படா அம்மா
அந்தச் சின்ன கிராமத்தின் பெரிய மனுஷிதான் 'படா அம்மா'. கிராமத்து மிராசுதாரின் பெரிய மருமகள் அவள். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அவளுடைய கொழுந்தனாரின் பிள்ளைகள் அவளிடம் மிக அன்பாக இருப்பார்கள். அவர்கள் மும்பையில் இருந்தாலும் பள்ளி விடுமுறைக்கு அந்தக் கிராமத்திற்கு வந்து தங்களுடைய பெரியம்மாவாகிய படா அம்மாவுடன் காலத்தைப் போக்குவது ரொம்ப பிடிக்கும்.

இப்படி இந்தப் பிள்ளைகள் படா அம்மா என்று கூப்பிட, அந்தக் கிராமம் முழுவதுக்கும் அவள் படா அம்மா ஆகிவிட்டாள். பள்ளிக் குச் செல்லும் மழலை முதல் பல்விழுந்த முதியவர் வரை எல்லோருக்கும் அவள் படா அம்மாதான்.

உண்மையில் படா அம்மாவின் பெயர் சுந்தரி அம்மாள். எல்லோரும் படா அம்மா என்று அழைத்ததில் அம்மா அப்பா வைத்த சுந்தரி என்ற பெயர் காணாமலே போய் விட்டது. 50 காசு அளவு பெரிய குங்குமப் பொட்டு, எப்போதும் சிரித்த முகம், பளிச் சென்று துவைத்து நன்றாக மடிக்கப்பட்ட புடவை என்று எப்போதும் ஒரே மாதிரி காட்சி கொடுப்பாள் படா அம்மா.

முகம் வதங்கியோ வாடியோ அவளை ஒரு நாளும் பார்க்க முடியாது. அந்தக் கிராமமே அவளுடைய அன்புக்குக் கட்டுப்படும்.

அவளுடைய கணவன் ராமநாதன் அந்தக் கிராமத்து அரசாங்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ரொம்ப சாதுவானவர். அதிகம் பேசவே மாட்டார். அவருக்கும் சேர்த்து படா அம்மா பேசி விடுவதால்தான் அவர் அவ்வளவு மெளனமாக இருப்பதாக கிராமமே பேசிக் கொண்டது. பள்ளியில் தலைமை ஆசிரியர் என்று கேட்டால் யாருக் கும் தெரியாது. படா அம்மாவின் புருஷன் என்று கேட்டால்தான் தெரியும்.

அந்த கிராமத்தின் எல்லா நல்லது கெட்டதுக்கும் முதலில் நிற்பது படா அம்மாதான். தெருக் குழாய்களில் தண்ணீர் கேட்பாரற்று வழிந்துக் கொண்டிருந்தால் வாசலில் விளையாடும் பிள்ளைகளிடம் "ஏண்டா குமரேசா, அந்தக் குழாய்த் தண்ணியை மூடக்கூட முடியாமல் அப்படி என்ன விளையாட்டு?" என்று அதட்டினால் அந்தக் குழந்தைகள் பயந்து கொண்டு விளையாட்டை மறந்து தெருக்குழாயை மூட ஓடுவார்கள்.

அப்படி எல்லோர் மனதிலும் மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்திய படா அம்மாவுக் குக் குழந்தை இல்லாமல் செய்த கடவுளை கிராமமே திட்டியது. ஆனால் படா அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் "எனக்குன்னு பிறந்தாதான் குழந்தையா? இந்தக் கிராமத்தில் இருக்கிற எல்லாக் குழந்தைகளும் நான் பெறாவிட்டாலும் வளர்த்த என் செல்லக் குழந்தைகள்தான்" என்று பேசும்போது கிராமமே அவளுடைய பெருந்தன்மையைப் பெருமையாகப் பேசும்.

அதோடு படா அம்மா மற்றொன்றும் சொல்வாள். எல்லா மனிதர்களிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கணும் அப்போ தான் நாம் கடவுளை மறக்காமல் இருப் போம். எந்தக் குறையுமே நம்மகிட்ட இல்லைன்னா நாம கடவுளையே மறந்து விடுவோமோ என்று கடவுளுக்கு பயம். அதனால் தான் ஒவ்வொரு மனிதனிடம் ஒரு குறையை வெச்சு படைக்கிறான் என்று பேசும்போது அவளைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருக்கும்.

படா அம்மாவின் கணவர் ராமநாதன் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போதும் அவர் ரொம்ப அமைதியாக இருந்தார். வீட்டிலேயே இருக்க ராமநாதனுக்கு அலுத்துப் போனாலும் படா அம்மா என்று அழைக்கப்படும் தன் மனைவி கிராமத்தில் வெளியே சென்று வரும்போது அன்று தனக்கு நடந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதைக் கேட்டுத் தனக்குத்தானே சிரித்துக் கொள்வார்.

திடீரென அவருடைய மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட, நன்றாக இருந்த மனிதர் மாறிப் போனார். கண்கள் விழித்துக் கொண்டு இருந்தாலும் அவருடைய மூளை இயங்குவது நின்று போனது. விழித்துப் பார்த்தபடியே இருப்பார். யாராவது ஏதாவது வேலை சொன்னால் மட்டும் செய்வார். மனைவி "எழுந்து குளிக்கப் போங்கள்" என்று சொன்னால் அதை அப்படியே செய்வார். கிராமத்து மக்கள் அனைவரும் படா அம்மாவின் கணவரைப் பார்த்து ரொம்பப் பரிதாபப்பட்டனர். ஆனால் இதையும் படா அம்மா தன்னுடைய கடமையாக நினைத்து அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தார்.

திடீரென ஒரு நாள் ராமநாதன் இறந்து போனார். ஐய்யோ என கிராமமே அவருடைய இறப்பிற்கு வருத்தப்பட்டது. எப்படிப் பெரிய அளவு குங்குமப் பொட்டு டன் வளைய வந்த அந்த மனுஷி படா அம்மாவை இனி விதவைக் கோலத்தில் பார்க்க வேண்டுமே என்று பரிதாப்பட்டது.

அங்கு படா அம்மா வீட்டில் ராமநாதனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. கிராமமே அங்கு கூடி விட்டது.

படா அம்மா கதறி அழுவாள் என்று எதிர்பார்த்த கிராமத்து மக்கள் அங்கு படா அம்மா மிக அமைதியாக உட்கார்ந்து இருந்ததைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கியது. ராமநாதனின் உடல் ஈமக்கிரி யைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது கூட படா அம்மா ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அஞ்சலை மெதுவாக படா அம்மாவை நெருங்கி "ஏம்மா, உன் கணவர் இறந்து விட்டார். நீ ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே?" என்று ரொம்ப ஆச்சரியமாகக் கேட்டாள்.

நிதானமாக நிமிர்ந்து பார்த்தாள் படா அம்மா என்று அழைக்கப்பட்ட சுந்தரி அம்மாள்.

"ஏன் அழணும்?" என்று படா அம்மா கேட்டது அஞ்சலைக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

"என்னம்மா இப்படி சொல்ற? பொண்ணாப் பொறந்த ஒவ்வொரு பொண்ணும் தான் சுமங்கலியா, பூவோடயும் பொட்டோடையும் சாகத்தான் ஆசைப்படுவாங்க..."

"அஞ்சலை அதுதான் நாம பெண்கள் ரொம்பத் தப்பு பண்றோம். இப்படி சுமங்கலி யாக போகணும்னு நினைச்சு நாம சுயநல வாதிகள்னு உலகத்திற்கே நிரூபிக்கிறோம். நாம எந்த சூழ்நிலையையும் அனுசரித்து நடந்து நம்முடைய காலத்தை ஓட்டி விடலாம். ஆனால் ஆண்களால் அப்படி முடியாது. அதுவும் என் புருஷன் கடைசி காலத்தில் எப்படி இருந்தார்னு உங்க எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட புருஷனைத் தவிக்க விட்டு அந்த மாதிரி சுமங்கலியாக நான் இறந்து போனால் என்னுடைய ஆன்மா சாந்தி அடையவே அடையாது. எனக்கு இப்போ ரொம்ப திருப்தியாக இருக்கு. அவர் உயிர் இருந்த வரை நான் அவருக்கு என்னுடைய சேவையைச் செய்து விட்டேன்."

"இனி என் உயிர் போனாலும் கவலை இல்லை. நான் கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் கடவுளே எனக்கு நல்ல ஆயுளைக் கொடு. என் கணவர் உயிருடன் இருக்கும்வரை நான் அவருக்குச் சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி என்று வேண்டுவேன். கடவுள் என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். அப்படி இருக்கும்போது நான் அழுது புரண்டால் கடவுளே என்ன இவள் இப்படி வேண்டிக் கொண்டு இப்போது கணவர் உயிர் போனவுடன் அழுகிறாளே என்று நினைப்பார்" என்று நீண்ட நேரம் பேசினாள்.

அஞ்சலைக்கும், அவள்மூலம் படா அம்மா சொன்னதைத் தெரிந்துகொண்ட ஊர் மக்களுக்கும் சுந்தரி அதற்குப் பிறகு நிஜமாகவே 'படா அம்மா'வாகத்தான் தெரிந்தாள்.

லக்ஷ்மிமூர்த்தி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com