அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை
அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை, ஜுலை 2,3,4 & 5 தினங்களில் தமிழர் திருவிழாவை பால்டிமோரில் கொண்டாடவிருக்கின்றது. 1987ம் ஆண்டு, ·பிலடெல்பியா, நியூ யார்க், டெலவேர், வாஷிங்டன் தமிழ்ச் சங்கங்கள், இலங்கைத் தமிழ்ச் சங்கம் - நியூஜெர்சி, ஹாரிஸ்பர்க் தமிழ்ச் சங்கம் - பென்சில் வேனியா, பாரதி கலை மன்றம் - நியூஜெர்சி இவற்றை உறுப்பினர்களாகக் கொண்டு அமெரிக்கக் கூட்டுத் தமிழ் சங்கம் என்ற பெயரில் இது துவங்கியது. பின்பு இவ் வமைப்பு வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of Noth America - FETNA) என்று பெயர் மாற்றம் பெற்று, கனேடியத் தமிழ்ச் சங்கங்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இப்பேரவையின் நோக்கம், வளர்ச்சி, எதிர்காலத்திட்டங்கள் பற்றி இதன் நிர்வாகத்தில் பல்வேறு கட்டங்களில் முக்கிய பங்கு வகித்து வரும் திரு வ. ச. பாபு அவர்கள் சுவைபட கூறிய கருத்துக்களின் சாராம்சம் இங்கே.

"41 தமிழ்ச் சங்கங்கள் அடங்கிய எங்கள் அமைப்பில் ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் ஒன்று முதல் ஐந்து பேராளர்கள் இருக் கின்றனர். இவர்களின் முயற்சியே ஆண்டுக்கு ஒரு முறை ஜுலையில் வரும் எங்கள் மாநாடு. இரண்டு ஆண்டுக்கொரு முறை, பேரவைத் தலைவரையும் இவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அமெரிக்கக் கூட்டு மாநிலங்கள் (USA), ஐரோப்பியக் கூட்ட மைப்பு போல் இந்நாட்டுத் தமிழர்களை ஒருங்கிணைப்பதே பேரவையின் தலையாய நோக்கம். பெரிய அளவில் எல்லோரும் சேரச்சேர பலம் பெருகும்; நம் குரல் ஓங்கும். இந்நாட்டில் 1980 வாக்கில் தமிழர் தன்நிறைவு அடைந்தனர். இவர்களின் மொழி, இனம், கலைகள், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும், வளர்க் கவும்; புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை நல்முறையில் அமையவும்; இந்தியா, இலங்கை, மொரீஷியஸ், ·ப்ரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலிருந்து இங்கு குடியேறிய தமிழர்களுக்கு உதவவும்; இந்நாட்டுக்குத் தேவையான அறச் சேவைகளில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஈடுபடவும் ஓர் அமைப்பு தேவைப்பட்டது.

இத்தேவைக்கு ஓர் உணர்வும் உருவமும் கொடுக்கத் தொடங்கப்பட்ட நன்றி நவிலும் நாள் விருந்து (Thanks-giving Dinner) போல், நாம் வாழும் இம்மண்ணுக்கு நன்றி கூறும் வகையில் பேரவை துவங்கிய உணவு வழங்கல் திட்டத்தை உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்கள் தொடர்கின்றன. பொங்கல் வார இறுதியில் 1990ம் ஆண்டு இந்த அற்புதமான திட்டம் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. நன்றி தெரிவிக்கும் நாளன்றே இதைச் செய்தால் கடலில் கரைத்த பெருங்காயம் போலாகி விடும் என்பதாலும், தமிழர் திருநாளான பொங்கலன்று நம் நன்றி தெரிவித்தலைச் செய்வது மிகப் பொருத்தமானதாகும் என்பதாலும் ஒவ்வோராண்டும் பொங்கலின் போது இதைக் கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து சிகாகோவிலுள்ள இரண்டு தமிழ்ச் சங்கங்களும் ஆதரவற்றோருக்கு உணவளித்தலை மேற்கொண்டன. அட்லாண்டா, விஸ்கான்ஸின், சான் ·பிரான் சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்ச் சங்கங் களும் பொங்கல் நன்றி கூறுதலைக் கடைப்பிடித்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மற்ற பல தமிழ்ச் சங்கங்களும் இதில் பங்கேற்று 'பொங்கல் நன்றி கூறுதலை'யும் தேங்க்ஸ் கிவிங் மாதிரி பிரபலமாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இவ்வாறான முயற்சிகளால் வேறு பல நன்மைகளும் விளைகின்றன. மிக முக்கியமாக, இங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு நம் ஆழ்ந்த கலாச்சாரப் பண்புகளை உணர்த்த முடிகிறது. இந் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் தினசரிகளில் வருவதால், பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. இவ்விழாக் களில், நம் மரபு, பண்பாட்டுப் பெருமை களை மற்றவருக்கு எடுத்துக் கூறவும் வாய்ப்பு கிட்டுகிறது - உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள குறள் பதிப்பிலிருந்து, Earnest Striving (இரந்துண்டு வாழாமை), Not Giving Up in Adversity (துன்பத்தை எதிர் கொள்ளல்), Possession of Industriousness (உழைப்பின் பெருமை), Avoidance of Laziness (சோம்பல் இல்லாமை) போன்ற வற்றையும், தமிழர் பண்பாட்டை விளக்கும் மடலையும் விநியோகம் செய்கிறோம்.

எங்கு தமிழர்கள் அவதிக்குள்ளானாலும் நியாயமான முறையில் உதவிக்கரம் நீட்டுகிறோம். செப்டம்பர் 11 நடந்த அடுத்த நாளே உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களின் வாயிலாக நிதி திரட்டி நியூயார்க் தமிழ் சங்கம் மூலம் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு (Red Cross) நன்கொடை அளித்தோம். நம் பேரவையின் முயற்சியால், தென் சிகாகோ காங்கிரஸ் பிரதிநிதியான டேனி கே டேவிஸ் இலங்கைத் தமிழரின் இன்னல்கள் பற்றி சட்டசபையில் பேசினார். மலேசியாவில் தூக்கிலிடப்படவிருந்த நான்கு தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டதில் நம் பங்கும் உண்டு. கொள்கைப்பிடிப்புடன் இவ்வாறான அறச் செயல்கள் பலவற்றைச் செய்கிறோம்.

நம் மொழி, பண்பாடு, இவை இம்மண்ணில் தழைத்தோங்கவும் வழி வகுக்கிறோம். 1991ல் கலிஃபோர்னியா பர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தோம். ஆண்டுக்கொரு முறை இப்பீடத்தின் மூலம் தகுதி வாழ்ந்த தமிழர் ஒருவருக்கு 'மாட்சிமைப் பரிசு' (Excellence Award) வழங்குகிறோம். தமிழைச் செம்மொழியாக அங்கீகரிக்க ஐக்கிய நாட்டுக் கழகத்தில் (UNESCO) 1991லிருந்து 1996வரை விடாமுயற்சி செய்தோம். மொழி பேசப்படும் நாடு இவ்வங்கீகாரத்தை முதலில் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபை கூறியதால், இந்தியத் தலைமையிடம் இதை முன் வைத்தோம். 'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்' என்பதற்கிணங்க இவ்வாண்டு இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கவிருப்பதில் பெருமிதம் அடைகிறோம். 1997-98லிருந்து தமிழ்ப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பாடத் திட்டமும், பாடப் புத்தகமும் அறிமுகப்படுத்தி, கற்பிப்பதையும் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

தமிழ்ப் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்குகிறோம். தமிழ் மையங்கள் உருவாக்க $50,000 ஒதுக்கியிருக் கிறோம். மேலும், கலாச்சார மையங்கள், நூலகங்கள், தமிழ்க் காட்சிசாலைகள் போன்றவற்றையும் உருவாக்கித் தமிழன் தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறோம். வட அமெரிக்கத் தமிழ் இளைஞர் அணியின் (NTYO) பணிகளிலும் பங்கேற்று ஊக்குவிக்கிறோம். எங்களின் முயற்சியால் இந்த ஜுலையில் கிராமியப் பாடல் புகழ் புஷ்பவனம் குப்புசாமியும், அனிதா குப்பு சாமியும் எங்கள் மாநாட்டிற்கும், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் வெள்ளி விழாவிற்கும் வந்து நம் மக்களை மகிழ்விக் கின்றனர். பிரபஞ்சன், ஆவுடையப்பன் போன்ற இலக்கியவாதிகளும்; இறையன்பு, சிவகாமி போன்ற இந்திய ஆட்சித் துறையினரும், மற்ற துறைகளைச் சார்ந் தோரும் நம் தமிழர் திருவிழாவில் பங்கேற் கின்றனர். தென்றல் இதழின் சீரிய தமிழ் பணியை ஊக்குவிக்கும் வகையில் தென்றல் இதழ்களை எங்கள் விழாவிற்கு வருவோர்க் கெல்லாம் பெருமையுடன் விநியோகிப்போம். 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்னும் புரட்சிக் கவிஞரின் கூற்றை அடித்தளமாகக் கொண்டு நல்ல பல செயல்பாடுகளுக்குக் கிரியா ஊக்கியாய் இருக்கின்றோம்" என்று முடித்தார் திரு வ.ச. பாபு அவர்கள். மேலும் விவரங்களுக்கு, www.fetna.org என்ற இணையத் தளத்தைப் பார்க்கவும்.

உமா வெங்கடராமன்

© TamilOnline.com