பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள்
அன்புள்ள சிநேகிதியே...

நன்றி மறந்த நண்பன்; சொல் பேச்சைக் கேட்காத மனைவி; சதா போனிலேயே காலத்தைக் கழிக்கும் 16 வயது மகள்; சிடுமூஞ்சி சூபர்வைசர், எப்போது போனில் கூப்பிட்டாலும் தங்கள் உடம்பின் உபாதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நான் அவர்களை அங்கே அனாதை யாக இருக்கவிட்டு, இங்கே ஆனந்தமாக இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சியில் கொண்டு சொல்லும் பெற்றவர்கள்; ''அண்ணே, இவர் சொல்றாரு நீ கொஞ்சம் டாலரா அனுப்பிச்சா, அந்த அபார்ட்மென்ட் வாங்கலாம்னு'' என்று மின்னஞ்சல் அனுப்பும் சகோதரிகள் - எனக்கு மட்டும்தான் இவ்வளவு பிரச்சினைகளா? இல்லை, எல்லோருக் கும் தானா? வாழ்க்கையே நரகமாகயிருக் கிறதே, மேடம்?

அன்புள்ள சிநேகிதிரே

பிரச்சினையில்லாத வாழ்வு எங்கே இருக்கிறது நண்பரே! சிலருக்குக் கஷ்டங்கள் சேர்ந்து வரும். சிலருக்கு ஒன்றன் பின் ஒன்றாக வரும். சில சமயம் விட்டு விட்டு வரும். எது எப்படி வந்தாலும் இவற்றை அணுகும் விதத்தில் தான் நாம் நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும், மகிழ்ச்சியையும் உயர்த்திக் கொள்ளவோ, தாழ்த்திக் கொள்ளவோ செய்கிறோம். விதவிதமாக எல்லையில் லாமல் வரும் தொல்லைகளை ஏற்றுக் கொண்டு கவலையில்லாமல் வாழ்க்கை யை ரசிப்பவர்களையும் பார்த்து நான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இப்போது எந்த அனுபவத்தை வைத்து உங்கள் வாழ்க்கை நரகமாகப் போக விட்டிருக்கிறீர்கள்என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன். உங்கள் பார்வையை மாற்றிப்பாருங்கள். கொஞ்சம் நரகத்தை விட்டு நகர்ந்து வருவீர்கள்.

நன்றி மறந்த நண்பன் - முன்னர் நீங்கள் ஏதேனும் உதவி செய்திருப்பீர் கள். இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் போது, அவர் உங்களைக் கைவிட்டிருக் கக்கூடும். பிறருக்கு செய்யும் ஒவ்வொரு உதவியையும் நாம் மறக்க மறக்க அவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். நாம் நினைவில் வைக்க, வைக்க அவர்கள் மறந்து கொண்டிருப்பார்கள். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளும்போது, ஏமாற்றமும் குறைகிறது இல்லையா?

சொல்வதைக் கேட்காத மனைவி - மனைவியின் வழியில்தான் சில நாள் வாழ்க்கை செல்லட்டுமே? நம்முடைய வழிதான் நேர்வழி, நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று ஏன் நினைக் கிறோம். சிறிது விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன்.

போனோடு ஐக்கியமாகி இருக்கும் பெண் - நல்ல காலம் 16வயது பெண், வீட்டிலே பத்திரமாக இருக்கிறாளே இதே காரோடு ஐக்கியமாகியிருந்தால் எங்கே, எந்த நேரம், யாருடன் என்ன செய்து கொண்டிருக் கிறாள் என்று தெரியக்கூட வாய்ப்பு இருக்காதே. ஆகவே, சந்தோஷப்படுங்கள். இளவயது. நண்பரே, அமைதியாக அறிவுரை கூறினாலும், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டினாலும் விளைவு ஒன்றுதான். போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்வாள். ஒரு வாரம் எந்த comment-உம் அடிக்காமல் அவள் போன் பேசும் விதத்தையும், ஆர்வத்தையும், அழகையும் ஆராய்ந்து அனுபவியுங்கள். அப்பாவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவளே உங்கள் குடும்ப டாக்டருக்கு போன் செய்துவிடுவாள்.

சீடுமூஞ்சி சூபர்வைசர் - அவருக்கு சிடுசிடு முகம் இருந்தால் என்ன? உங்கள் முகம் சிரித்துக் கொண்டு இருக்கட்டுமே. நீங்களும் அவரைப் போல முகத்தை வைத்துக் கொண்டு உங்கள் அழகை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களை பார்த்து, பார்த்து, அவருடைய முக சுருக்கங்களும் மறைய ஆரம்பிக்கலாமே!

எப்போதும் குறை சொல்லும் பெற்றோர் - பாசம் ஐயா பாசம். வயதானவர்கள் யாரிடம் போய் தங்களுடைய உபாதைகளை சொல்ல முடியும். ஒரு வாரத்தில் ஒரு 15 நிமிடம் ஒரு மருத்துவரைப் போலப் பொறுமையாக அவர்களுடைய புகார்கள், வியாதி விவரங்கள் கேட்டு கொள்ளக் கூடாதா? கொஞ்சம் (15 நிமிடம்தான்) முயற்சி செய்து பாருங்கள்.

வீடு கட்ட விரும்பும் சகோதரி - ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் வேற்றுமை, வெட்கம் இல்லாமல் உதவி கேட்பதில் தவறில்லையே? நாம் இக்கரைக்குத் தப்பி வந்து 'டாலரில்' புரண்டு கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கலாம். அத்துடன் ஒரு insecurity இருப்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா. முடிந்தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் உண்மை நிலையை விளக்குங்கள்.

உங்கள் மனதில் நிறைய முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டு இயலாமை என்ற உணர்வில் திண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். முதலில் ஒரு முடிச்சை அவிழ்க்கப் பாருங்கள். சிறிது மூச்சுவிட ஆரம்பிப்பீர்கள். பிறகு மற்றவை தளர்ந்து தானாகவே அவிழ, அவிழ நீங்கள் சிரித்து வாழ்க்கையை அதன் ஏற்றத் தாழ்வுகளுடன் ரசிக்க ஆரம்பிப்பீர்கள்.

பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள். பாதை முள்ளாகத் தெரியாது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com