனக்குப் பிடிக்கும்' என்ற சிறிய நூலில் குழந்தைகளுக்கான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளில் அறிவாளி முட்டாள் என யாரும் இல்லை. எல்லாக் குழந்தைகளும் அறிவார்ந்த குழந்தைகள் தான் என்பதனை இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. இந்தக் கட்டுரைகளில் தமிழ்ச்செல்வனின் எழுத்து நடை இத்துறை சார் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி. இது போல் 'இருளும் ஒளியும்' என்ற நூலில் அறிவொளி இயக்க அனுபவங்களை மாற்றுக் கல்வி குறித்த உரையாடலுடன் ஊடாடவிட்டு வெளிப்படுத்தும் திறன் கூட பாராட்டத்தக்கது. வாசக அனுபவத்திற்கு புதிய சாளரங் களாகவே இவை உள்ளன. கட்டுரை எழுத்தும் படைப்பியல் அம்சங்களை உள்வாங்க முடியும். இதனை தமிழ்ச் செல்வனின் எழுத்தும் சிந்தனையும் ஆழமாகவே மெய்ப்பிக்கின்றன.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com