இனிக்காத சர்க்கரை
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய். இந்தியாவில் அதிகம் பரவியிருக்கும் ஒரு நோய். அமெரிக்காவில் அதிகம் பரவி வரும் ஒரு நோய். உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிவரும் இந்த நோயை வராமல் தள்ளிப் போடலாம்; வந்தால் கட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் குணப்படுத்துவது கடினம்.

நோயின் வகைகள்

முதல்வகை: இன்சுலின் அறவே இல்லாதது. காரணம், சின்னக் குழந்தைகள் அல்லது பதின்ம வயதினரைக் குறிப்பாகத் தாக்குவது.

இரண்டாவது வகை: இன்சுலின் குறைவாக இருப்பதாலும், இருக்கும் இன்சுலினைச் சரியாக உபயோகிக்க முடியாத காரணத்தால் ஏற்படுவது. இது பெரும்பாலும் முப்பது வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்குவது.

இந்த கட்டுரையில் இரண்டாவது வகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

நோயின் மூல காரணம்

நமது இரைப்பைக்குப் பின்னால் இருக்கும் உறுப்புகளில் ஒன்று கணையம் (pancreas). இது ஒரு இயக்குநீர் (hormone) சுரப்பி. கணையத்திலிருந்து உற்பத்தியாகும் முக்கிய இயக்குநீர் இன்சுலின். இரத்தத்தில் சர்க்கரையைச் சரியான அளவில் வைப்பதில் இன்சுலின் முக்கியப் பங்கு வகிக்கிறது. உண்ணும் உணவில் மாவுச் சத்து அதிகம் இருக்குமேயானால் இரத்தத் தில் சர்க்கரையின் அளவு கூடுகிறது. நமது உடல் இன்சுலினை அதிகமாக உற்பத்தி செய்து உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

கணையம் குறைவான அளவு இன்சுலினைச் சுரப்பது நீரிழிவு நோய் வருவதற்கான மூல காரணம். உடலில் அதிகக் கொழுப்புச்சத்து இருக்குமேயானால் இந்த இன்சுலினைச் சரியாக உபயோகிக்க முடிவதில்லை. இதனால் பணமிருந்தும் பஞ்சம் என்ற நிலை ஏற்படுகிறது. இதை இன்சுலின் தடை (insulin resistance) என்று சொல்வார்கள். இதனாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் எடை அதிகம் இருப்பவர்களை இவ்வகைப் பிரச்சனை தாக்குகிறது.

நோயின் அறிகுறிகள்

உண்ணும் வேட்கை, நீர் வேட்கை, சிறுநீர் மிகப்பு போன்ற அறிகுறிகள் இருக்கலாம். பெரும்பாலோருக்கு நோயின் அறிகுறிகள் தெரிவதில்லை. வேறு ஏதும் காரணத்திற் காகச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனையின் போது நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

நோயின் ஆரம்பக் கட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் கட்டுப்படுத்துவது எளிது. 30 வயதுக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று தங்கள் இரத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக இத்தகைய குடும்ப வரலாறு உடையவர்களும், அதிக எடை உடையவர்களும் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126க்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் இருப்பதாக அர்த்தம். நூறுக்கு மேல் இருந்தாலே கவனமாய் இருப்பது அவசியம். இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மேற்கொண்டு பல பரிசோதனைகள் செய்யவேண்டும்.

அவை பின்வருமாறு:

1. சிறுநீரகச் செயல்பாட்டின் அளவுகள்

2. ஆண்டுக்கு ஒரு முறை கொழுப்புச் சத்தின் அளவுகள்

3. மூன்று மாதத்திற்கு ஒரு முறை Hb A1c எனப்படும் பரிசோதனை

4. ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீரகத்தில் microalbumin எனப்படும் நுண்புரதத்தின் அளவு

5. ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் விழித்திரைப் (retina) பரிசோதனை

இந்த பரிசோதனைகள் செய்வதின் மூலம் நோயின் தீவிரத்தை அறிய முடியும். நீரிழிவு நோய் உடையவர்கள் இரத்த அழுத்தத்தை 130/80க்குள் கட்டுப்படுத்த வேண்டும். உடலில் தீங்குசெய்யும் கொழுப்புச்சத்தின் (LDL cholesterol) அளவையும் 100-க்குக் கீழ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

குணப்படுத்தும் முறைகள்

1. உணவு மற்றும் வாழ்முறை மாற்றங்கள்

மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மிஞ்சிய உணவுகளைக் குறைக்க வேண்டும். முக்கியமாக அரிசிச் சோற்றை குறைத்து, காய்கறிகளை அதிகம் உண்ணலாம். இனிப்புப் பண்டங்களை அறவே தவிர்க்க வேண்டும். 1800-2000 கலோரிகளே ஒரு நாளைக்கு உண்ண வேண்டும். மேலும் விவரங்களை www.ada.org, www.medindia.net, www.diabetes.india.com போன்ற வலை தளங்களில் காணலாம்.

2. புகைபிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.

3. வாரத்தில் மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

4. இன்சுலினை அதிகப்படுத்த மாத்திரைகள் உள்ளன. மேலும் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்தவைக்க மாத்திரைகள் உள்ளன. அதையும் மீறி அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு இன்சுலின் ஊசிமருந்து தேவைப்படலாம். இதில் எந்த முறை தகுந்ததென்று நோயின் தீவிரத்திற்கேற்ப மருத்துவர் முடிவு செய்வார்.

கணைய மாற்று அறுவை சிகிச்சை பெரும்பாலும் முதல் வகை நீரிழிவு நோய் உடையவருக்கே பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்க்கு ஒரு முறையாவது தங்களின் இரத்தத்தை வீட்டிலேயே glucometer மூலம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகவோ மிகமிகக் குறைவாகவோ இருப்பதைத் தவிர்க்க முடியும். மேற்கூறிய இரண்டு நிலையிலும், மயக்கம் ஏற்படலாம். சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருந்தால் வியர்வை பெருகி, படபடப்பு ஏற்படும். இந்தக் காரணங்களுக்கு உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

நோய் முற்றினால்...

1. கண் பார்வை இழக்க நேரிடலாம்.

2. சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயலிசிஸ் (dialysis) தேவைப்படலாம்.

3. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படலாம்.

4. கை, கால் நரம்பு களில் இயக்கத் தடை ஏற்பட்டு மரத்துப் போகலாம் (neuropathy).

5. கால்களின் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஆறாத புண்ணினால் (gangrene) கால்களையே அகற்ற நேரிடலாம்.

தற்போதைய அறிவியல் சான்று களின்படி நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதால் மேற்கூறிய கோளாறுகளைத் தடுக்க இயலும்.

நோய்த்தடுப்பு முறைகள்

அழகும், அறிவும், பண்பாடும் பரிமாறப்படுவதுடன் நோய் வருவதற்கான மரபணு வையும் பெற்றவர்களிடம் இருந்துதான் அடைகிறோம். இதனால் நோயை முற்றிலும் தவிர்க்க இயலுவதில்லை. என்ற போதும் சரியான உணவுப் பழக்க வழக்கங்களினாலும், நல்ல உடற்பயிற்சியின் மூலமும் நோய் வருவதைத் தள்ளிப்போடமுடியும். மேலும் உணவுக் கட்டுப்பாட்டுடன் மருந்து களைத் தவறாது உண்டு, உடற்பயிற்சி செய்தால் நோயின் தீவிரத்தைக் கண்டிப்பாகக் குறைக்க முடியும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com