அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர்
1970களில், பெருவாரியான இந்திய இளைய தலைமுறையினர் வட அமெரிக்க மண்ணில் பொருள் தேடிக் குடி புகுந்தனர். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம், நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வசதியை மிகவும் பாதித்தது. இதனால் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மொழியை அனுசரித்து தாய்நாட்டின் தளையை மீறும் துணிச்சல் உள்ள சிலர் இந்நாட்டிற்கு வந்தனர். ஆரம்ப காலத்தில் இந்நாட்டுக் கலாசார, இயற்கை சூழ்நிலைக்குத் தங்களை மாற்றிக் கொள்ளச் சிரமப்பட்டாலும், இவர்களின் தேவைக்கான பொருட்களை விற்க வணிகர்களும் வந்து குடிபுகுந்ததில் சிரமம் சற்றுத் தணிந்தது.

இந்த நிலையில் 1990களில் சில பெற்றோர்கள் இந்தியாவில் முதிய வயதில் தனியாக கவனிக்கப்படாமல் இருக்கக் கூடாது என்று இந்த மண்ணில் குடியேறினர். இவர்களின் வாழ்க்கை ரசமானது. பல வருடங்களாக நம் மண்ணில் ஊறிய கலாச்சாரத்தை விடமுடியாமல், குழந்தைகளின் உறவை உதற முடியாமல் தத்தளித்தனர். இவர்கள் பல ரகம். கி.பி. 2000 ஆண்டுக்குள், இங்கு முதிய தலை முறையினரின் எண்ணிக்கை பெருகியது. முதலில் சில வருடங்கள் இவர்கள் கொஞ்சம் தவித்தனர்.

இங்கே வேலை செய்பவர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை காலையில் வேலைக்குச் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவர். வார இறுதியில் துணி துவைப்பது, பால், காய்கறி மற்றும் இதர சாமான்கள் வாங்குவது என்று சரியாகப் போய்விடும். மெஷின் மாதிரி வாழ்க்கை. இதில் அவர்களுக்குப் பெற்றோர்களுடன் நிதானமாகப் பேச நேரமேது? இதனால் பெற்றோர்களும் கூண்டுக்கிளிகளைப் போல் வாழ்ந்து வந்தனர். சில விடுமுறை நாட்களில் ஏதாவது பிக்னிக் அல்லது கூட்டுவிருந்து என்று வந்தால்தான் அவர்களுக்குக் குதூகலம். நான்கு வெளிமனிதர்களைப் பார்த்துப் பேசலாம். அமெரிக்க முதியவர்கள் தனித்து வாழப்பழகிவிட்டனர். அவர் களுக்குக் கூட்டுக்குடும்பம் என்றுமே இல்லாதிருந்ததால், இது ஒன்றும் புதிய வாழ்க்கை அல்ல. நம்மவர்களுக்கு, நம் ஊரில் சொந்த பந்தம், கல்யாணம், பண்டிகைகளில் கூடி மகிழ்வது என்று பழகிவிட்டதால் இங்கு ஒருவரையும் பார்க்காமல் அவரவர் தங்கள் சொந்த வாழ்க்கையிலேயே லயிப்பது என்பது புரியாத புதிராக இருந்தது.

தவிரவும், ஊரில் யார்வேண்டுமானாலும், தன் இஷ்டப்படி பொதுவாகனங்களில் வெளியே செல்லமுடியும். இங்கு அது கிடையாது. மக்கள் கூட்டிக்கொண்டு போனால்தான் உண்டு. இது சிலருக்குச் சலிப்பைத் தந்தது. தெருக்களில் சுலபமாக நடக்க முடியாது. கார்கள் போகும் வேகம் இவர்களுக்கு பிரமிப்பைத் தந்தது. தவிர பெரிய பெரிய நாய்களுடன் உலா வருகிறவர்களுடன் தெருவில் நடப்பது ஒருவித பயத்தைத் தந்தது--எங்கே எந்த நாய் நம்மைக் கடித்துக் குதறிவிடுமோ என்று.

மெல்ல மெல்ல முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவர்கள் தங்களுக்கென வாழ்க்கையை வகுத்துக் கொள்ளப் பழகிவிட்டனர். நாலுபேர் சேர்ந்து வாரத்தில் ஒருநாள், ஒருவர் இல்லத்தில்கூடி ஸ்தோத்திரங்கள் சொல்வது, பஜனைப்பாட்டுக்கள் பாடுவது அதன்பின் மதிய உணவைப் பகிர்ந்து உண்ணுவது--மாலையில் தங்கள் மக்களுடன் வீடு திரும்புவது என்று வழக்கப்படுத்திக் கொண்டனர். இதன்பின் இந்த நடவடிக்கை களே ஒரு பொது இடத்தில் செயல்பட ஆரம்பித்து அங்கு யோகா முதலிய பயிற்சிகளும் ஆரம்பித்தது.

இதனால் ஒவ்வொரு நாளுக்கு ஒரு நடவடிக்கையாக, வாரம் முழுவதும் கொண்டாட்டமாக ஆயிற்று. இந்த முதியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சேர்ந்து அருகில் எங்காவது ஊருக்கு பேருந்து ஏற்பாடு செய்துகொண்டு போய் வந்தனர். இப்படியாகத் தங்கள் வாழ்க்கையை வளம் பெற வாழக் கற்றுக்கொண்டுவிட்டனர். இருந்தும் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முதலாவதாக அநேகர், தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டதாக நினைக்கின்றனர். தங்கள் குழந்தைகள் வீட்டில் தன் இஷ்டப்படிச் செயல்பட முடியவில்லை என்று வருந்துகின்றனர். தங்கக்கூண்டில் அடைபட்டது போல் உணர்கின்றனர் கார், ஏசி, நல்ல சாப்பாடு என்று எல்லா வசதியும் இருந்தும்.

இதையே வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தால், நாம் மன அமைதியுடன் வாழ வேண்டுமானால், நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது. அவர்கள் நம்மைத் தங்களுடன் வைத்துக் கொள்ள, அவர்களும் சில தியாகங்கள் செய்ய வேண்டி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

நாம் தனியே இந்தியாவிலேயே சுதந்திர மாக, சந்தோஷமாக இருக்கிறோம் என்று விவாதிக்கலாம். அதற்கான பொறுப்பு களையும் நாம் ஏற்கத் தயாராக வேண்டும். மின்சார பில், போன் பில், வீட்டுவரி என்று எல்லாம் செய்ய ஆள்பலமும், திறமையாகச் செய்யும் ஆற்றலும், மனோதைரியமும் தேவை. உடல் ஆரோக்கியம் ரொம்பத் தேவை. இவற்றில் ஒன்று குறைந்தாலும், எல்லாக் குழந்தைகளும் இங்கு இருக்கும் பட்சத்தில் நாம் இங்கு நம் குழந்தைகளிடம், அவர்களை அனுசரித்து வாழக் கற்றுக் கொள்வதே இருசாராருக்கும் நல்லது.

அம்பா ராகவன்

© TamilOnline.com